நீண்ட நேரம் தூங்குவதால் உடல் நலப் பாதிப்பு ஏற்படுமா, டிங்கு?
- அ. சுபிக்ஷா, 9-ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், ஓசூர்.
அளவுக்கு அதிகமான தூக்கம் நிச்சயம் உடல் நலத்தைப் பாதிக்கும், சுபிக்ஷா. மனிதர்கள் தூங்குவதற்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல. நல்ல உணவை மூன்று வேளை சாப்பிடுகிறோம். அதற்கு ஏற்றார்போல் வேலை செய்து கலோரிகளை எரித்துவிட வேண்டும். கோலா போன்ற பிராணிகள் குறைந்தது 20 மணி நேரம் தூங்குகின்றன. காரணம், அவை சாப்பிடும் உணவில் மிகக் குறைந்த அளவு சக்தியே கிடைக்கும். வேகமாக ஓடியாடி வேலை செய்யத் தேவையான சக்தி இருக்காது.
அதனால் கிடைக்கும் சக்தியைக் கொண்டு, குறைவான நேரம் விழித்திருந்து, மீதி நேரத்தைத் தூங்கியே கழிக்கின்றன. மனிதர்களில் குழந்தைகள் 10 மணி நேரமும் உங்களைப் போன்ற மாணவர்கள் 8 மணி நேரமும் தூங்கினால் போதுமானது. தினமும் நீண்ட நேரம் தூங்கினால் நீரிழிவு, இதயக் கோளாறு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதேபோல மிகக் குறைவான நேரம் தூங்குவதும் நல்லதல்ல. 8 மணி நேரம் தூங்கி, ஆரோக்கியமாக இருங்கள்.
முயல் தன்னுடைய கழிவையே சாப்பிடுவது ஏன், டிங்கு?
– மா. லத்தீஸ்வரன், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
தாவர உணவைச் சாப்பிடக் கூடியது முயல். தாவரங்களிலுள்ள நார்ச்சத்து, செல்லுலோஸ் போன்றவை எளிதில் ஜீரணமாவதில்லை. அதனால் கழிவிலும் சத்துகள் இருக்கும். உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது, உடலில் சக்தி குறைவாக இருப்பதாகத் தோன்றும்போது முயல்கள் தங்களது கழிவைச் சாப்பிட்டு, சக்தியைப் பெற்றுக்கொள்கின்றன, லத்தீஸ்வரன்.
தேவாங்கு சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சினை சரியாகும் என்பது உண்மையா, டிங்கு?
– பாலமுருகன், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, பூதப்பாண்டி, குமரி.
ஆ… இப்படி எல்லாம்கூடச் சொல்கிறார்களா என்ன? ஆஸ்துமா நோயை முற்றிலும் குணப்படுத்த இயலாது. மருந்துகள் மூலம் நோயைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கலாம். இதனால் நோயின் தீவிரத்திலிருந்து தப்பித்துவிடலாம். ஆஸ்துமாவைக் கட்டுக்குள் வைக்க அலோபதி, மாற்று மருந்துகள் என்று எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அவற்றை மருத்துவரின் அறிவுரையின் பேரில் எடுத்துக்கொள்வதே நல்லது. பாவம், அரிய விலங்கான தேவாங்கை விட்டுவிடலாம், பாலமுருகன்.
உலகில் எத்தனையோ மக்கள் சாப்பாடு இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய முடியுமா, டிங்கு?
– ச. சச்சுதன், 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி.
இந்த வயதிலேயே அடுத்தவர்களின் பசியைப் பற்றி யோசித்த உங்களுக்குப் பாராட்டுகள், சச்சுதன். தனி ஒரு மனிதரால் பசியோடு இருப்பவர்களின் பிரச்சினையை எல்லாம் தீர்க்க முடியாது. ஆனால் நமக்குத் தெரிந்து பசியோடு யாராவது இருந்தால், அவர்களின் பசியைப் போக்குவதற்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். நம் உணவைப் பகிர்ந்து கொள்ளலாம். உணவை வீணாக்காமல் சாப்பிடலாம்.