மாயா பஜார்

மற்ற கோள்களில் வானம் நீலமாக இருக்குமா? | வானம் நமக்கொரு போதிமரம் 4

த.வி.வெங்கடேஸ்வரன்

பூமியில் வானம் நீலமாகத் தெரிவதற்கு ராலே ஒளிச்சிதறலே காரணம். பல நிறங்களின் கலவையான சூரிய ஒளி, பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது ஒளிச்சிதறல் அடைகிறது. காற்றில் உள்ள பல்வேறு மூலக்கூறுகளின் ஊடே ஒளி செல்லும்போது நிகழும் இந்த ஒளிச்சிதறல் கோட்பாடுதான் ராலே ஒளிச்சிதறல் விளைவு.

பூமியின் வளிமண்டலம் அதன் தன்மை காரணமாக நீலத்தை அதிக அளவில் எல்லாப் பக்கமும் சிதறடிக்கிறது. சிதறிச் செல்லும் ஒளிக்கதிர்கள் தூசிகளில் பட்டு பூமியை நோக்கித் திருப்பப்படுகின்றன. இதனாலேயே வானம் எல்லாத் திசைகளிலும் நீலமாகத் தென்படுகிறது.

வெள்ளி, செவ்வாய் போன்ற பிற கோள்களில் வானம் எந்த நிறத்தில் தெரியும் என்பதை அறிய, முதலில் பூமியில் ஏன் நீலம் அதிகம் சிதறடிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வளிமண்டலத்தில் உள்ள வாயுப் பொருள்களைப் பொறுத்து குறிப்பிட்ட நிறங்கள் அதிகமாகச் சிதறுகின்றன.

பூமியின் வளிமண்டலத்தில் 78% நைட்ரஜனும் 21% ஆக்சிஜனும் உள்ளன. இந்த இரண்டு வாயுக்களும் சேர்ந்து மொத்த வாயுக்களில் 99%. ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகள் அதிக அளவில் நீல நிறத்தைச் சிதறடிக்கின்றன. அதனால்தான் பூமியில் வானம் நீலமாக உள்ளது.

சுமார் 250 கோடி ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால், பூமியின் வானம் நீலமாக இருந்திருக்காது; ஆரஞ்சு நிறத்தில் காட்சி தந்திருக்கும். அந்தக் காலத்தில் பூமியின் வளிமண்டலத்தில் கணிசமான அளவு ஆக்சிஜன் மூலக்கூறுகள் இல்லை. நைட்ரஜன் தவிர, பெருமளவில் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நீராவி போன்ற மூலக்கூறுகளே இருந்தன. இவை ஒளியைச் சிதறடிக்கும் தன்மையில் தனித்துவம் வாய்ந்தவை.

காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி, சூரிய ஒளியின் ஆற்றலைப் பயன்படுத்தி, ஆக்சிஜனை வெளியிடும் ஒளிச்சேர்க்கைத் திறன் கொண்ட சையனோ பாக்டீரியா எனும் உயிரி பூமியில் உருவான பின்னரே, வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு கூடியது. நீராவி மழையாகப் பொழிந்து கடல்கள் உருவாயின. மீத்தேன் போன்ற வாயுக்கள் சிதைந்து போயின. பூமியின் வானம் மெல்ல நீல நிறமாக மாறியது.

பூமிக்கு வெளியே நிலவுக்குச் சென்றால், வானம் கறுப்பாகவே இருக்கும். நிலவில் வளிமண்டலமே இல்லாததால், ஒளிச்சிதறல் எதுவும் நடைபெறாது. நிலவின் தரை சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால், பகல் நேரத்தில் கண்ணைக் கூசும் வெளிச்சம் இருக்கும். சூரியன் உள்ள வான் பகுதி வெளிச்சமாகவும், கையால் சூரியனை மறைத்துக்கொண்டால் மீதமுள்ள வானம் கருமையாகவும் தெரியும்.

கண்களில் பிரதிபலிக்கும் ஒளியும் சூரிய ஒளியும் நேரடியாக விழாதவாறு குழாய் வழியாக வானத்தைப் பார்த்தால், பகலிலும் பிரகாசமான விண்மீன்கள் தென்படும். நிலவைப் போலவே புதன் கோளுக்கும் வளிமண்டலம் இல்லை. அங்கும் வானம் கருமையாகவே இருக்கும்.

செவ்வாய் கோளில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோபாட் உலாவிகள், அங்குள்ள வானின் படங்களை அனுப்பியுள்ளன. செவ்வாயில் சூரிய உதயம் அல்லது மறையும் நேரத்தில் வானம் நீலமாகத் தென்படும். மொத்தக் காற்றில் 95% கார்பன் டை ஆக்சைடும், சிறிய அளவு நைட்ரஜன், ஆர்கானும் கொண்ட செவ்வாய் கோளின் வளிமண்டலம், நீல நிறத்தை மிகக் குறைவாகவே சிதறடிக்கும்.

எனவே, சூரிய உதயம், மறைவு நேரத்தில் சிதறாமல் நேரடியாக நம் கண்களை வந்து சேரும் ஒளியில் பெருமளவு நீலம் இருக்கும். பகலில் காற்றில் வீசும் தூசியின் அளவைப் பொறுத்து, வானம் மஞ்சள்-பழுப்பாகவோ இளஞ்சிவப்பாகவோ தேன் நிறத்திலோ காட்சி தரும். அடர்த்தியான வளிமண்டலம் கொண்ட வெள்ளிக் கோளில், கணிசமான அளவு கார்பன் டை ஆக்சைடு (சுமார் 96.5%) உள்ளது. சுமார் 3.5% நைட்ரஜனும் உள்ளது.

மேலும், அங்கு பூமியின் வளிமண்டல அடர்த்தியைவிடச் சுமார் 93 மடங்கு அதிக அடர்த்தியான வளிமண்டலம் உள்ளது. இவ்வளவு அடர்த்தியான காற்றைக் கிழித்துக்கொண்டு சூரிய ஒளி ஓரளவுக்கே உள்ளே புகும். எனவே, பூமியைவிடச் சூரியனுக்கு அருகில் இருந்தாலும், வெள்ளியில் நண்பகல் சூரிய வெளிச்சம், பூமியில் சூரியன் மறைந்த பின் அந்திசாயும் வெளிச்சத்தின் அளவுக்கே இருக்கும்.

எனவே, வெள்ளிக் கோளின் தரையிலிருந்து வானத்தைப் பார்த்தால், தங்க-மஞ்சள் அல்லது ஆரஞ்சு-மஞ்சள் நிறத்தில் காட்சி தரும். சூரியனைச் சுற்றிக் கோள்கள் இருப்பது போலவே, வேறு விண்மீன்களைச் சுற்றியும் கோள்கள் உள்ளன. இவை புறக்கோள்கள் எனப்படும்.

அவற்றின் வளிமண்டலத்தில் உள்ள பொருள்கள் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. இயற்பியல் விதிகளைக் கொண்டு, அங்கு வானம் எந்த நிறத்தில் இருக்கும் என நாம் முன்கூட்டியே அறிய முடியும். எண்ணற்ற புறக்கோள்களின் வானம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வெவ்வேறு வண்ணக்கலவையில் ஜொலிக்கும்! எனவே, எல்லாக் கோள்களின் வானமும் நீலமல்ல.

(அறிவோம்)

- tvv123@gmail.com

SCROLL FOR NEXT