மழைக்காடு என்பது உலகம் முழுவதும் காணப்படும் ஒரு வகைக் காடு. இந்தப் பெயரிலிருந்தே அந்தக் காடுகளில் மழை அதிகமாகப் பொழிவதால், இக்காடுகள் மழைக்காடுகள் என்று அழைக்கப்படுவதைத் தெரிந்துகொள்ளலாம். இவை பெரும்பாலும் நிலநடுக்கோட்டுக்கு அருகேதான் உள்ளன.
இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கப் பகுதிகளில் இந்தக் காடுகள் காணப்படுகின்றன. நமது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ளக் காடுகள், மழைக்காடுகள்தான். அதேநேரம் ஒவ்வொரு மழைக்காடும் ஒன்றிலிருந்து மற்றொன்று சற்றே வேறுபட்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஒவ்வொரு கண்டத்திலும் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் வித்தியாசமாக இருப்பதுதான்.
மழைக்காடுகள் உலகில் மிகவும் முக்கிய மானவை. ஏனென்றால், மழைக்காடுகள்தான் மிக அதிகமான இயற்கை வளங்களை உற்பத்தி செய்கின்றன. ஆயிரக்கணக்கான தாவரங்கள், உயிரினங்களுக்கு அவை வீடாகத் திகழ்கின்றன. அத்துடன் நம்மைப் போன்ற மனிதர்களுக்கு உணவையும் மருந்தையும் தருகின்றன.
வெப்பமண்டலப் பகுதிகளில் அமைந்திருக்கும் மழைக்காடுகளில் வெப்பமும் தண்ணீரும் அதிகமாக இருக்கக்கூடும். இக்காடுகள் நிலநடுக்கோட்டுப் பகுதிக்கு அருகில் வெப்பமாகவும், மழை பெய்யும்போது ஈரமாகவும் காணப்படும். தாவரங்கள் வளர அவசியமான சூரிய வெப்பமும் தண்ணீரும் தாராளமாக இருப்பதால், தாவரங்கள் செழித்து வளர இக்காடுகள் வசதியாக இருக்கின்றன.
தொந்தரவு செய்யப்படாத மழைக்காடுகளில் உள்ள மரங்கள் மிக உயரமாக இருக்கும். சில வகை மரங்கள் 60 மீட்டர் உயரம் வரை (200 அடி) வளரக்கூடும். அம்மாடி! மழைக்காட்டு மரக் கிளைகளுக்குச் சென்றால், அங்கு வித்தியாசமான சூழ்நிலையைப் பார்க்கலாம். அப்பகுதிகள் ஈரம் குறைவாகவும், வெப்பம் அதிகமில்லாமலும் இருக்கும். இதன்காரணமாக உயிரினங்கள் வாழ்வதற்கு, அங்கே பல்வேறு விதமான சூழ்நிலைகள் உருவாகின்றன.
மரக்கவிகை அல்லது மரவிதானம் (canopy) எனப்படும் இப்பகுதி, பழம் உண்ணும் உயிரினங்களான குரங்குகள், வௌவால்கள், பூச்சிகள்,பறவைகளுக்கு நன்கு உணவு தரக்கூடியவை. அதேநேரம் தவளைகள், பாம்புகள், யானைகள் போன்றவை காட்டின் தரைப்பகுதியையே நம்பியே வாழ்கின்றன.
ஆனால், இப்போது உலகம் முழுவதும் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன. மழைக்காடுகளை நாம் காப்பாற்றவில்லை என்றால் அங்குள்ள தாவரங்கள், உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிடும். அது மட்டுமில்லாமல் மழைப்பொழிவு, நதிகளில் தண்ணீர் வருவது உள்ளிட்ட இயற்கை வளங்களும் நமக்குக் கிடைக்காமல் போகும்.