பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் ஊசியை உருவாக்கிவிட்டான். விலங்குகளின் எலும்புகளில் இருந்தும் கொம்புகளில் இருந்தும் ஊசிகளைச் செய்தனர். இதில் விலங்குகளின் தசைநார்களைக் கோர்த்து, தோல்களைத் தைத்து ஆடையாகப் பயன்படுத்தினர். நீண்ட காலம் இந்த ஊசிகளே நிலைத்து நின்றன.
16-ம் நூற்றாண்டில் ஆண்கள் வெளியே வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். வீட்டில் இருந்த பெண்கள் சமையல், குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலைகளுடன் குடும்பத்தினருக்கு உடை தைக்கும் வேலையையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருந்தது. கைகளால் ஒரு சட்டையைத் தைப்பதற்கே பல நாட்கள் ஆனது.
1755-ம் ஆண்டு ஜெர்மானியரான சார்ல்ஸ் வெய்விந்தாலி, தையல் இயந்திரத்துக்கான ஊசியை மரத்தால் உருவாக்கினார். இதற்காக இங்கிலாந்தில் காப்புரிமையும் பெற்றார். ஆனால் இந்தக் காப்புரிமையில் ஊசியைத் தயாரிப்பதற்கான விளக்கம் கொடுக்கப்படவில்லை. அதனால் இது பெரிதாகப் பயன்படாவிட்டாலும் தையல் இயந்திரம் கண்டுபிடிப்பதற்கான முயற்சியை ஆரம்பித்து வைத்தது.
நவீன தையல் இயந்திரத்தின் வரலாறு தாமஸ் செயின்ட்டிலிருந்தே ஆரம்பமாகிறது. 1790-ம் ஆண்டு கைகளால் இயக்கக்கூடிய, தோலைத் தைக்கும் இயந்திரத்தை உருவாக்கினார். ஆனால் இவரது கண்டுபிடிப்பு யாருக்கும் தெரியாமல் இருந்தது. பின்னர் வில்லியம் நியூட்டன் வில்சன் இவரது காப்புரிமையிலிருந்து, தையல் இயந்திரம் உருவாக்கும் விதத்தை வெளி உலகத்துக்குக் கொண்டு வந்தார்.
பிறகு பல்வேறு நாடுகளில் பல்வேறு மனிதர்கள் தையல் இயந்திரம் உருவாக்கும் முயற்சியில் இறங்கினர். தாமஸ் செயின்ட் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 1830-ம் ஆண்டு வெற்றிகரமான தையல் இயந்திரம் உருவாக்கப்பட்டது. பார்தெலமி திம்மோனியர் என்ற பிரெஞ்சு தையல் கலைஞர் இதை வடிவமைத்திருந்தார். இதில் இரண்டு ஊசிகள் இருந்தன.
ஓர் ஊசி துளையிடும், மற்றோர் ஊசி நூலை வைத்து தைக்கும். இது சங்கிலித் தையலாக இருந்தது. காப்புரிமை பெற்று, இயந்திரத்தின் மூலம் உடை தயாரிக்கும் முதல் நிறுவனத்தை ஆரம்பித்தார் திம்மோனியர். பிரெஞ்சு ராணுவ வீரர்களுக்கு உடை தயாரிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால், பிரான்ஸில் இருந்த தையல் கலைஞர்களுக்குத் திம்மோனியர் மீது கோபம் வந்தது.
தொழிற்சாலை தங்களுடைய வாய்ப்புகளைப் பறித்துவிடும், வேலை இல்லாத் திண்டாட்டம் உருவாகும் என்று பயந்தனர். அதனால் திம்மோனியர் தொழிற்சாலைக்குள் இருந்தபோதே, தீயிட்டுக் கொளுத்தினர். மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, உயிர் பிழைத்தார் இந்தக் கண்டுபிடிப்பாளர்.
1844-ம் ஆண்டு ஆங்கிலக் கண்டுபிடிப்பாளர் ஜான் ஃபிஷர், தையல் இயந்திரத்தில் அடுத்த முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார். இவரது காப்புரிமை விரைவில் தொலைந்து போனது. அதனால் இவரால் எந்தவித அங்கீகாரமும் பெற முடியாமல் போனது. இவரது இயந்திரத்தைப்போலவே, அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் எலியாஸ் ஹோவ் 1845-ம் ஆண்டு ஓர் இயந்திரத்தை உருவாக்கினார்.
இவரது இயந்திரத்தில் இழைப்பூட்டுத் தையல் போடப்பட்டது. இதனால் தையல் உறுதியானது. ஆனாலும் இவருக்குப் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இங்கிலாந்துக்குச் சென்றார். நீண்ட காலத்துக்குப் பிறகு அமெரிக்கா திரும்பியபோது, இவரது தையல் இயந்திரத்தைப் பார்த்துப் பலரும் அனுமதி பெறாமலே, இயந்திரங்களை உருவாக்க ஆரம்பித்திருந்தனர்.
அவர்களில் ஒருவர் ஐசாக் மெரிட் சிங்கர். இவர் 1851-ம் ஆண்டு தையல் இயந்திரங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். இன்றுவரை இவரது சிங்கர் நிறுவனம் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.
1935-ம் ஆண்டு இந்தியாவில் ஜே.ஜே. இன்ஜினீயரிங் நிறுவனம் மூலம் ‘உஷா’ தையல் இயந்திரம் உருவாக்கப்பட்டது. தொழிற்புரட்சியின் விளைவாக உருவான தையல் இயந்திரம், இன்று உடை தயாரிப்பை எளிமையாக மாற்றியிருக்கிறது.
(கண்டுபிடிப்போம்)