செடிகளுடன் பேசினால் வளரும் என்கிறார்களே, நீ செடிகளுடன் பேசியிருக்கிறாயா, டிங்கு?
–எஸ்.ஹரிஹரசுதன், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
நான் பள்ளிப் படிப்பை முடிக்கும்வரை என்னுடைய உற்ற தோழர்கள் மரங்களும் செடிகளும்தான். ஓய்வு நேரம், படிக்கும் நேரம், விளையாடும் நேரம் என்று எப்போதும் தோட்டத்திலேயே கிடப்பேன். தங்கைகளுடன் சண்டை, சரியாக எழுதாத பரீட்சை, அம்மா, அப்பாவிடம் திட்டு போன்ற சூழ்நிலைகளில் நான் அடைக்கலம் தேடுவது மரங்களிடம்தான். சந்தோஷமான விஷயங்களையும் துக்கமான விஷயங்களையும் பகிர்ந்துகொள்வேன். பாடங்களை ஒப்பிப்பேன். பரீட்சை, போட்டி போன்றவற்றுக்குச் செல்லும் முன் மரங்களிடம் சொல்லி, ஆசிர்வாதம் வாங்கிக்கொள்வேன்.
வெளியூருக்குச் சென்றுவிட்டு வந்தால், ஓடிப் போய் மரங்களையும் செடிகளையும் அன்போடு அணைத்துக்கொள்வேன். இப்படி மரங்களும் செடிகளும் வாழ்க்கையில் முக்கியப் பங்கை வகித்திருக்கின்றன. தஞ்சாவூர் மண்ணுக்கு எந்தச் செடி வைத்தாலும் மிக வேகமாக வளர்ந்துவிடும். அதனால் நான் பேசியதால்தான் அவை வளர்ந்தனவா, இல்லை இயல்பாகவே வளர்ந்தனவா என்று தெரியவில்லை, ஹரிஹரசுதன். ஆனால் எப்போதும் செழிப்பாக, சந்தோஷமாக, தென்றல் காற்றை வீசிக்கொண்டிருந்தன. கொஞ்சம் தண்ணீர் ஊற்றிப் பராமரித்த அன்புக்கு பூக்கள், காய்கள் என்று ஏராளமாக வாரிவழங்கின.
எனிட் பிளைட்டனின் சிறந்த புத்தகங்களை எனக்குக் கொஞ்சம் சிபாரிசு செய்ய முடியுமா, டிங்கு?
- ஹ. நேஹா, 7-ம் வகுப்பு, எஸ்.ஜே.எஸ்.வி. சிபிஎஸ்சி பள்ளி, கோவை.
எனிட் பிளைட்டன் சிறுவர்களுக்காகவே ஏராளமாக எழுதியிருக்கிறார்! அவற்றில் The famous five என்ற தொடரில் 21 நாவல்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் எந்த நாவலை வேண்டுமானாலும் நீங்கள் தாராளமாகப் படிக்கலாம். அத்தனையும் சிறந்த நாவல்கள்! The secret seven என்ற தொடரில் 15 நாவல்கள் வெளிவந்துள்ளன.
இவை அனைத்தும் துப்பறியும் நாவல்கள். இவற்றையும் நீங்கள் படிக்கலாம். இவற்றைப் படித்து முடித்த பிறகு, சிபாரிசே கேட்காமல் நீங்களே தேடிப் படிக்க ஆரம்பித்துவிடுவீர்கள், நேஹா. படித்த பிறகு உங்களின் கருத்துகளை எழுதுங்கள்.
எங்கள் தோட்டத்துக்கு வந்த பாம்பை அடித்தோம். அது எப்படியோ தப்பிவிட்டது. எங்களைப் பழி வாங்குமோ என்று பயமாக இருக்கிறது. என்ன செய்வது டிங்கு?
- ஆர். மகேஸ்வரி, 9-ம் வகுப்பு, அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சென்னை.
பாம்பு போன்ற உயிரினங்கள் வாழ்ந்த இடங்களில்தான் நாம் வீடு கட்டிக் குடியேறியிருக்கிறோம். ஆனால் நாம், நம் இடத்துக்குள் பாம்பு வந்துவிட்டதாகக் கருதுகிறோம். இனிமேல் பாம்புகளை அடிக்காதீர்கள். ஒதுங்கி நின்றுவிட்டால், அது உங்கள் பக்கம்கூடத் திரும்பாது. பாம்புகளோ மற்ற உயிரினங்களோ தங்களுக்கு ஆபத்து நேரும்போதுதான், தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தாக்குதல் நடத்துகின்றன. பொதுவாக நம்மைக் கண்டவுடன் பாம்புகள் வேகமாக ஓடி ஒளிந்துகொள்ளவே நினைக்கின்றன.
அடிபட்ட பாம்பு உயிருடன் இருப்பதே கடினம். அப்படியே அது உயிருடன் இருந்தாலும் அதுதான் உங்களைக் கண்டு பயந்துகொண்டிருக்கும். அது மட்டுமின்றி, உங்களை அடையாளம் வைத்துக்கொண்டு, பழி வாங்கும் அளவுக்கு எல்லாம் பாம்புக்கு மூளை இல்லை. பார்வை திறனும் குறைவு. அதனால் பயப்படாமல் நிம்மதியாக இருங்கள். இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள், மகேஸ்வரி.