மாயா பஜார்

டிங்குவிடம் கேளுங்கள்: தாவரங்கள் எப்போது பூக்க ஆரம்பித்தன?

செய்திப்பிரிவு

மனிதர்களின் எத்தனையோ கற்பனைகள் நிஜமாகியிருக்கின்றன. உன்னை அதிகம் வியக்கவைத்த கற்பனையாளர் யார் டிங்கு?

– பி.சுரேந்தர், தூத்துக்குடி.

விமானம், விண்வெளி ஓடம், நீர்மூழ்கிக் கப்பல் போன்றவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, தன்னுடைய நாவல்களில் இவற்றை எல்லாம் எழுதியிருக்கிறார் ஜுல்ஸ் வெர்ன். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர், அறிவியல் புனைகதைகளின் தந்தை என்று கொண்டாடப்படுகிறார். இவரது நாவல்கள் வெளிவந்து பல ஆண்டுகளுக்குப் பிறகே விமானப் பயணமும் விண்வெளிப் பயணமும் நீர்மூழ்கிக் கப்பல் பயணமும் சாத்தியமாயின. எவ்வளவு அழகான, அர்த்தமுள்ள கற்பனை இல்லையா சுரேந்தர்!

எனக்கு மறதி அதிகமாக இருக்கிறது. படிப்பதை மறந்துவிடுகிறேன். எதையாவது பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றாலும் மறந்துவிடுகிறது. என் மறதிக்குத் தீர்வு என்ன டிங்கு?

– ஆர். அமுதா, அரசினர் மேல்நிலைப் பள்ளி, கரூர்.

முதலில் உங்களுக்கு மறதி இருக்கிறது என்ற எண்ணத்தை மறந்துவிடுங்கள். பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்துகொண்டு படியுங்கள். படித்ததைச் சிரமம் பார்க்காமல் எழுதிப் பாருங்கள். அதற்குப் பிறகு உங்களுக்கு எப்போதுமே மறக்காது. பள்ளிக்கு ஏதாவது கொண்டுசெல்ல வேண்டும் என்றால், அந்த விஷயத்தை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு நோட்டில் எழுதி வைத்துவிடுங்கள். வீட்டுக்குச் சென்றவுடன் அந்த நோட்டைப் பார்த்து, எடுத்துச் செல்ல வேண்டியவற்றைப் பையில் வைத்துவிடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்யும்போது மறதி வராது. முயன்று பாருங்கள் அமுதா.

பரிணாம வளர்ச்சியில் தாவரங்கள் தோன்றியபோது அவை பூக்கவில்லை என்று என் நண்பன் சொல்கிறான். உண்மையா டிங்கு?

– வி.ரஞ்சன், செஞ்சி.

உங்கள் நண்பன் சொல்வது உண்மைதான் ரஞ்சன். பரிணாம வளர்ச்சியில் 47.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் தாவரங்கள் தோன்றின. ஆனால், 13 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் தாவரங்கள் பூக்க ஆரம்பித்தன. நீர்நில வாழ்விகள், விலங்குகள், பறவைகள் எல்லாம் உருவான பிறகு தான் தாவரங்கள் பூக்க ஆரம்பித்தன.

SCROLL FOR NEXT