தொ
ண்டையையும் இரைப்பையையும் இணைக்கும் ஒரு தசைக் குழாய்தான் உணவுக்குழாய் (Oesophagus). உணவோ உமிழ்நீரோ உணவுக்குழாய் வழியாகத்தான் வயிற்றுக்குள் செல்ல வேண்டும்.
எல்லா விலங்குகளுக்கும் உணவுக்குழாய் அமைப்பில் ஒன்றுபோலவே இருக்கிறது. பறவைகள், தேனீக்கள், சில வகை ஈக்கள், மண்புழு, அட்டைப்புழு, நத்தை ஆகியவற்றுக்கு உணவுக்குழாயின் கீழ்ப் பகுதியில், இரைப்பையுடன் இணைவதற்கு முன்பாக, ஒரு சேமிப்புப் பை (Crop) இருக்கிறது. பறவைகள் இதிலிருந்து உணவை எடுத்து, தம் குஞ்சுகளுக்கு இரை தருகின்றன. தேன் கூட்டில் தேனைச் சேமிப்பதற்கு முன்னால், இந்தச் சேமிப்புப் பையில் தேனீக்கள் சேமித்துக்கொள்கின்றன .
உணவுக்குழாயின் நீளம் பிறக்கும்போது 8 - 10 செ.மீ; 15 வயதில் 19 செ.மீ; பெரியவர்களுக்கு 25 செ.மீ. சுருங்கி விரியும் தசைகளால் ஆன இந்த உறுப்பு, காற்றுக் குழாய்க்குப் (Trachea) பின்புறமாக அமைந்துள்ளது.
நெஞ்சின் நடுப்பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் உணவுக்குழாய், கழுத்தில் உள்ள கிரிக்காய்டு குருத்தெலும்பு, மூச்சுக்குழாய், புளூரா, உதரவிதானம் ஆகியவற்றுடன் சில தசைநார்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்பகுதி உதரவிதானத்தைக் கடந்து, சுமார் 4 செ.மீ. நீண்டு, இரைப்பையுடன் இணைந்துகொள்கிறது.
உணவுக்குழாயானது பல வகை குறுக்குத் தசைகளாலும், நெட்டுக்குத்தான தசைகளாலும் ஆனது; தொண்டையிலிருந்து வந்த உணவை இரைப்பைக்குத் தள்ளும் வேலையை இது செய்கிறது. அதற்கு ‘பெரிஸ்டால்சிஸ்’ (Peristalsis) எனும் அலை அலையான தசை இயக்கம் உதவுகிறது.
கழுத்து, நெஞ்சு, வயிறு என மூன்று பகுதிகள் இதற்கு உண்டு. இதன் உள்பக்கத்தில் மெல்லிய சவ்வு போன்ற சளிப்படலம் (Mucus membrane) உள்ளது. இது உணவுக் குழாய்க்கு ஒரு கவசம்போல் அமைந்து உணவுப்பொருட்கள் உணவுக்குழாயைச் சிதைத்து விடாமல் பாதுகாப்பு தருகிறது. நாம் உணவை விழுங்கும்போது தடங்கல் இல்லாமல் இரைப்பைக்குச் செல்ல இதில் சுரக்கப்படும் மியூக்கஸ் திரவம் ஒரு மசகுபோல் உதவுகிறது.
உணவுக்குழாயின் மேல்முனையில் ஒன்றும், கீழ்முனையில் ஒன்றும் சுருக்குத்தசைகளால் ஆன ‘கதவுகள்’ (Sphincters) உள்ளன. மேல்முனையில் இருக்கும் கதவு உணவு வரும்போது திறக்கிறது; உணவுக் கவளம் உணவுக்குழாய்க்குள் செல்ல வழிவிடுகிறது. மற்ற நேரங்களில் அது உணவுக்குழாயை மூடிக்கொள்கிறது. இதன் பலனால், நாம் சுவாசிக்கும் காற்று மூச்சுக்குழாய்க்குள் வந்துசெல்கிறது. கீழ்முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது.
உணவுக்குழாய் ஓர் ஊதுகுழல்போல் அதன் முழு அளவிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை. நான்கு இடங்களில் சுருங்கியுள்ளது. தேவையில்லாத பொருளை நாம் தெரியாமல் விழுங்கிவிட்டால், அந்தப் பொருள் இந்த நான்கு இடங்களில், ஏதாவது ஓரிடத்தில் சிக்கியிருக்க வாய்ப்பு உள்ளது. அதை அறிந்து அகற்றுவதற்கு இந்த இடங்களை முதலில் ஆராய்வது மருத்துவரின் வழக்கம்.
உணவு இல்லாதபோது உணவுக்குழாயானது காற்றில்லாத டயர் டியூப்போல் ஒட்டியிருக்கிறது; உணவு வரும்போது மட்டும் விரிந்துகொடுக்கிறது. நாம் உணவை விழுங்க வேண்டும் என்று நினைத்ததும், மூளைத்தண்டில் உள்ள ‘விழுங்கு மையம்’ (Swallowing centre) தொண்டை, உணவுக்குழாய் தசைகளுக்கு விழுங்கும்படி ஆணையிடுகிறது. உடனே, குரல்வளை மூடி மூச்சுக்குழாயை மூடிக்கொள்ள, உணவுக்குழாயில் ஏற்படும் அலை இயக்கத்தால் உணவு கீழிறங்குகிறது. ஓர் உணவுக் கவளம் இரைப்பையை அடைய 8 – 10 விநாடி ஆகிறது.
மிகவும் காரமான, இனிப்பான, கொழுப்பு மிகுந்த உணவை அடிக்கடி சாப்பிட்டால், உணவுக்குழாயின் கீழ்முனைக் கதவு பழசாகிப்போன சல்லடை வலைபோலத் தொங்கிவிடும். இதனால், இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது அதைத் தடுக்க முடியாமல் உணவுக்குழாய்க்குள் அனுமதித்துவிடும். உணவுக்குழாயின் தசைகள் காரமான, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது உணவுக்குழாயில் உள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால் நெஞ்செரிச்சல் உண்டாகும்.
அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காற்றைடைத்த மென்பானங்களைக் குடிக்கும்போது, சூவிங்கம் மெல்லும்போது, புகைபிடிக்கும்போது, புகையிலை போடும்போது, தண்ணீர் குடிக்கும்போது எனப் பல செயல்களில் நம்மை அறியாமலேயே சிறிதளவு காற்றையும் விழுங்கி விடுகிறோம். இந்தக் காற்று இரைப்பையிலிருந்து வெளியேறுவதற்கு இயற்கை ஏற்படுத்தியிருக்கும் எளிய வழிதான் ஏப்பம்.
உணவுடன் விழுங்கப்பட்ட காற்று குறைவாக இருந்தால், இரைப்பையில் செரிக்கப்பட்ட உணவுடன் குடலுக்குச் சென்று வாயுவாக பிரிந்துவிடும். அளவு அதிகமானால் இரைப்பை சிரமப்படும்.
அப்போது வயிறு, நெஞ்சு ஆகிய இடங்களில் உள்ள தசைகள் ஒன்றுகூடி ஒத்துழைத்து, இரைப்பையை மேல்நோக்கி அழுத்தி, உணவுக்குழாயின் இரண்டு கதவுகளையும் திறக்க வைத்து, ஒரு பெரிய சத்தத்துடன் இரைப்பையில் உள்ள காற்றை வாய்வழியாக வெளியேற்றும். இதுதான் ஏப்பம். உணவு எதிர்க்களிப்பதும் வாந்தி வருவதும் இவ்வாறேதான் நிகழ்கிறது.
குதிரை, எலி, முயல், சீமைப் பெருச்சாளி போன்றவை வாந்தி எடுப்பதில்லை!
(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com