மாயா பஜார்

உடல் எனும் இயந்திரம் 13: செரிமானத்தின் தொடக்க விழா!

கு.கணேசன்

உணவின் முதல் செரிமானம் வாய்க்குழியில் தொடங்குகிறது. அதற்கு உமிழ்நீர் (Saliva) உதவுகிறது. உமிழ்நீரைச் சுரப்பது உமிழ்நீர்ச் சுரப்பிகள். நமக்கு மூன்று ஜோடி உமிழ்நீர்ச் சுரப்பிகள் உள்ளன. செவிமுன் சுரப்பி, தாடை அடிச்சுரப்பி, நாக்கு அடிச்சுரப்பி. இவை ஒவ்வொன்றும் அமைப்பிலும் பணியிலும் தனித்தன்மை வாய்ந்தவை.

ஒவ்வொரு காதுக்குக் கீழாகவும் முன்புறமாகவும் கீழ்த்தாடையின் பின்புறமாகவும் மொத்தம் இரண்டு ‘செவிமுன் சுரப்பிகள்’ (Parotid glands) உள்ளன. இவைதான் உமிழ்நீர்ச் சுரப்பிகளில் மிகப் பெரியவை. தலா 25 கிராம் எடை கொண்டவை. ஆனாலும், இவை சுரக்கிற உமிழ்நீரின் அளவு 20 சதவீதம்தான்.

கீழ்த்தாடையின் இருபுறத்திலும் பக்கத்துக்கு ஒன்றாக இருப்பது, ‘தாடை அடிச்சுரப்பி’ (Sub mandibular gland). இதன் எடை 10 கிராம். இந்தச் சுரப்பிகள்தான் அதிக அளவில் உமிழ்நீரைச் சுரக்கின்றன. அதாவது, 70 சதவீதம்.

நாக்கின் அடிப்பகுதியில் இருப்பவை ‘நாக்கு அடிச்சுரப்பிகள்’ (Sub lingual glands). இவை மிகச் சிறிய உமிழ்நீர்ச் சுரப்பிகள். தலா 3 கிராம் எடை கொண்டவை. இவை சுரக்கிற உமிழ்நீரின் அளவு 5 சதவீதம் மட்டுமே. இந்த முதன்மை உமிழ்நீர்ச் சுரப்பிகளைத் தவிர, வாய்க்குள் கன்னம், அண்ணம், உதடு, நாக்கின் கீழ்ப்பகுதி ஆகியவற்றிலும் மிகச் சிறிய உமிழ்நீர்ச் சுரப்பிகள் 800 லிருந்து 1,000 வரை உள்ளன.

உமிழ்நீர்ச் சுரப்பிகள் பார்ப்பதற்கு ஒவ்வொன்றும் ஒரு திராட்சைக் குலைபோலிருக்கும். அவற்றில் குழிபோன்ற பகுதிகள் (Lobules) ஆயிரக்கணக்கில் இருக்கும். அசினார் செல்கள் சூழ்ந்திருக்கும். இவை தினமும் ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரை உமிழ்நீரைச் சுரக்கின்றன. உமிழ்நீர்க் குழாய்கள் உமிழ்நீரை வாய்க்குழிக்கு எடுத்துச் செல்கின்றன.

விலங்குகளுக்கு உமிழ்நீரின் அளவு அதிகம். தினமும் சுமாராக குதிரை 40 லிட்டர், பன்றி 15 லிட்டர், மாடு 110 முதல் 180 லிட்டர் வீதம் உமிழ்நீரைச் சுரக்கின்றன.

உமிழ்நீர் என்பது வாய்க்குள் எப்போதும் இருக்கும் நிறமற்ற அடர்த்தியான திரவம். இதில் 99.5 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. மீதியில் 0.2 சதவீதம் சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் போன்ற தாதுகள் அடங்கும்; 0.3 சதவீதம் மியூசின் எனும் சளி போன்ற பொருள், அமிலேஸ், லிப்பேஸ், லைசோசைம் ஆகிய நொதிகள், லேக்டோஃபெரின் எனும் நுண்மத்தடை பொருள், பற்களைப் பாதுகாக்கும் சில வகை புரதங்கள் ஆகியன அடங்கும்.

உமிழ்நீர் எப்படிச் சுரக்கிறது?

மூளையில் முகுளம் (Medulla), மூளைத் தண்டு (Brain stem), பெருமூளைப் புறணி (Cerebral cortex) எனும் பகுதிகள் உள்ளன. இவைதாம் உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றன. நாம் சாப்பிட நினைத்தவுடன், உணவைப் பார்த்த மாத்திரத்தில், வாசனை மூக்கைத் துளைத்தவுடன் அல்லது சாப்பிடும் நேரத்தில், நாக்கிலும் மூக்கிலும் உள்ள உணர்வு நரம்புகள் தூண்டப்படுகின்றன. இந்த சமிக்ஞைகள் உள்நோக்கு நரம்புகள் (Afferent nerves) வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. உடனே, மூளையானது வெளிநோக்கு நரம்புகள் (Efferent nerves) வழியாக உமிழ்நீர்ச் சுரப்பிகளுக்கு சமிக்ஞைகள் அனுப்பி உமிழ்நீரைச் சுரக்கச் செய்கிறது.

அதேநேரம், உணவு இல்லாதபோதும் நிமிடத்துக்கு 0.25 மி.லி. எனும் அளவில் உமிழ்நீர் வாய்க்குள் சுரந்துகொண்டுதான் இருக்கிறது. பொதுவாக, பகலில் உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கிறது; இரவில் குறைவாகச் சுரக்கிறது. இதயம் துடிப்பதைப்போலவே, உமிழ்நீர் சுரப்பதும் ஓர் அனிச்சைச் செயலே.

உணவுச் செரிமானம் எனும் ‘திருவிழா’வை வாய்க்குள் தொடங்கிவைப்பது உமிழ்நீர்தான். முதலில் நாம் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் கலந்து, அதைக் கரைக்கிறது. பிறகு, அது மெல்லப்படும்போது கவளமாக மாறுகிறது. அப்போது மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) உணவை அமிலேஸ் செரிக்கிறது; கொழுப்பு உணவை லிப்பேஸ் செரிக்கிறது. இந்த உணவுக் கவளம் இரைப்பைக்குச் செல்லும்போது, அங்கும் செரிமானம் ஆவது எளிதாகிவிடுகிறது. எனவேதான், சாப்பிடும்போது, ‘நன்றாக மென்று சாப்பிட வேண்டும்’ என்று சொல்கிறோம்.

உமிழ்நீருக்கு உணவைச் செரிப்பது மட்டுமல்லாமல், வாயை எப்போதும் ஈரமாக வைத்துக்கொள்வது, பேசுவதைச் சுலபமாக்குவது, பற்சிதைவைத் தடுப்பது எனப் பல பணிகள் உண்டு. உமிழ்நீரிலுள்ள மியூசின் ஒரு மசகுபோல் செயல்பட்டு நாம் மெல்வதையும் விழுங்குவதையும் எளிதாக்குகிறது. உடலில் நீர்ச்சத்து குறைந்து போவதை நமக்குத் தெரிவிப்பதும் உமிழ்நீர்தான். தாகத்தை ஏற்படுத்தித் தண்ணீர் அருந்தவைத்து உடலில் அயனிகளின் சமநிலையைத் தக்கவைத்துக்கொள்கிறது.

மேலும், இது பற்களையும் ஈறுகளையும் சுத்தப்படுத்துகிறது; நாக்கில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்கிறது. வாய் நாற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது. உமிழ்நீரிலுள்ள லைசோசைம் வாய்க்குள் நுழையும் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை அழிக்கிறது. பாக்டீரியா நுண்மங்களை லேக்டோஃபெரின் தடை செய்கிறது. உணவில் அமிலச்சத்து அதிகமென்றால், உடனே உமிழ்நீரிலுள்ள பைகார்பனேட் அயனிகள் அந்த அமிலத்தை நீர்த்துப் போகச் செய்கின்றன. இதன் பலனால், உணவுக்குழாய் புண்ணாவது தடுக்கப்படுகிறது.

பெரும்பாலான விலங்கினங்களின் உமிழ்நீரச் சுரப்பிகள் மனிதரைப் போலவேதான் காணப்படுகின்றன. பூச்சி இனங்களில் மட்டும் சில மாற்றங்கள் தெரிகின்றன. உதாரணமாக, பட்டுப்பூச்சிகள் பட்டு இழையைச் சுரக்கின்றன. சில பறவைகள் கூடு கட்டுவதற்குத் தேவையான பிசினைச் சுரக்கின்றன. டிரோசோபிலா பூச்சியின் உமிழ்நீர்ச் சுரப்பியில் பாலிட்டீன் குரோமோசோம் உள்ளது.

நாய்க்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லை. எனவே, உடல் வெப்பத்தைத் தணிக்க நாய்க்கு உமிழ்நீர்தான் உதவுகிறது. நாய்கள் நாக்கைத் தொங்கப்போடுவதற்கு இதுதான் காரணம்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

SCROLL FOR NEXT