மாயா பஜார்

ஈசலின் ஆயுள் ஒரு நாளா? | டிங்குவிடம் கேளுங்கள்

செய்திப்பிரிவு

ஈசலின் ஆயுள் காலம் ஒருநாள் என்கிறார்களே, அது உண்மையா, டிங்கு? - க. ஜேசு ஷாலோமி, 8-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப்பள்ளி, அனவரதநல்லூர், தூத்துக்குடி.

ஈசல் என்பது இறக்கை முளைத்த கறையான்கள். ஒரு புற்றில் கறையான்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, ராணிக் கறையான் சிறப்பான முட்டைகளை இடுகிறது. அந்த முட்டைகளில் இருந்து வரும் கறையான்களுக்கு இறக்கைகள் இருக்கும். இவை குறிப்பிட்ட காலம் வந்ததும் வேறு ஒரு புற்றை உருவாக்குவதற்காகப் பறந்து செல்கின்றன.

இவற்றைத்தான் நாம் ஈசல்கள் என்கிறோம். ராணி, வேலைக்கார ஈசல் என்று வகையைப் பொறுத்து இந்த ஈசல்களின் ஆயுள்காலம் மாறுபடும். இவை 12 முதல் 20 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. மிகக் குறைந்த ஆயுள்காலம் கொண்ட வேலைக்கார ஈசல்கள் 4 முதல் 5 ஆண்டுகள் வாழ்கின்றன. எனவே ஈசலின் ஆயுள் காலம் ஒருநாள் என்பது தவறு, ஜேசு ஷாலோமி.

மழை, வெள்ளம் காலத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை என்கிறார்களே, அதன் பொருள் என்ன? - ஜெப் ஈவான், 9-ம் வகுப்பு, புனித பாட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.

ஒரு நாட்டில் போர் நடக்கும்போது, எந்தச் செயலையும் முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டியது அவசியம். நேரத்தை வீணாக்காமல், இரவு பகல் பாராமல் பணிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். மழை, வெள்ளம் போன்ற அவசரக் காலச் சூழலில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து மக்களை மீட்டு, பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

தண்ணீர் வடிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளைப் பழுது பார்க்க வேண்டும். மின் விநியோகம் தடையின்றி வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியாற்றினால்தான் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்பதால், ‘போர்க்கால அடிப்படை’யில் நடவடிக்கை என்கிறார்கள், ஜெப் ஈவான்.

சூரியனிலிருந்து தொலைவில் இருக்கும் பூமியில் பல்வேறு பருவநிலைகள் ஏற்படுகின்றன. சூரியனுக்கு அருகில் இருக்கும் நிலவில் பருவநிலைகள் ஏன் ஏற்படுவதில்லை, டிங்கு? - ஜெ. பாலவிக்னேஸ்வரன், 6-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.

சூரியனிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதால் பூமியில் பருவகாலங்கள் தோன்றவில்லை. பூமி அச்சு சற்றுச் சாய்வாக இருப்பதால், ஆண்டு முழுவதும் பூமியின் வெவ்வேறு பகுதிகளில் சூரிய ஒளி மாறுபட்ட கோணத்தில் விழுகிறது. இதனால் குளிர், மழை, கோடைக்காலங்கள் உருவாகின்றன. நிலவு சூரியனுக்கு அருகில் இல்லை. நிலவின் அச்சு மிகக் குறைவாகவே சாய்ந்துள்ளது என்பதால், சூரிய ஒளி எல்லா நேரமும் ஒரே மாதிரி விழுகிறது.

எனவே பருவகாலங்கள் உருவாகவில்லை. அதோடு, பூமிக்கு அடர்த்தியான வளிமண்டலம் இருக்கிறது. இது பகலில் வெப்பத்தை உறிஞ்சி, இரவில் மெதுவாக வெளியேற்றி விடுகிறது. ஆனால், நிலவில் வளிமண்டலம் இல்லை என்பதால் சூரிய வெப்பம் உடனே வெளியேறிவிடுகிறது. அதனால் பகலில் கடும் வெப்பமும் இரவில் கடுங்குளிரும் நிலவுகிறது. எனவே நிலவில் பருவகாலங்கள் உருவாகவில்லை, பாலவிக்னேஷ்வரன்.

SCROLL FOR NEXT