ஜூன் 21: சர்வதேச யோகா தினம்
‘‘கனவு காணுங்கள், கனவு காணுங்கள். இந்தக் கனவுகளை ஒருநாள் சிந்தனையாக்குங்கள். பிறகு அதற்குச் செயல்வடிவம் கொடுங்கள். வாழ்வில் நீ சாதிக்கலாம்’’ என்றார் உங்களுக்கெல்லாம் ரொம்பப் பிடித்த மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். நம் மனதுக்கும் செயலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனதில் மலரும் எண்ண ஓட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டுமானால், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமல்லவா? ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். உடல், மனம் என்ற இரண்டையும் தூய்மையாக்கி, வலிமையாக்கி, நம் முன்னேற்றத்துக்குத் தூண்டுகோலாக இருப்பதுதான் யோகா.
வேதங்களிலேயே யோகா பற்றிய குறிப்புகள் காணப்படுவது, இதன் பழைமைக்குச் சான்று. அந்தக் காலத்திலிருந்தே பயிற்சி செய்யப்பட்டுவந்த கலை இது. இந்தியா எடுத்த முயற்சியின் காரணமாக, ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது ஐ.நா. சபை. இதற்காகக் கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதன்படி 2015-ம் ஆண்டிலிருந்து ஜூன் 21 சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இன்றைய நாள் 3-வது சர்வதேச யோகா தினம்.
யோகா பயில்வதால் என்ன பலன்? உடல் ஆரோக்கியமாகிறது. உடல் ஆற்றல் அதிகரிக்கிறது. கை, கால்கள், மூட்டுகள் வலுப்பெறுகின்றன. உறக்கம், சுவாசம், செரிமானச் செயல்கள் சீராகின்றன. பயம் குறைந்து நம்பிக்கை அதிகரிக்கிறது. உடலுக்குப் போதிய ஓய்வு கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மனம் அமைதியடைகிறது. விழிப்புணர்வு அதிகரிக்கிறது. படிப்பில் கவனம் கூடுகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. செய்யும் செயலில் முழுக் கவனத்தோடு அதிக ஈடுபாடு காட்ட முடிகிறது. குறிக்கோள் தெளிவாவதால், அதை நோக்கிய பயணம் எளிதாகிறது.
இது மட்டுமா? உள்ளம் தெளிவடைகிறது. ஆரோக்கியமான போட்டி மனநிலை வருகிறது. எதையும் நேர்மறையாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் பிறக்கிறது. பள்ளி மட்டுமல்லாது, கல்லூரி மாணவர்களுக்கும் இதுதான் இன்றைய முக்கியத் தேவையாக இருக்கிறது. உடலோடு, மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் கல்வி என்பது ஒரு சுமையாக இல்லாமல், படிக்கும் காலத்தை இனிமையாக மாற்றிக்கொள்ள முடியும்.
உலகுக்கு இந்தியா எத்தனையோ கொடைகளை வழங்கியுள்ளது. அதில் ஒன்று ‘யோகா’. யோகாவின் சிறப்பை வெளி நாட்டவர்களும் உணர்ந்ததால்தான், 2014-ல் சர்வதேச யோகா தினம் பிறந்தது. அதற்காக 175 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்தன. நம் இந்தியத் தோட்டத்தில் மலர்ந்த ‘யோகா’வின் மகத்துவத்தை நாமும் உணர்வோம், முறையாகப் பின்பற்றி வாழ்வில் உயர்வோம்!