மாயா பஜார்

அசைந்து வருகுது ஆனை

செய்திப்பிரிவு

ஆனை ஒன்று வருகுது

அசைந்து அசைந்து வருகுது

பானை போன்ற வயிறுமே

பார்க்க அழகாய் இருக்குது!

தும்பிக் கையை ஆட்டுது

சொன்ன சொல்லைக் கேட்குது

தம்பிப் பாப்பா அனைவரின்

தலையைத் தொட்டு வாழ்த்துது!

பாகன் சொல்லைக் கேட்குது

பணிந்து அன்பாய் நடக்குது

தாகம் தீரத் தண்ணீரைத்

துதிக்கை யாலே உறிஞ்சுது!

விசிறி போன்ற காதினை

வீசிக் கொண்டு நிற்குது!

பசித்தால் உணவு கேட்குது

பழத்தைக் கொடுத்தால் தின்னுது!

உருவில் பெரிய ஆனைக்கு

உலக்கை போன்ற காலுதான்

தெருவில் அதுவும் வந்தாலே

திரளும் மக்கள் கூட்டந்தான்!

காட்டில் தனது உறவுடன்

கூடி வாழ்ந்த யானையைக்

கூட்டி வந்து நாமிங்கே

கொடுமை செய்யக் கூடாதே!

- கடலூர் நா. ராதாகிருட்டிணன்

SCROLL FOR NEXT