உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றைத் தூண்டிச் செயல்படுத்துவதற்கும் ‘பிட்யூட்டரி சுரப்பி’ (Pituitary gland) இருக்கிறது. நாளமில்லாச் சுரப்பிகளுக்கு எல்லாம் தலைவன் (Master gland) இது.
மூளையின் அடிப்புறத்தில் கபாலத்தின் மத்தியில் ஸ்பீனாய்டு (Sphenoid) எனும் எலும்பு இருக்கிறது. அதில் உள்ள சிறு பள்ளத்தில் இது மிகவும் பாதுகாப்பாக அமைந்திருக்கிறது. இதற்கு ‘ஹைப்போபிஸிஸ்’ (Hypophysis) என்ற பெயரும் உண்டு.
மரத்தில் பழம் தொங்குவதைப்போலத்தான் இது மூளையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதை மூளையின் முக்கியப் பகுதியான ‘ஹைப்போதலாமஸு’டன் இணைக்கும் காம்புக்கு ‘இன்ஃபண்டிபுலம்’ (Infundibulum) என்று பெயர்.
அளவுக்கும் ஆற்றலுக்கும் தொடர்பில்லை என்று சொல்வதற்குச் சிறந்த உதாரணம் இது. அரை கிராம் எடையில் ஒரு பச்சைப் பட்டாணி அளவுக்குத்தான் இது இருக்கிறது. ஆனால், இது செய்யும் பணிகளோ பிரமிக்க வைக்கின்றன.
அமைப்பு ரீதியாக இந்தச் சுரப்பி இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. 1. முன்பகுதி அடினோஹைப்போபிஸிஸ் (Adenohypophysis). 2. பின்பகுதி நியூரோஹைப்போபிஸிஸ் (Neurohypophysis). முதலாவதில் சுரப்பித் திசுக்கள் உள்ளன. இரண்டாவதில் நரம்புத் திசுக்கள் உள்ளன.
இதன் செயல்பாட்டை வைத்துப் பார்த்தால், மூன்று பகுதிகள் உள்ளன. 1. முன் மடல், 2. இடை மடல், 3. பின் மடல். முன்மடல் முக்கியமான இரண்டு ஹார்மோன்களையும் நான்கு ஊக்குவிப்பு ஹார்மோன்களையும் சுரக்கிறது. அவை: 1. வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone) அல்லது ‘ஸொமேடோட்ரோடிபின்’ (Somatotrophin). 2. புரோலாக்டின் (Prolactin). 3. தைராய்டு ஊக்குவிப்பு ஹார்மோன் (TSH). 4. கார்ட்டிகோட்ரோபின் (Corticotrophin). 5. ஃபாலிக்கிள் ஊக்குவிப்பு ஹார்மோன் (FSH). 6. லூட்டினைஸிங் ஹார்மோன் (LH).
எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி உள்ளிட்ட உடலின் மொத்த வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது வளர்ச்சி ஹார்மோன். குறிப்பாக, ஒருவரின் உயரத்தையும் அதற்கான உடலமைப்பையும் கவனித்துக்கொள்வது இதுதான். விதிவிலக்காக, மூளை வளர்ச்சி, முடி வளர்ச்சி, பாலுறுப்பு வளர்ச்சி இந்த மூன்றையும் இது கவனிப்பதில்லை.
உணவில் உள்ள மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, தாதுச்சத்து ஆகியவற்றைத் திசுக்களில் முறையாக வளர்சிதைமாற்றம் அடையச் செய்து உடலின் வளர்ச்சியை இது பேணுகிறது. இதன் சுரப்பு குறைந்தால் ‘குள்ளத்தன்மை’யும் (Dwarfism), சுரப்பு அதீதமானால் ‘நெட்டைத்தன்மை’யும் (Gigantism) ஏற்படுகின்றன.
புரோலாக்டின் ஹார்மோன் பெண்களுக்கு மார்பக வளர்ச்சியைக் கவனிக்கிறது. பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் சுரப்பைத் தூண்டுகிறது. தைராய்டு ஊக்குவிப்பு ஹார்மோன் தைராய்டு சுரப்பியைத் தூண்டி, தைராக்ஸின் (Thyroxine), டிரைஅயோடோதைரோனின் (Triiodothyronine) எனும் இரண்டு முக்கியமான ஹார்மோன்களைச் சுரக்க வைக்கிறது.
கார்ட்டிகோட்ரோபின் அண்ணீரகச் சுரப்பிகளைத் (Adrenal glands) தூண்டி கார்ட்டிகோஸ்டீராய்டுகள், பாலுணர்வு ஹார்மோன்களைச் சுரக்க வைக்கிறது. ஃபாலிக்கிள் ஊக்குவிப்பு ஹார்மோனும் லூட்டினைஸிங் ஹார்மோனும் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன.
இடை மடலில் மெலனோசைட் ஊக்குவிப்பு ஹார்மோன் (MSH) சுரக்கிறது. இது கார்ட்டிகோட்ரோபின் துணையுடன் தோலில் மெலனின் அணுக்களின் உற்பத்தியைக் கவனித்துக்கொள்கிறது. இதனால்தான் நம் தோலின் நிறம் கறுப்பாக இருக்கிறது.
அடுத்தது, பின் மடல். இதில் நேரடியாக எந்த ஹார்மோனும் சுரக்கப்படவில்லை. ஹைப்போதலாமஸில் சுரக்கிற வஸோபிரஸின், ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் இங்கு சேமிக்கப்பட்டு இதன் வழியாக வெளியேறுகின்றன. வஸோபிரஸின் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக்கொள்ளும் முக்கிய ஹார்மோன். இது உடலுக்குத் தேவையான உப்புகளைச் சிறுநீரகம் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. உடலில் தண்ணீரின் அளவைச் சமநிலைப்படுத்துகிறது.
ரத்தத்தில் உள்ள வேதிப்பொருள்களின் அளவைச் சீராக்குகிறது. சிறுநீர் வெளியேறும் அளவையும் அதன் தன்மையையும் ஒழுங்குபடுத்துகிறது. இதன் சுரப்பு குறைந்தால், ‘சர்க்கரையில்லா நீரிழிவு’ (Diabetes insipidus) ஏற்படுகிறது. ஆக்ஸிடோஸின் ஹார்மோன் பெண்களுக்குப் பிரசவம் ஆவதிலும், தாய்ப்பால் வெளியேறும் அளவைக் கட்டுப்படுத்துவதிலும் பங்களிக்கிறது.
உடலில் எந்த ஒரு ஹார்மோனும் ஒரே சீராகச் சுரந்தால்தான் ஆரோக்கியம் சிறக்கும். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்று கூறுவது ஹார்மோன் சுரப்புகளுக்கு மிகவும் பொருந்தும். இந்தச் சுரப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உடலில் ஓர் அமைப்பு இருக்கிறது. ‘ஹைப்போதலாமஸ் - ஹைப்போபிஸிஸ் அச்சு’ என்பது அதன் பெயர்.
தலைமை அதிகாரி, மேலாளர், ஊழியர்கள் ஆகியோர் வேலை பார்க்கும் ஓர் ஏற்றுமதி நிறுவனத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இங்கு தலைமை அதிகாரி மேலதிகாரியிடம் சொல்வதை, மேலதிகாரி ஊழியர்கள் மூலம் மேற்கொள்கிறார் அல்லவா? அந்த மாதிரிதான் இந்த அமைப்பும் வேலை செய்கிறது.
உதாரணத்துக்கு, ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்றுமதி செய்வதற்குச் சரக்கு இல்லை எனும் தகவல் தலைமை அதிகாரிக்குச் சென்றதும், அவர் சரக்கை உற்பத்தி செய்ய மேலாளருக்குக் கட்டளையிடுகிறார். மேலாளர் ஊழியர்களுக்கு அந்தப் பணியைப் பிரித்துத் தருகிறார். ஊழியர்கள் சரக்கை உற்பத்தி செய்கிறார்கள். இதேபோன்று, உடலில் ஹார்மோன்கள் குறையும்போது, அந்தத் தகவல் முதலில் ‘தலைமை அதிகாரி’ ஹைப்போதலாமஸுக்குச் செல்லும். உடனே அது சில விடுவிப்பு ஹார்மோன்களை (Releasing hormones) வெளிவிடும். அவை பிட்யூட்டரி எனும் மேலாளரிடம் வந்து, ஊக்குவிப்பு ஹார்மோன்களைச் சுரக்கச் செய்யும்.
பிறகு அவை நாளமில்லாச் சுரப்பிகள் எனும் ஊழியர்களிடம் சென்று தேவையான ஹார்மோன்களைச் சுரக்கச் செய்யும். இவை தேவைக்குச் சுரந்ததும், ‘இனி சரக்குத் தேவையில்லை’ என்று சொல்வதைப்போல், ‘ஹார்மோன் சுரப்பு போதும்’ என்னும் தகவல் ஹைப்போதலாமஸுக்கு வரும். உடனே, விடுவிப்பு ஹார்மோன்கள் சுரப்பதை அது நிறுத்திவிடும். இதன் விளைவால், மற்ற சுரப்பிகளும் அந்தந்த ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திக்கொள்ளும். அதன் பிறகு ஹார்மோன் தேவைப்பட்டதும், ஹைப்போதலாமஸ் ஆணைப்படி இந்தச் சுழற்சி மீண்டும் ஆரம்பிக்கும்.
இப்படி, ஒரு துல்லியமான சுழற்சியாக, நுட்பமான அச்சில் நாளமில்லாச் சுரப்பிகள் நம் உடலில் பணி செய்கின்றன. இந்தச் செயல்பாட்டுக்கு ‘எதிர் பின்னூட்ட முறை’ (Negative feed back system) என்று பெயர்.
பிட்யூட்டரி சுரப்பி தலைவனாகவே இருந்தாலும் ஹைப்போதலாமஸ் எனும் தலைமை அதிகாரியின் ஆணைப்படிதான் இயங்குகிறது. இதன் காரணமாக நரம்பு மண்டலத்தையும் நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தையும் இணைக்கும் பாலமாக ஹைப்போதலாமஸ் இருக்கிறது.
(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com