கடையில் பண்டிகைக் கால விற்பனை முடிந்தது. மகிழ்ச்சியாக வீட்டுக்குத் தன் இருசக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தார் வரதன். இரவு நேரம். பணம் அதிகமாக இருந்ததால், பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்கிற கவலை வரதனை வாட்டியது. அப்போது திடீரென்று பெய்த மழையால் பயணம் தடைப்பட்டது.
அருகே இருந்த விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கினார். அது இருவர் தங்கும் அறை. ஏற்கெனவே அங்கே இருந்த ராமு, வரதனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். வரதனுக்குப் பயமாக இருந்தது. பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.
ராமு கழிவறைக்குச் சென்றபோது பணத்தைப் பத்திரப்படுத்திவிட்டு, நிம்மதியாகத் தூங்கினார் வரதன். வரதன் தூங்கியதை உறுதி செய்தபின், அவரின் பையை எடுத்துப் பார்த்தார் ராமு. ஆனால், அதில் ஒன்றும் இல்லை. படுக்கையைத் தூக்கிப் பார்த்தார். அதிலும் ஒன்றும் இல்லை. ஏமாற்றத்துடன் ராமுவும் உறங்கிவிட்டார். மறுநாள் காலை எழுந்தவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
பணத்தை எண்ணி சரிபார்த்துக் கொண்டிருந்தார் வரதன். ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், “பணத்தை எங்கு வைத்திருந்தீர்கள்?” என்று கேட்டார் ராமு. வரதனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “குப்பைப் போட வைத்திருக்கும் வாளியில்தான் வைத்திருந்தேன்.
யாரும் அதில் தேட மாட்டார்கள்தானே?” “புத்திசாலிங்க!” “சரி, நீங்க எதுக்குப் பணத்தைத் தேடினீங்க?” “இங்கே திருட்டு அதிகம். அதான் பணத்தைப் பாதுகாப்பாக வைக்கலாமே என்று தேடினேன்.” “ஓ, ரொம்ப நன்றிங்க” என்று சொல்லிவிட்டு, புறப்பட்டார் வரதன்.
- வி.சி. கிருஷ்ணரத்னம்