# பாடநூல்கள் பண்டைய கிரேக்க நாகரிகத்திலேயே இருந்திருக்கின்றன. 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் கிரேக்க எழுத்துகள் கண்டுபிடிக்கப்படுவதற்குமுன் அறிவு சார்ந்த தகவல்கள், கதைகள், ஹோமரின் காவியங்கள் போன்றவை வாய்மொழியாகச் சொல்லப்பட்டன.
கேட்பவர்கள் அதை மனனம் செய்து நினைவில் வைத்துக்கொண்டு, அடுத்தவர்களுக்குக் கடத்தினார்கள். இது குறித்துத் தத்துவ மேதை சாக்ரடீஸும் பிளாட்டோவும்கூடக் கூறியிருக்கிறார்கள்.
உலகின் பல தொடக்ககால நாகரிகங்களில் இதுவே அறிவைக் கடத்தும் முதன்மை ஊடகமாக இருந்தது. எழுதும்முறை வந்த பிறகே மிகப் பெரிய அளவு பிரதியை முழுமையாக நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லாமல் போனது.
# பொ.ஆ. 15-ம் நூற்றாண்டில் ஜெர்மானிய உலோகத் தொழில் நிபுணர் ஜொஹான்னஸ் கூட்டன்பர்க் நவீன அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
அதன் பிறகே நவீனகாலப் பாடநூல்கள் பரவலாகின. ஏலியஸ் டொனாடஸ் என்பவர் எழுதிய லத்தீன் இலக்கண நூலான ‘அர்ஸ் மைனர்’ என்ற நூலை கூட்டன்பர்க் பதிப்பித்திருக்கிறார். அச்சு இயந்திரம் வந்த பிறகு பாடநூல்கள் பரவலாகப் பலருக்கும் கிடைக்கத் தொடங்கின.
# ஜான் அமோஸ் காமெனியஸ் எழுதிய ‘ஆர்பிஸ் பிக்டஸ்’ அல்லது ‘ஆர்பிஸ் சென்சாலியம் பிக்டஸ்’ (ஓவியக் காட்சிவழி உலகம்) என்ற பாடநூல் 1658-ல் லத்தீன், ஜெர்மன் மொழிகளில் வெளியிடப்பட்டது. அதுவே ஓவியங்களுடன் வெளியான முதல் பாடநூல். ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளுக்கு இது பாடநூலாகத் திகழ்ந்தது.
# செக்கோஸ்லாவாகியா நாட்டு தத்துவச் சிந்தனையாளர், கல்வியாளர், மறையாளர், நவீனக் கல்வியின் தந்தை எனப் போற்றப்படுபவர் ஜான் அமோஸ் காமெனியஸ். உலகளாவிய கல்வியின் தொடக்கக்காலச் செயற்பாட்டாளராக அறியப்படும் அவர், பள்ளிகள் செயல்படும் முறை குறித்து ‘டிடாக்டிகா மாக்னா’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதினார். 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாட்டு அரசுகளுக்குக் கல்வி குறித்த ஆலோசனை வழங்குபவராகவும் பள்ளிகளை நடத்துபவராகவும் அவர் விளங்கினார்.
# அமெரிக்காவில் ‘நியூ இங்கிலாந்து பிரைமர்’, ‘மெக்கஃபி ரீடர்ஸ்’ ஆகிய பாடநூல்கள் 18, 19-ம் நூற்றாண்டில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. 19-ம் நூற்றாண்டி லிருந்து மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத்தர பாடநூல்கள் முக்கியத் தேவையாக மாறின.
# சட்டத்துறை பற்றிப் படிக்கும் மாணவர்கள் ‘கேஸ்புக்’ என்ற பாடநூலையும் சேர்த்தே படிக்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட நாட்டில் நடைபெற்ற பல்வேறு வழக்குகள் குறித்த விவரம் இடம்பெற்றிருக்கும்.
ஒரு வழக்கில் எந்தெந்த சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டன, எப்படிப் பின்பற்றப்பட்டன, வழக்கின் பின்னணி போன்றவற்றை இந்த நூல்கள் வழி அறிந்துகொள்ளலாம்.
# அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார்ட்டூன் கதாபாத்திரம் பில் வாட்டர்சன் உருவாக்கிய ‘கால்வின் அண்ட் ஹாப்ஸ்’. 1993-ல் இந்த கார்ட்டூன் கதாபாத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு ‘டீச்சிங் வித் கால்வின் அண்ட் ஹாப்ஸ்’ என்ற சித்திரக்கதை பாடநூலும் வெளியாகியுள்ளது. தொடக்க நிலை, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மொழியைக் கற்பிப்பதற்கான நூல் இது.
# பள்ளிக்கல்வி மாணவர்களுக்கான பாடநூல்கள், உயர்கல்விக்கான பாடநூல்களை வெளியிட 1961-ல் ‘தமிழ் வெளியீடுகள் அமைப்பு’ தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் 1980 வரை உயர்கல்வி தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு ‘தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம்’ என்ற பெயரில் தற்போது இயங்கி வருகிறது. இந்த நிறுவனமே தமிழக மாணவர்களுக்குப் பாடநூல்களைத் தயாரித்து வழங்கி வருகிறது.
# 2010, 2011-ம் ஆண்டுகள் முதல் தமிழகத்தில் 10-ம் வகுப்புவரை அனைத்துக் கல்விமுறை சார்ந்த மாணவர்களும் சமச்சீர் கல்வித்திட்ட பாடநூல்கள், அதாவது அரசு வழங்கும் பாடநூல்கள் வழியாகவே படித்து வருகிறார்கள்.
தற்போது, தமிழ்நாடு பாடநூல் நிறுவனப் பாடநூல்களை இணையதளம் மூலம் இலவசமாகவும் படித்துப் பயன்பெறலாம்: http://www.tnscert.org/tnscert/ebooks/. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் 21-ம் நூற்றாண்டில் பாடநூல்களின் வடிவம் மிகப் பெரிய அளவில் மேம்பட்டுவிட்டது. அச்சுப் பாடநூல்களுக்குப் பதிலாக இணையம் வழியாக படிக்கக்கூடியவையாகவும் மின் நூல்களும் பரவலாகத் தொடங்கியுள்ளன.
இணையம் வழி கற்பித்தல், வீடியோ பாடங்கள் போன்றவையும் பெருகிவருகின்றன. அதேபோல விற்பனைக்கு அல்லாமல், இலவசமாக, அனைவரும் பயன்படுத்தக் கூடிய காப்புரிமை அற்ற பாடநூல்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.