சிங்கம் கர்ஜித்துக் கேட்டிருக்கிறீர்களா? அந்தக் கர்ஜனை ஒலிக்குக் காடு அதிரும், விலங்குகள் பதுங்கிப் போகும். திருவனந்தபுரம் விலங்குக் காட்சியகத்துக்குப் போயிருந்தபோது, சிங்கம் கர்ஜித்ததைக் கேட்டேன். அது திறந்தவெளி விலங்குக் காட்சியகமாக இருந்ததால், ஒரு புதருக்குப் பின்னேயிருந்து வெளியே வந்து சிங்கம் கர்ஜித்ததைப் பார்த்தபோது, சிலிர்ப்பாகத்தான் இருந்தது.
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள ‘ஒரு குட்டிச் சிங்கம் கர்ஜிக்கக் கற்றது’ என்ற புத்தகம் சிங்கம் கர்ஜிப்பதைப் பற்றிய கதைதான். ஒரு குட்டிச் சிங்கத்துக்குக் கர்ஜிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறது, அதன் அப்பா சிங்கம். அதற்காக அது ஆசிரியர்கள் பலரை நியமிக்கிறது. ஆனால், எந்த ஆசிரியராலும் அந்தக் குட்டிக்குச் சரியாகக் கர்ஜிக்கக் கற்றுத்தர முடியவில்லை. ஒவ்வொரு ஆசிரியரும் அதற்குக் கர்ஜிக்கக் கற்றுத் தருவதைப் படிக்கும்போது, சிரிப்பு முட்டுகிறது. வேறு வழியில்லாமல் அந்த அப்பா சிங்கமே கற்றுத் தர முயற்சிக்கிறது. கடைசியில் எப்படித்தான் குட்டிச் சிங்கம் கர்ஜிக்கக் கற்றது என்பதைப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
அந்த அளவுக்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும், இருவாச்சி என்ற வித்தியாசமான பறவை பற்றிய மற்றொரு கதை ‘பறக்கக் கற்றது இருவாச்சிக் குஞ்சு’, இதுவும் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு. இருவாச்சி என்பது நமது காடுகளில் வாழும் பறவை, ஆங்கிலத்தில் Hornbill. இது கூடு கட்டி, குஞ்சு பொரிக்கும் முறை வித்தியாசமானது. அப்படிப் பிறந்த ஒரு இருவாச்சிக் குஞ்சு பறப்பதற்குக் கஷ்டப்படுகிறது. ஆனால், அதன் அப்பாவும் அம்மாவும் கவலைப்படவில்லை. கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து, அது எப்படிப் பறக்கக் கற்றுக்கொள்கிறது என்பதைப் பார்க்கிறார்கள்.
அது பறந்தது மட்டுமில்லாமல், மற்றொரு விஷயத்தையும் செய்து அவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.
இந்த இரண்டு புத்தகங்களும் உயிரினங்கள் பற்றிச் சுவையாகவும் எளிமையாகப் புரியும்படியும் சொல்கின்றன. வண்ணப் படங்கள் நிறைந்திருப்பது அழகாக இருக்கிறது.
ஒரு குட்டிச் சிங்கம் கர்ஜிக்கக் கற்றது?,
இந்து ராணா
பறக்கக் கற்றது இருவாச்சிக் குஞ்சு,
திலீப் குமார் பரூவா
தொடர்புக்கு: நேஷனல் புக் டிரஸ்ட்,
(என்.பி.டி.), பள்ளி கல்வித் துறை வளாகம்
(டி.பி.ஐ.), நுங்கம்பாக்கம், சென்னை - 600 006