மாயா பஜார்

டிங்குவிடம் கேளுங்கள்: நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது ஏன்?

செய்திப்பிரிவு

ஆங்கிலேயர்கள் நம் நாட்டுக்கு ஏன் நடு இரவில் சுதந்திரம் கொடுத்தார்கள், டிங்கு?

- த.ச. ராகுல் பாலாஜி, 9-ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், ஓசூர்.

1947-ம் ஆண்டு மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்தார். இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பது என்று முடிவான உடன், இந்தியத் தலைவர்கள் பல்வேறு நாளையும் நேரத்தையும் சொன்னார்கள். ஆனால் மவுண்ட்பேட்டனுக்கு விருப்பமான நாள் ஆகஸ்ட் 15. ஏற்கெனவே 1945, ஆகஸ்ட் 15 அன்று இரண்டாம் உலகப் போரில் அவருக்கு வெற்றி கிடைத்திருந்தது.

அந்த நாளின் நள்ளிரவு நேரத்தை முடிவு செய்தவர்கள் இந்திய ஜோதிடர்கள். நேரு உள்ளிட்ட தலைவர்களுக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும் பெரும்பாலானவர்களின் விருப்பத்துக்காக அந்த நேரத்தை ஏற்றுக்கொண்டனர். நள்ளிரவு 12 மணியில் இருந்து அடுத்த நாள் ஆரம்பித்துவிடுகிறது. பகலாக இருந்தால் என்ன, இரவாக இருந்தால் என்ன? சுதந்திரம் பெற்றதைவிட வேறு நல்ல நேரம் இருக்க முடியுமா, ராகுல் பாலாஜி!

கழுகு மட்டும் உயரமாகப் பறப்பதற்கான தேவை என்ன, டிங்கு?                

 - ம. பிரவீன் குமார், 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான் பேட்டை, திருப்பூர்.

கழுகுகளுக்குப் பார்வை சக்தி அதிகம். கால்கள் வலிமையானவை. நகங்கள் மிகவும் கூர்மையானவை. வேகமாகவும் உயரமாகவும் பறக்கும் ஆற்றல் உண்டு. அதனால் உயரத்தில் பறக்கும்போதே நிலத்தில் ஊர்ந்து செல்லும் விலங்குகளைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இரையைக் கண்டதும் பார்வையை ஒருமுகப்படுத்தி, வேகமாக வந்து, கால்களால் பிடித்து, தூக்கிச் சென்றுவிடும். கூர்மையான அலகால் இரையைக் கொத்தி, சாப்பிட்டுவிடும். உயரப் பறப்பதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றிருப்பதால் கழுகால் உயரமாகப் பறக்க முடிகிறது, பிரவீன் குமார்.

மூளை சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டுமா, இல்லை மனசாட்சி சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டுமா, டிங்கு?  

- கு. லிபிவர்ஷ்னி, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம்.

சுவாரசியமான கேள்வி, லிபிவர்ஷ்னி. நமக்குச் சொந்தம் இல்லாத ஒரு பொருள் மீது விருப்பம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை எடுப்பது தவறானது என்று நம் மூளை எச்சரிக்கும். ஆனால் மூளை சொல்வதைக் கேட்காமல், நம் மனம் விரும்பும்படி அந்தப் பொருளை நாம் எடுத்துக்கொண்டால், அது தவறு அல்லவா? இந்த விஷயத்தில் நாம் மூளை சொல்வதைத்தான் கேட்க வேண்டும்.

மனிதர்கள் நடப்பதற்குதான் நடைபாதை. ஆனால், அந்த நடைபாதையில் சில மனிதர்கள் வசிக்கிறார்கள். இது சட்டப்படி தவறு என்று நம் மூளை சொல்லும். ஆனால், நடைபாதையில் வசிப்பவர்கள், வாடகை கொடுத்து வீட்டில் குடியிருக்க முடியாத ஏழைகள். அவர்களின் நிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும் நமக்கும் இருக்கிறதல்லவா? நாம் அவர்கள் வாழ்வதற்கு வழி செய்யாதபோது, அவர்கள் வசிப்பது சட்டப்படி  தவறாக இருந்தாலும் மனசாட்சிப்படி அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதானே நியாயமானதாக இருக்கும்? மூளை நியாயம் என்பதை மட்டுமே சொல்லும்.

மனசாட்சி சூழலுக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும். சில விஷயங்களை மூளை சொல்லும்படியும் சில விஷயங்களை மனசாட்சி சொல்லும்படியும் செய்ய நேரிடும். சூழலுக்குத் தகுந்தவாறு மூளையோ மனசாட்சியோ நியாயமாகச் சொல்லும்படி நடந்துகொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்.

சோப்பு நீர்க் குமிழிகள் விட்டது உண்டா, டிங்கு?  

– என். பத்மப்ரியா, சென்னை.

சோப்பு நீரில் குமிழிகள் விடாதவர்கள்கூட இருப்பார்களா, என்ன! பல வண்ணங்களில் வெவ்வேறு அளவுகளில் சோப்பு நீரில் இருந்து வெளியேறும் குமிழிகளைப் பார்க்கும்போது உற்சாகம் பொங்கும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இதை எளிதாக வீட்டிலேயே செய்ய முடியும். வாய்க்குள் சோப்பு நீர் போகாமல் பார்த்துக்கொண்டால் நல்லது, பத்மப்ரியா.டிங்குவிடம் கேளுங்கள்

SCROLL FOR NEXT