மாயா பஜார்

எல்லாப் பாம்புகளுக்கும் விஷம் உண்டா? | டிங்குவிடம் கேளுங்கள்

செய்திப்பிரிவு

செயற்கை உரத்தை ஏன் பயன்படுத்துகிறார்கள், டிங்கு? - அ.பா. இயல், 4-ம் வகுப்பு, பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி, குன்றத்தூர்.

தொடர்ச்சியாக மண்ணில் விவசாயம் செய்யும்போது, மண்ணில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துகள் குறைந்துவிடுகின்றன. அதனால் செயற்கையாக இந்தச் சத்துகளை வாங்கி, உரமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த உரங்கள் பயிர்கள் விரைவாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவுகின்றன.

அதோடு நல்ல மகசூலையும் அளிக்கின்றன. அதனால் செயற்கையாக உரங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அளவுக்கு அதிகமாகச் செயற்கை உரங் களைப் பயன்படுத்தும் போது, அது மண்ணுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது, இயல்.

குப்பையில் வீசப்படும் கெட்டுப்போன ரொட்டி போன்ற உணவு வகைகளைச் சாப்பிடும் நாய்களுக்கு, உடல்நலக் குறைவு ஏற்படாதா, டிங்கு? - ஜி. இனியா, 9-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

நாய்களின் உடல் செயல்பாடும் மனிதர்களின் உடல் செயல்பாடும் வெவ்வேறு வகையானவை. சில உணவு வகைகள் நாய்களுக்குப் பெரிதாகத் தீங்கு விளைவிக்காமல் இருக்கலாம். கெட்டுப் போன இறைச்சி போன்றவை நாய்களுக்கும் தீங்கை விளைவிக்கும்.

வாந்தி, பேதி போன்ற கோளாறுகளை உண்டு பண்ணும். குப்பையில் கிடக்கும் கெட்டுப் போன உணவு வகைகளால் மட்டும் நாய்களுக்குப் பிரச்சினை வருவதில்லை. நாம் அன்பாகக் கொடுக்கும், நாம் சாப்பிடக்கூடிய உணவு வகைகளாலும் பிரச்சினைகள் வரும், இனியா.

எல்லாப் பாம்புகளுக்கும் விஷம் இருக்குமா, டிங்கு? - ர. தக்ஷ்ணா, 7-ம் வகுப்பு, நாச்சியார் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட சுமார் 3,970 பாம்பு வகைகளில் சுமார் 600 பாம்பு வகைகள் விஷமுடையவை. இவற்றிலும் சுமார் 200 வகை பாம்புகளே மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு விஷம் கொண்டவை. மற்றவை எல்லாம் விஷமற்ற பாம்புகளே, தக்ஷ்ணா.

SCROLL FOR NEXT