லுட்விக்குக்குச் சிறு வயது முதலே தேவதைகளும் அற்புதங்களும் விசித்திரங்களும் விநோதங்களும் நிரம்பிய கதைகள் என்றால் கொள்ளைப் பிரியம். கோட்டைகளும் அரண்மனைகளும் மிகவும் பிடித்திருந்தன. அவர்கூட இளவரசர்தான். கம்பீரமும் பேரழகும் நிறைந்த ஒரு கோட்டையில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்.
அந்தக் கோட்டை இருந்த இடம் பவேரியா. அது இன்றைய ஜெர்மனியின் ஒரு மாநிலம். அன்றைக்குத் தனி ராஜ்ஜியம். அந்தக் கோட்டையின் பெயர் Schloss Hohenschwangau. அதைக் கட்டியவர் லுட்விக்கின் தந்தையான மன்னர் இரண்டாம் மேக்ஸிமிலியன்.
மன்னர் இறந்தபோது, லுட்விக்கின் வயது 18. படிப்புகூட முடியவில்லை. ஆனால், அரியணையில் அமர வைத்து விட்டார்கள். பவேரியாவின் மன்னராக இரண்டாம் லுட்விக்கின் ஆட்சி கி.பி. 1864-ல் ஆரம்பமானது. ஆட்சி, அரசியல், நிர்வாகம் என்று அந்த இளைஞரின் தலையில் ஏகப்பட்ட சுமைகள்.
லுட்விக் பதவியேற்ற இரண்டாவது ஆண்டிலேயே பிரஷ்யா, பவேரியாவைத் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தது. சுதந்தர ராஜ்ஜியம் என்ற நிலையிலிருந்து, பிரஷ்யாவுக்குக் கட்டுப்பட்டு ஆட்சி நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார் லுட்விக்.
அதற்குப் பிறகான அவரது ஆட்சிக் காலம் எல்லாம் பவேரியாவின் கஷ்டகாலம்தான். ஒரு தோல்வியடைந்த மன்னராகத்தான் லுட்விக் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறார். மனம் போன போக்கில் அவர் செய்த காரியங்களால் லுட்விக்கைப் பைத்தியக்கார மன்னர் என்றும் அழைக்கிறார்கள்.
இருந்தாலும் இன்றைக்குவரை அவர் பெருமையுடன் நினைக்கப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர் தன் காலத்தில் உருவாக்கிய கோட்டை போன்ற அரண்மனைகள்.
1867-ல் பிரான்ஸுக்குச் சென்ற லுட்விக், அங்கே தான் கண்ட கட்டிடங்களின், அரண்மனைகளின் அழகில் கிறங்கிப் போனார். பவேரியாவிலும் அது போன்ற கலை மிளிரும் அரண்மனைகளை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காகத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கினார்.
நியுஸெவான்ஸ்டெய்ன் (Neuschwanstein) கோட்டை. லுட்விக் தன் தந்தை கட்டிய கோட்டைக்கு அருகிலேயே உருவாக்கிய மிகப் பிரமாண்டமான கோட்டை. கட்டிடக்கலை வல்லுநர்கள் உருவாக்கித் தந்த கோட்டையின் மாதிரி வரைபடம் ஒவ்வொன்றையும் தானே கவனமாகப் பார்த்து, திருத்தங்கள் சொல்லி இறுதி செய்தார் லுட்விக். ஆம், அவரது கனவுக்கோட்டையை நிஜத்தில் உருவாக்கப் பாடுபட்டார்.
சிறிய மலை ஒன்றின் மீது 1869-ல் கோட்டை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. சில பகுதிகளின் வேலை பாக்கியிருந்தாலும் 1884-ல் மன்னர் லுட்விக், நியுஸெவான்ஸ்டெய்ன் கோட்டையில் குடிபுகுந்தார். ஏதோ பெரியதாகச் சாதித்த திருப்தி அவருக்குக் கிடைத்தது.
நியுஸெவான்ஸ்டெய்ன் அரண்மனை கட்டி முடிப்பதற்கு முன்பாகவே பவேரியாவின் இன்னொரு பகுதியில் லிண்டெர்ஹோஃப் (Linderhof) என்ற சிறிய அரண்மனையைக் கட்டி முடித்திருந்தார் லுட்விக். கண்ணாடிகள் நிரம்பிய ஒரு கூடம், இசைக்கூடம், சந்திப்புக் கூடம், உணவுக்கூடம், அலங்கார விளக்குகள், அதிசயக்கும் ஓவியங்கள், அசர வைக்கும் நீரூற்றுகள், அழகு மிளிரும் தோட்டங்கள் என்று லிண்டெர்ஹோஃப் அரண்மனையின் ஒவ்வோர் அங்குலத்திலும் கலைநயம். அரண்மனைக்குள் சிறு குளம் ஒன்றில் அன்னம் வடிவிலான தங்கப் படகில் மன்னர் லுட்விக் பயணம் செய்து மகிழ்ந்தார். அந்த இடத்தின் பெயர் வீனஸ் கிராட்டோ.
பிரான்ஸின் புகழ்பெற்ற வெர்ஸெய்ல்ஸ் அரண்மனையைப் பிரதியெடுத்ததுபோல, அதைவிடச் சிறிய அளவில் லுட்விக் பவேரியாவில் ஓர் அரண்மனையை டாம்பீகமாகக் கட்டினார். அதன் பெயர், Herrenchiemsee. இவை தவிரவும் வேறு சில கோட்டைகளையும் அரண்மனைகளையும் கட்டுவதற்கான பணிகளைத் தன் காலத்திலேயே தொடங்கி வைத்தார். அவை முற்றுப்பெறவில்லை.
இந்தக் கோட்டைக் கட்டுமானப் பணிகளால் பவேரிய மக்கள் பலருக்கும் தொடர் வேலை வாய்ப்புகள் கிடைத்தன. இவற்றைக் கட்ட ஆரம்பக் கட்டத்தில் லுட்விக் தனது செல்வத்தையே செலவு செய்தார். பின் பணத்துக்கான தேவை கட்டுக்கடங்காமல் போகவே, பிற தேசங்களிடமும், பிற ஐரோப்பிய அரசர்களிடமும் ஏகப்பட்ட கடன் வாங்கினார். கட்டுக்கடங்காத கடன் சுமை அவரைக் கடும் பிரச்சினைகளில் தள்ளி, மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியது. பைத்தியக்காரத்தனமான செயல்களில் ஈடுபட்டார். அவரது அமைச்சர்கள் லுட்விக்கு எதிராகத் திரண்டு, ‘ஆள்வதற்குத் தகுதியற்றவர்’ என்று அவரைப் பதவியில் இருந்து தூக்கினர்.
1886-ல் லுட்விக் கடன்காரராக இறந்து போனாலும், அவர் கட்டிய கோட்டைகளும் அரண்மனைகளுமே பவேரியாவுக்கு இன்றைக்கும் சுற்றுலா மூலமாக நல்ல வருமானத்தை ஈட்டித் தருகின்றன.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: mugil.siva@gmail.com