உலகின் முதல் மனிதன் ஆதாம் என்பதற்கு அறிவியல்ரீதியான ஆதாரம் உண்டா, டிங்கு? - ஜி. இனியா, 9-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
பரிணாம வளர்ச்சியில் ஒவ்வோர் உயிரினமும் உருவாவதற்குப் பல கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. மனிதனும் அதே போல குரங்குக்கும் மனிதனுக்கும் முன்னால் இருந்த மூதாதையரிடமிருந்து பிரிந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துதான் மனிதனாக முழுமை அடைந்திருக்கிறான்.
உலகில் தோன்றிய முதல் மனிதன் என ஆதாமை அறிவியல் சொல்லவில்லை. மத நூல்கள்தான் சொல்கின்றன. அவை சொல்வது போல ஒரே நாளில் எந்த உயிரினமும் படைக்கப்படவில்லை. ஒவ்வோர் உயிரினமும் கோடிக்கணக்கான ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று முழுமையடைந்துள்ளன. அதனால் உலகின் முதல் மனிதர்கள் ஆதாமோ ஏவாளோ இல்லை, இனியா.
வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது, டிங்கு? - வி. தருண் குமார், 9-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, அனவரதநல்லூர், தூத்துக்குடி.
நம் கண்களுக்கு வெண்மையாகத் தோன்றும் சூரிய ஒளி, வானவில்லின் அனைத்து வண்ணங்களின் கலவைதான் என்பது உங்களுக்குத் தெரியுமா? சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை அடையும்போது, காற்று மற்றும் மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படுகிறது.
அப்போது சிவப்பு நிறத்தைவிட நீல வண்ணம் குறுகிய அலைநீளமும் குறைவான அதிர்வெண்களையும் கொண்டதால், அதிக அளவில் சிதறடிக்கப்படுகிறது. அதனால் வானம் பெரும்பாலும் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது, தருண் குமார்.