மாயா பஜார்

நீங்களே செய்யலாம் - 3டி தேசியக் கொடி

செய்திப்பிரிவு

நம் நாட்டின் தேசியக் கொடியை உங்கள் வீட்டு டி.வி. மேலேயோ, அலமாரியிலோ வைக்க உங்களுக்கு ஆசையாக இருக்கிறதா? பார்ப்பதற்கு 3டி தோற்றத்தில் தெரியும் தேசியக் கொடியை எப்படிச் செய்வது என்று கற்றுக் கொடுக்கிறோம். செய்து பார்த்து வீட்டில் வைத்துக் கொள்கிறீர்களா?

தேவையான பொருள்கள்:

# தடிமனான அட்டைl ஆரஞ்சு, பச்சை வண்ணப் பளபளப்புக் காகிதம்

# நீல நிற ஸ்கெட்ச் பேனா

# கத்திரிக்கோல்

# பசை.

செய்முறை:

1. தடிமனான அட்டையிலிருந்து மூன்று ஒரே மாதிரியான செவ்வக வடிவ அட்டையைக் கத்திரித்து எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மீது ஆரஞ்சு, பச்சை, வெள்ளை ஆகிய வண்ணக் காகிதங்களை ஒட்டிக்கொள்ளுங்கள்.

2. மூன்று ஸ்டாண்ட்களை அட்டையிலிருந்து வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒவ்வொரு ஸ்டாண்டும் ஒன்றைவிடச் சிறிது நீளமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

3. பச்சை வண்ண அட்டையை இருப்பதிலேயே நீளம் குறைந்த ஸ்டாண்டில் ஒட்டுங்கள். அடுத்ததாக ஆரஞ்சு அட்டையை நடுத்தர ஸ்டாண்டிலும், வெள்ளை நிற அட்டையை அதிக நீளமான ஸ்டாண்டிலும் ஒட்டிக்கொள்ளுங்கள்.

4. ஒரு முக்கோண வடிவமுள்ள அட்டையை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதன் நீளம் பச்சை அட்டையைத் தாங்கியிருக்கும் ஸ்டாண்டைவிடச் சிறிது அதிகமாக இருக்க வேண்டும். மேலும் அட்டையிலிருந்து வட்ட வடிவச் சக்கரம் ஒன்றை வெட்டியெடுத்து அதில் அசோகச் சக்கரத்தை நீல நிற ஸ்கெட்ச் பேனா உதவியுடன் வரைந்துகொள்ளுங்கள்.

5. இப்போது, நான்கு அட்டைகளையும் சீரான இடைவெளியில் படத்தில் காட்டியுள்ளபடி பொருத்திக்கொள்ளுங்கள். இப்போது சிறிது தூரத்திலிருந்து கொடியைப் பார்த்தால் 3டி வடிவில் தேசியக் கொடி அழகாகத் தெரியும்.

© 2014 Amrita Bharati, Bharatiya Vidya Bhavan

SCROLL FOR NEXT