AB நெகடிவ் ரத்தம் மட்டும் ஏன் மிகமிக அரிதாக இருக்கிறது, டிங்கு? - ஜெ. பாலவிக்னேஷ்வரன், 6-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நிலைப் பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.
AB நெகடிவ் ரத்த வகையில் சிவப்பணுக்களில் A ஆன்டிஜனும் B ஆன்டிஜனும் இருக்கும். மேலும் சிவப்பணுக்களில் Rhesus (Rh) பாசிடிவ் ஆன்டிஜன் இல்லை. இந்த இரண்டு காரணங்களால் இது, மற்ற ரத்த வகைகளைவிடக் குறைவாகவே காணப்படுகிறது. எனவே, மிக அரிதான ரத்த வகையாகக் கருதப்படுகிறது, பாலவிக்னேஷ்வரன்.
எடை பார்க்கும்போது தலையை நிமிர்த்தி வைக்கச் சொல்கிறார்களே ஏன், டிங்கு? – ஜி. தன்ஷிகா, 5-ம் வகுப்பு, பாலாஜி மெட்ரிகுலேஷன் பள்ளி, கும்பகோணம்.
எடை பார்க்கும் இயந்திரத்தின் மீது ஓரமாகவோ முன்னாடியோ பின்னாடியோ நிற்கக் கூடாது. இயந்திரத்தின் மையத்தில் நிற்க வேண்டும். அப்படி இப்படிச் சாயாமல், நிமிர்ந்து நிற்கும்போது உடல் எடையை இயந்திரம் சரியாகக் காட்டும். நாம் நிமிர்ந்து நிற்பது போலவே, இயந்திரமும் சமதளமான பரப்பில் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். ஒருவேளை தலை குனிந்திருந்தாலும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. துல்லியமான எடைக்கு நிமிர்ந்து நிற்கச் சொல்கிறார்கள், தன்ஷிகா.
விண்வெளியில் மனிதனின் இதயத் துடிப்பில் மாற்றம் இருக்குமா, டிங்கு? – ஜே. கார்த்திக், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
பூமியில் ஈர்ப்பு விசையை எதிர்த்து, ரத்தத்தை உடலின் கீழ்ப் பகுதியிலிருந்து மேல் பகுதிக்கு ரத்தத்தைக் கொண்டு செல்வதற்கு இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை என்பதால், ரத்தம் உடலின் மேல் பகுதிக்கு அதிகமாக வந்துவிடும். எனவே பூமியைவிட விண்வெளியில் மெதுவாக இதயம் வேலை செய்கிறது, கார்த்திக்.