மேகங்களுக்கிடையே பறந்து கொண்டிருக்கும் விமானங்கள் விபத்தாகி, உடைந்து நொறுங்கி, விழுகிற சோகமான சம்பவங்களை அடிக்கடி பார்க்கிறோம் அல்லவா? இது போலவே கப்பல்களும் விபத்துகளைச் சந்திக்கின்றன. இப்படி உடைந்து கடலில் நொறுங்கிப் போகிற கப்பல்களைத் தேடும் பல வீரர்கள் ஈடுபடுவதையும், விழுந்துபோன விமானம் அல்லது கப்பல் பாகத்தைக் கண்டெடுப்பதையும்கூடச் செய்திகளாகப் பார்க்கிறோம்.
கப்பலில் உடைந்துபோன பாகங்கள் கடல் மேல் மிதக்கத்தானே வேண்டும். ஈஸியாகத் தேடிவிடலாமே! ஏன் கப்பலைக் கண்டுபிடிக்க ரொம்ப நாட்கள் எடுத்துக்கொள்கிறார்கள்? இல்லை அப்படி மிதக்க வாய்ப்பில்லை. கப்பலின் பாகங்கள் உறுதியான உலோகங்களால் செய்யப்படுவதால் அவை கடலில் மூழ்கிவிடும். அதற்கும் சாத்தியமில்லை. காற்றறைகள் நிரம்பிய கப்பலின் பகுதிகள் எடை குறைந்து இருப்பதால் முழுவதுமாக மூழ்காது. கடலின் நடுப்பகுதியில் மிதந்துகொண்டேயிருக்கும்.
ஏன், உடைந்த கப்பல்கள் முழுமையாக மூழ்குவதுமில்லை, முழுமையாக மிதப்பதுமில்லை? இங்குதான் அறிவியலின் அடுத்த விளையாட்டு ஆரம்பமாகிறது.
கடலில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தமும் அதிகரிக்கிறது. 10 மீட்டர் ஆழத்தில் ஒரு பொருள் கடல் நீரில் மூழ்கியிருந்தால் அதன் மீது ஒரு கிலோ கிராம் எடை கூடுதலாகச் செலுத்தப்படுகிறது.
கடல் நீரில் நீச்சலடிக்கும் ஒரு வீரர் 50 கிலோ எடை கொண்டவராக இருந்தால், 20 மீட்டர் ஆழத்தில் அவர் மூழ்கும்போது அவருடைய எடை 60 கிலோவாக மாறிவிடும். இதற்குக் காரணம் கடல் நீரின் அழுத்தம்தான்.
ஆழம் அதிகரிக்க அதிகரிக்க கடல் நீரின் அழுத்தம் வெவ்வேறு விகிதங்களில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுபோல நீரில் உள்ள பொருள்களும் மிக அதிகமான அழுத்தத்துக்கு உள்ளாகின்றன. ஓர் உதாரணம் பாருங்கள்.
காபி குடிக்கிற கண்ணாடி டம்ளரைக் கடலில் ஐந்து கிலோ மீட்டர் ஆழத்துக்கு எடுத்துச் சென்றால், அது உடைந்து நொறுங்கிவிடும். கடலின் அழுத்தம் அப்படி. தண்ணீரில் ஈர்ப்பு விசை அதிகரித்து, மூலக்கூறுகளின் தீவிர அழுத்தம் காரணமாகத் தண்ணீர் மிக அதிக அழுத்தம் உள்ளதாக மாறிவிடுகிறது.
இந்த தண்ணீரின் அழுத்தம் என்பது சாதாரண விஷயம் இல்லை. இவ்வாறு தண்ணீர் அழுத்தப்பட்டு நிற்பதால்தான் உலகம் பாதுகாப்பாக இருக்கிறது. ஒரு வேளை தண்ணீர் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு முழு கன அளவை அடைந்தால், கடல் நீர் மட்டம் உலக அளவில் பல மீட்டர் உயர்ந்துவிடும். பல லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலப்பரப்பு நீரில் மூழ்கிவிடும்.
தண்ணீரின் இவ்வளவு அழுத்தத்தையும் மீறி இரும்பு மட்டும் எப்படி மூழ்கிறது? தண்ணீரைவிட அழுத்தமாக இரும்பு இருக்கிறது. ஒரு வேளை தண்ணீரில் இப்போது இருப்பதைப்போல, எட்டு மடங்கு அடர்த்தியை அதிகரிக்கச் செய்ய முடியுமானால் தண்ணீர் மீது இரும்பை மிதக்க விட முடியும். ஆனால், அது சாத்தியமில்லை. வலுக்கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று முயற்சித்தால்கூட 100 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட ஆழத்தில்தான் அது சாத்தியம்.
அந்த வகையில் பார்த்தால், உடைந்த கப்பல்களின் உதிரி பாகங்கள் நீருக்கு அடியில்தான் மூழ்கிக் கிடக்குமே தவிர, அவை எங்கோ ஒரு பகுதியில் மிதந்துகொண்டிருக்க வாய்ப்பில்லைதானே! ஆனால், உடைந்து போன பாகங்கள் கடலின் பாதி ஆழத்தில் மிதக்கின்றனவே, அது எப்படி?
இரண்டு காரணங்கள் அல்லது நிபந்தனைகளின் அடிப்படையில் இவை மிதக்கின்றன.
முதல் காரணம், கடலின் ஆழங்களில் அழுத்தம் அதிகரிக்கும்போது அங்கு அதே ஆழத்தில் மிதக்கும் பொருள்களின் அழுத்தமும் அதிகரிக்கிறது. எனவே தண்ணீருக்கும், பொருளுக்கும் அழுத்த மாறுபாடு ஏற்படுவதில்லை. எனவே பொருள் தொடர்ந்து மிதக்கிறது.
இரண்டாம் காரணம், கப்பல்களின் காற்றறைகளில் உள்ள காற்று வெளியே போவதற்கு வழி இல்லாமல் போகும்போது குறைந்த ஆழம் வரை மட்டுமே மூழ்கி அதே ஆழத்தில் தொடர்ந்து மிதக்கும்.
கடலில் ஆழமும் அழுத்தமும் செலுத்துகிற விசைகளையும், தடைகளையும் தாண்டிதான் ஜீவராசிகள் வாழ்கின்றன. கப்பல்கள் தொடர்ந்து பயணம் செய்கின்றன.
(காரணங்களை அலசுவோம்)
கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com