மாயா பஜார்

ஒரு நாய்க் குட்டியின் உலக சாதனை

ரோஹின்

சட்டை போட்டுக் கொண்டு, ஹாயாக பின் காலைத் தூக்கிக் கொண்டு நிற்கும் இது பொமேரியன் நாய்க்குட்டி பொம்மை என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், உண்மை இல்லை. இது நிஜ நாய்க்குட்டி. இப்போது இந்த நாய்க் குட்டி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. ஏன், எதற்கு இந்த நாய்க் குட்டிக்கு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா?

இந்த பொமரேனியன் நாய்க்குட்டிதான் உலகிலேயே வேகமாக ஓடும் நாய்க்குட்டி என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது. அதற்காகத்தான் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கிறது. இந்த நாய்க் குட்டியின் பெயர் ஜிஃப். இது ஒரேசமயத்தில் இரண்டு வகையான சாதனையைச் செய்துள்ளது.

அதாவது, மொத்தம் ஓடிய 15 மீட்டர் தூரத்தில் 10 மீட்டர் தூரத்தைப் பின்னங்கால்களை மட்டும் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறது. எஞ்சிய 5 மீட்டர் தூரத்தை முன்னங்கால்களைக் கொண்டு கடந்துள்ளது. முன்னங்காலால் 5 மீட்டர் தூரத்தை 7.76 விநாடிகளிலும், பின்னங்காலால் 10 மீட்டர் தூரத்தை 6.56 விநாடிகளிலும் கடந்துள்ளது இந்த நாய்க்குட்டி. இது உலக சாதனையாகும்.

இந்த நாய்க்குட்டி அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸில் உள்ளது. இதை வளர்ப்பவர்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டிக்கொள்ளவில்லை. இப்போது உலகமெங்கும் பிரபலமாகி வருகிறது ஜிஃப். இதன் ஃபேஸ்புக் பக்கத்திற்கு மட்டும் பத்து லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

SCROLL FOR NEXT