மாயா பஜார்

யோகாவை சுவாசிக்கும் சிறுவன்

எல்.ரேணுகா தேவி

உங்களுடைய ஊரில் யோகாசனப் போட்டி நடைபெறுகிறதா? அப்படியென்றால் எட்டு வயது நிரம்பிய ஜெய் அபிநந் அங்கு இருக்க வாய்ப்புண்டு. உள்ளூர் மட்டுமில்லை எங்கு யோகாசனப் போட்டி நடந்தாலும் அங்கு ஆஜர் ஆகிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் இந்தக் குட்டிச் சாதனையாளர். யோகாசனத்தில் சர்வதேச அளவில் பல சாதனைகள் புரிந்துள்ள இவரை ‘யோகா லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என அழைக்கிறார்கள்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன்-பத்மா ரூபா ஆகியோரின் மகன்தான் ஜெய் அபிநந். குழந்தைப் பருவத்தில் சுட்டித்தனமாக இருந்த அபிநந்தை யோகாசன வகுப்பில் சேர்த்துள்ளார் அவரது அம்மா. அவரது மாஸ்டர் செந்திலிடம் யோகாசனம் கற்றுக் கொண்ட அபிநந், மாநில அளவில் நடைபெற்ற 4 வயதுக்குட்பட்ட பிரிவில் யோகாசன போட்டியில் முதல் பதக்கம் பெற்றார்.

இதுவரை மாநில அளவிலும் தேசிய அளவிலும் 15-க்கும் மேற்பட்ட விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ள அபிநந், அண்மையில் அந்தமான் நிகோபாரில் நடைபெற்ற 8 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றுத் திரும்பியிருக்கிறார். தேசிய அளவில் நடைபெற்ற தனிநபருக்கான போட்டி என பல பிரிவுகளிலும் பதக்கங்களை அள்ளிக்கொண்டு வந்திருக்கிறார் இந்த யோகா சூறாவளி.

யோகாசனம் மட்டுமல்ல, அம்பு எய்தல், ஸ்கேட்டிங் போன்ற பிற விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு பரிசுகள் வென்றிருக்கிறார் அபிநந். நாபிபீடாசனம், திருவிக்கரமாசனம், விருச்சிகாசனம், ஊர்த்துவ நாபிபீடாசனம் போன்ற மிகக் கடினமான யோகாசனங்களை இந்த வயதிலேயே செய்யும் அபிநந்துக்கு 600க்கும் மேற்பட்ட யோகாசனங்கள் அத்துபடி.

வரும் டிசம்பரில் தாய்லாந்தில் நடைபெற உள்ள 8 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்க ஆர்வ முடன் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இவர். இதிலும் அபிநந் வெற்றி பெற வாழ்த்துவோமே!

SCROLL FOR NEXT