‘ஐந்து லட்சம் டாலர் தருகிறேன்’ என்றார் வில்லியம் வேகனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த மாபெரும் பணக்காரர். பந்தயக் குதிரைகள் மீது விருப்பம் கொண்டவர். அன்றைய உலகின் மதிப்புமிக்க பந்தயக் குதிரையைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.
‘இந்தக் காசோலையைப் பிடியுங்கள். அதில் என்ன தொகை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். மேன் ஓ’வாரை எனக்குத் தந்துவிடுங்கள்’ என்று வேகனர் ஆர்வத்துடன் கேட்டார். ரிடில், ‘நான் இந்தக் குதிரையை யாருக்கும் விற்பதாக இல்லை’ என்றார்.
1917, மார்ச் 29 அன்று பிறந்த ஆண் குதிரை அது. அதன் தாய் மஹுபா. பந்தயக் குதிரையாகச் சிலவற்றில் வென்றிருக்கிறது. தந்தை, ராக் சாண்ட். பிரிட்டனைச் சேர்ந்த பந்தயக் குதிரையான இது, தான் கலந்துகொண்ட 20 பந்தயங்களில் 16இல் முதலிடம் பிடித்துச் சாதனை படைத்திருக்கிறது.
மஹுபா, அமெரிக்காவில் ஆகஸ்ட் பெல்மோண்ட் ஜுனியர் என்கிற குதிரைப் பண்ணைக்காரரிடம் இருந்தது. அது ஆண் குட்டியை ஈன்ற சில வாரங்களிலேயே அதன் துடிப்பை, துள்ளலை, அழகை, அறிவுக்கூர்மையை வைத்து பெல்மோண்ட் தன் மனைவியிடம் சொன்னார், ‘இந்தக் குட்டி மிகச் சிறந்த பந்தயக் குதிரையாக வருவான்.’
அந்த நேரத்தில் முதல் உலகப் போர் தீவிர மடைந்திருந்தது. 65 வயதானாலும் பெல்மோண்ட் அமெரிக்காவின் ராணுவ சேவைக்காக பிரான்ஸுக்குச் சென்றார். போர் முனையில் இருந்த தனது கணவருக்கு திருமதி பெல்மோண்ட் எழுதிய கடிதத்தில், குதிரைக் குட்டியை My Man O’War என்கிற பெயரில் குறிப்பிட்டிருந்தார்.
போருக்குச் சென்றிருக்கும் தன் கணவரைப் பெருமைப்படுத்தும்விதமாக அப்படிப் பெயர் வைத்திருந்தார். ஆனால், போரின் சூழல் காரணமாக பெல்மோண்டுக்குப் பணப் பிரச்சினை. தன் குதிரைப் பண்ணையில் உள்ள குதிரைகளை விற்பதற்கு முடிவு எடுத்திருந்தார். ‘Man O’War-ஐ விற்றுவிடு’ என்று சொன்னவர், பெயரில் இருந்த My என்பதையும் நீக்கிவிட்டார்.
மேன் ஓ-வார் உள்பட பல குதிரைகளைத் தொழிலதிபரான சாமுவேல் ரிடில் வாங்கினார். அவரின் பண்ணையில் மேன் ஓ’வார் துள்ளி ஓடியது. அங்கே பயிற்சியாளராக இருந்த லூயிஸ் ஃப்யூஸ்டல் மேன் ஓ’வாரின் உடல் மொழியை, வேகத்தைக் கவனித்தார். ‘இது நிச்சயம் பந்தயம் அடிக்கும்’ என்று கணித்தார். ஆகவே, மேன் ஓ’வாருக்குத் தீவிரமாகப் பயிற்சிகளை அளித்தார்.
1919, ஜுன் 6. நியூயார்க்கின் பெல்மாண்ட் பார்க் பந்தயக் களத்தில் தனது முதல் போட்டிக்காகக் களம் இறங்கியது மேன் ஓ’வார். பந்தயம் ஆரம்பித்த நொடியில் தவறின்றி ஓட ஆரம்பித்தது. அசாத்தியமான வேகம். சுமார் ஒரு கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 59 நொடிகளில் எளிதாகக் கடந்து முதலிடம் பிடித்தது. இரண்டாவது வந்த குதிரைக்கும், மேன் ஓ’வாருக்குமான இடைவெளி 6 குதிரை நீளம். (ஒரு குதிரை நீளம் என்பது சுமார் 8 அடி. பந்தயத்தில் முதல் குதிரைக்கும் அடுத்த குதிரைக்குமான இடைவெளியை இப்படி Horse Length கொண்டுதான் கணக்கிடுவார்கள்.) முதல் வெற்றியே முத்திரைப் பதித்த வெற்றி.
அடுத்த 30 நாள்களுக்குள் மேலும் நான்கு போட்டிகளில் மேன் ஓ’வார் கலந்துகொண்டது. அந்த நான்கிலும் முதலிடம் பிடித்தது. கேலரியில் இருந்தவர்கள் சிலிர்த்தார்கள். அட, இந்தக் குதிரைதான் இனி பந்தயங்களை ஆளப்போகிறது என்று வியந்து பேச ஆரம்பித்தார்கள். அமெரிக்கப் பத்திரிகைகளும் மேன் ஓ’வாரைக் கொண்டாடின.
1913, ஆகஸ்ட் 13. நியூயார்க்கின் சாராடோகா பந்தயக் களத்தில் மேன் ஓ’வார் களம் இறங்கியிருந்தது. போட்டி ஆரம்பமான நொடியில் தன் பாய்ச்சலைத் தாமதப்படுத்திவிட்டது. பிற குதிரைகள் பாய்ந்தோட, மேன் ஓ’வார் ஒரு சில நொடிகள் தாமதமாகத் தொடங்கினாலும் வேகமெடுத்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.
கண்ணிமைக்கும் நொடியில் இரண்டாவது இடத்துக்கு விரைந்தது. எல்லைக் கோட்டை முதல் குதிரை கடந்தபோது, மேன் ஓ’வார் அதன் கழுத்துப் பகுதிக்கு அருகில்தான் இருந்தது. முதல் தோல்வி. ஒரே தோல்வியும்கூட. அடுத்த பந்தயத்திலேயே தன்னைத் தோற்கடித்த அதே குதிரையை, அதே பந்தயக் களத்தில், ‘ஒரு குதிரை நீளம்’ வித்தியாசத்தில் வென்று வெற்றியுடன் கனைத்தது.
1919ஆம் ஆண்டில் மேன் ஓ’வார் கலந்துகொண்ட பந்தயங்கள் மொத்தம் 10. அதில் வெற்றி 9. 1920ஆம் ஆண்டில் கலந்துகொண்ட பந்தயங்கள் மொத்தம் 11. அதில் அனைத்திலும் வெற்றி. இதற்கு மேல் மேன் ஓ’வார் பந்தயங்களில் கலந்துகொள்ளாது, அது ஓய்வு பெற்றுவிட்டது என்று ரிடில் அறிவித்தபோது, அமெரிக்காவே அதிர்ச்சி அடைந்தது. கலந்துகொண்ட 21 பந்தயங்களில் 20இல் வென்றிருந்த மேன் ஓ’வார், சுமார் 2.49 லட்சம் டாலர் வரை சம்பாதித்து அமெரிக்காவின் சூப்பர் ஸ்டார் குதிரையாகத் திகழ்ந்தது.
அதுவும் 1920, செப்டம்பர் 4 பெல்மாண்ட் பந்தயக் களத்தில் முதலிடம் வந்த மேன் ஓ’வாருக்கும், இரண்டாமிடம் பிடித்த குதிரைக்குமான வித்தியாசம், நூறு குதிரை நீளத்துக்கும் மேல். அசுர வேக சாதனை அது. அப்பேர்ப்பட்ட குதிரையை இவ்வளவு சீக்கிரமாகவே பந்தயக் களத்திலிருந்து விலக்குவதை யாருமே விரும்பவில்லை. அதனால்தான் வேகனர் வெற்றுக் காசோலையை நீட்டி மேன் ஓ’வாரை விலைக்குக் கேட்டார். ரிடில் தன் முடிவை மாற்றிக்கொள்ளவே இல்லை.
பந்தயத்தில் கலந்துகொள்ளா விட்டாலும் மேன் ஓ’வாரைப் பார்ப்பதற்காகவே அமெரிக்கர் களும் பிற நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதனைத் தேடிவந்தார்கள். ஓய்வுக்குப் பின்னும் நிதானமாக ஓட்ஸை அசைபோட்டபடி தன் புகழால் சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருந்தது மேன் ஓ’வார். இதய நோயால் பாதிக்கப்பட்ட அது, 1947ஆம் ஆண்டில் தனது 30வது வயதில் இறந்தது.
அதன் இறுதிச் சடங்கு என்.பி.சி. வானொலியில் நேரடி வர்ணனையாக ஒலிபரப்பானது. அமெரிக்காவே தங்கள் சூப்பர் ஸ்டார் குதிரைக்காகக் கண்ணீர் சிந்தியது. இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பந்தயக் குதிரையாகப் பெருமை பெற்ற மேன் ஓ’வாரை, ஒரே ஒருமுறை தோற்கடித்து ‘அப்செட்’ செய்த அந்தக் குதிரையின் பெயர் தெரியுமா? Upset.
(சந்திப்போம்)
- writermugil@gmail.com