மாயா பஜார்

மேதைகளை வாசிப்போம்: வாசிக்க வேண்டிய சிறார் எழுத்தாளர்கள்

ஆதி

பாரதியார்

சுப்ரமணிய பாரதியாரின் ‘பாப்பா பாட்டு' 1915-ல் எழுதப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள ‘ஓடி விளையாடு பாப்பா' என்று தொடங்கும் வரிகளும் நெடிய பாடலும் மிகவும் பிரபலம். 1918-ல் வெளியான ‘பால விநோதினி' என்ற குழந்தைகள் இதழிலும் பாரதியார் குழந்தைகளுக்கு நிறைய எழுதியிருக்கிறார்.

சக்தி வை. கோவிந்தன்

‘சக்தி காரியாலயம்' என்ற பதிப்பகத்தை நடத்திவந்த வை. கோவிந்தன், தமிழின் மிகப் பிரபலமான - அதிகம் விற்ற முதல் சிறார் இதழை நடத்தியவர். எழுத்தாளர் தமிழ்வாணனை ஆசிரியராகக் கொண்டு 1947-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘அணில்' என்ற வார இதழே அது.

நாடு விடுதலை பெறுவதற்குமுன் வெளியான முக்கிய சிறார் கதைகளில் வை. கோவிந்தனின் ‘தமிழ்நாட்டுப் பழங்கதைகள்', ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘ஈசாப் குட்டிக் கதைகள்’, ‘தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆர்.வி.

விடுதலைப் போராட்ட வீரரான எழுத்தாளர் ஆர்.வி. (ஆர். வெங்கட்ராமன்) தனிநபர் சத்யாகிரகத்தில் ஈடுபட்டதற்காக சிறை சென்றவர். கலைமகள் காரியாலயம் சார்பில் 'கண்ணன்' என்ற சிறார் இதழ் 1950-ல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, 1972 வரை அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.

‘சந்திரகிரிக் கோட்டை’, ‘காளிக்கோட்டை ரகசியம்’ போன்ற நெடுங்கதைகள், ‘காலக்கப்பல்’ என்ற அறிவியல் கதை, ‘இரு சகோதரர்கள்’ என்ற சித்திரக்கதை போன்றவை இவருடைய படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

தம்பி சீனிவாசன்

தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் முக்கியமான பாடலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் தம்பி சீனிவாசன். அழ.வள்ளியப்பாவின் சீடராக அறியப்பட்ட இவர், சாகித்ய அகாடமியில் பணியாற்றியவர். அவருடைய 'தங்கக் குழந்தைகள்' என்ற நாடகம் மத்திய அரசுப் பரிசைப் பெற்றது. அவர் எழுதிய ‘சிவப்பு ரோஜாப்பூ’ என்ற பாடல் தொகுப்பு, புதிய சந்தங்களையும் பாடுபொருட்களையும் கொண்டதற்காகப் புகழ்பெற்றது.

மத்திய அரசு நிறுவனமான பப்ளிகேஷன் டிவிஷன் தனது பொன்விழா ஆண்டில் இவரது ’ஓலைவெடி’  சிறுவர்கதை   நூலைத்தான் முதல் நேரடி நூலாக  வெளியிட்டது. நேஷனல் புக் டிரஸ்ட்டின் ‘குட்டி யானை பட்டு', ‘யார் கெட்டிக்காரர்?', ‘ஜானுவும் நதியும்' உள்ளிட்ட புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

‘கல்வி' கோபாலகிருஷ்ணன்

தேசிய அளவில் அறியப்பட்ட தமிழ்ச் சிறார் எழுத்தாளர் ‘கல்வி' கோபாலகிருஷ்ணன். குழந்தைகளுக்கு அறிவியல் சார்ந்து அதிகம் எழுதியுள்ளார். பாடப் புத்த கங்களுக்கு ஓவியம் வரைந்து வந்த அவர், ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவும் வகையில் ‘கல்வி' என்ற இதழை நடத்தினார். அது அவருடைய பெயருடன் ஒட்டிக்கொண்டது.

பல நாட்டுக் குழந்தைகளின் பின்னணியை அறிமுகப்படுத்தும் ‘பறக்கும் பாப்பா' என்ற கதாபாத்திரத்தை ‘சுதேசமித்திரன்' தீபாவளி மலரில் அறிமுகப்படுத்தினார். அந்தக் கதாபாத்திரம் அவருடைய பல நூல்களில் கதை சொல்லியிருக்கிறது.

‘பண்டை உலகில் பறக்கும் பாப்பா' (பரிணாமத்தின் கதை), ‘கானகக் கன்னி' (தாவரங்களைப் பற்றிய இந்த நூல் மத்திய அரசு பரிசு பெற்றது), ‘மந்திரவாதியின் மகன்' (பூச்சிகளின் வாழ்க்கை), ‘பாலர் கதைக் களஞ்சியம்' உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. அவருடைய ‘மிட்டாய் பாப்பா' (எறும்பு, தேனீக்கள் பற்றி) யுனெஸ்கோ பரிசைப் பெற்றது.

பூவண்ணன்

பூவண்ணன் (வே.தா. கோபாலகிருஷ்ணன்), ஒரு தமிழ்ப் பேராசிரியர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் இலக்கியப் படைப்புகளை எழுதியவர். அவருடைய ‘சிறுவர் இலக்கியக் களஞ்சியம்’ புகழ்பெற்றது.

1955-ல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் அவருடைய ‘உப்பில்லாத பண்டம்’ முதல் பரிசைப் பெற்றது. அவர் எழுதிய ‘ஆலம் விழுது', ‘காவேரியின் அன்பு' ஆகிய இரண்டு சிறார் நெடுங்கதைகளும் ‘நம்ம குழந்தைகள்', ‘அன்பின் அலைகள்' என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளன.

அவருடைய சிறார் வரலாற்றுக் கதை ‘சிற்பியின் மகள்’ குறிப்பிடத்தக்கது.

முல்லை தங்கராசன்

தமிழ்ச் சிறார் காமிக்ஸ் உலகில் குறிப்பிடத்தக்க சாதனையாளர் முல்லை தங்கராசன். ‘மணிப்பாப்பா’ (1976), ‘ரத்னபாலா’ (1979) என 70-களின் இரண்டு பிரபல சிறார் இதழ்களுக்கு ஆசிரியராகச் செயல்பட்டவர். முத்து காமிக்ஸ் நிறுவனத்தில் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தவர்.

கார், லாரி ஓட்டுநராகத் வாழ்க்கையைத் தொடங்கிய முல்லை தங்கராசன், மாயாஜாலக் கதைகள் எழுதுவதில் தனிச்சிறப்பு பெற்றவர். சிறாருக்கான சித்திரக் கதைகள், ஓவியங்கள் கற்பனையைத் தூண்டும் விதத்தில் அமைய வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட அவர், முழு வண்ணத்தில் காமிக்ஸ் புத்தகங்களை உருவாக்கினார். அவருடைய குறிப்பிடத்தக்க நூல் ‘தங்க மயில் தேவதை’.

ரேவதி

ஈ.எஸ். ஹரிஹரன் என்ற இயற்பெயரைக் கொண்ட ரேவதி, ‘கோகுலம்’ இதழின் ஆசிரியராகச் செயல்பட்டவர். குற்றாலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் குளிக்கத் தடை இருப்பதை அறிந்து மகாத்மா காந்தி திரும்பிச் சென்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய ‘கொடி காட்ட வந்தவன்’, தோடர் இனப் பழங்குடிச் சிறுவனை மையமாகக் கொண்ட ‘வைரமணி எஸ்டேட்’, ‘ராம் ரசாக்’, அறிவியல் கதைகள் உள்ளிட்டவை முக்கியமான படைப்புகள். அவர் எழுதிய ‘பவளம் தந்த பரிசு‘ பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றது.

கிருஷ்ணன் நம்பி, ஜோதிர்லதா கிரிஜா, தங்கமணி, பூவை அமுதன், கூத்தபிரான் எனச் சிறார்களுக்காக நல்ல எழுத்துக்களை வழங்கியவர்களின் பட்டியல் மிக நீண்டது. அவர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டுமே இங்கே அடையாளம் காட்டியுள்ளோம்.

SCROLL FOR NEXT