ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரெஞ்சு மக்கள் பாரிஸில் கூடியிருந்தனர். அரசர் பதினான்காம் லூயி, தன் அரசி மேரியுடன் வந்திருந்தார். எல்லாரும் அந்த அதிசய நிகழ்வுக் காகக் காத்திருந்தனர். பிரான்ஸைச் சேர்ந்த ஜோசப் மாண்ட்கோல்ஃபயர், ஜேக்ஸ் மாண்ட்கோல்ஃபயர் சகோதரர்கள் ராட்சச பலூன் ஒன்றைத் தயாராக வைத்திருந்தனர். இது எப்படி வானில் பறக்கும்? மேலே செல்லச் செல்ல வெடித்துவிடுமோ? மேலே சென்ற பலூனைக் கீழே இறக்க முடியுமா என்று எல்லாம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியபடி கூட்டம் காத்திருந்தது.
ராட்சச பலூன்களைக் கொண்டு வானில் பறக்கும் முயற்சிகள் வரலாற்றில் நீண்ட காலமாகவே நடைபெற்று வந்தன. ஆனால், அதுவரை யாராலும் அதை வெற்றிகரமாக, நீண்ட தூரத்துக்குப் பறக்க வைக்க இயலவில்லை. 1783ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று மாண்ட்கோல்ஃபயர் சகோதரர்கள் பறப்பதற்கான பலூனைத் தயாராக வைத்திருந்தாலும், பலூனுக்குள் ஏறுவதற்குத் தயாராக இல்லை. உயிர் மீதிருந்த பயம். ஆனால், யாரையாவது பலூனில் ஏற்றி அனுப்பினால்தானே சாதனைக்கு மதிப்பு.
யாரை அனுப்பலாம்? ஒருவரும் முன்வரவில்லை. ஆகவே, ஆடு ஒன்றைப் பிடித்தார்கள். அதனிடம் சம்மதம் கேட்க வேண்டும் என்கிற அவசியம் எல்லாம் இல்லை. அதனை பலூனுக்குக் கீழ் கட்டியிருந்த கூடையில் ஏற்றினார்கள். அதற்குத் துணையாக வாத்து ஒன்றையும் கோழி ஒன்றையும் உள்ளே தூக்கிப் போட்டார்கள்.
பலூனுக்குக் கீழே நெருப்பு மூட்டப்பட, காற்று சூடாகி, அதன் அடர்த்தி குறைந்து, ராட்சச பலூன் மேல் நோக்கி எழும்பியது. மக்களின் ஆரவாரத்தில் அந்த ஆடு, கோழி, வாத்தின் கதறல் வெளியே கேட்டிருக்க வாய்ப்பில்லை. பலூன் மேலும் மேலும் உயரே சென்றது.
எல்லாரும் வானை நோக்கி வாய்பிளந்து பார்க்க, சுமார் 1500 அடி உயரத்தில், பாரிஸ் நகர வானில் சுமார் 8 நிமிடங்கள் பயணம் செய்தது. சில தடுமாற்றங்களுக்குப் பிறகு அது பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இதுவே வரலாற்றில் பதிவான வெப்பக் காற்று பலூனின் முதல் வெற்றிப் பயணம்.
மாண்ட்கோல்ஃபயர் சகோதரர்கள், அந்த ஆட்டுக்குப் பெயர் ஒன்றைச் சூட்டினார்கள். Montauciel. பிரெஞ்சுச் சொல்லான அதற்குப் பொருள், வானை நோக்கிச் செல்லுதல். ஒரு வெப்பக் காற்று பலூனில் ஆடு பறந்து இறங்கிய பிறகே, மனிதன் அதில் ஏறிப் பயணம் செய்ய ஆரம்பித்தான் என்பது வரலாற்று உண்மை.
ஓர் ஆட்டின் பயம், அதை வரலாற்றுச் சாதனை படைக்க வைத்திருக்கிறது. அந்த ஆண் செம்மறி ஆட்டின் பெயர் ஷ்ரெக். நியூசிலாந்தின் டாராஸ் என்கிற ஊரில் இருந்த ஆட்டுப் பண்ணையில் ஷ்ரெக், 1994ஆம் ஆண்டில் பிறந்தது. ஆண்டுக்கு ஒருமுறை செம்மறி ஆட்டின் உடல் எங்கும் வளர்ந்துகொண்டே போகும் ரோமத்தை (கம்பளியை) வெட்டுவார்கள். ஷ்ரெக்குக்கு அது பிடிக்கவில்லை.
ஒருமுறை அது, தன் ரோமத்தை நீக்கி விடுவார்களோ என்று பயந்து, அருகிலிருந்த குகை ஒன்றில் ஒளிந்து கொண்டது. பண்ணையாள்களின் கண்களில் படாமல் மேய்ந்துவிட்டு, தினமும் குகைப் பகுதியில் பதுங்கிக் கொண்டது.
பண்ணையாள்கள், ஷ்ரெக் என்கிற ஆட்டையே ஆண்டுக்கணக்கில் மறந்து போயிருந்தார்கள். 2004, ஏப்ரல் 15 அன்று, பண்ணையாள் ஒருவரின் கண்ணில் விநோதமாக, உருண்டையாக ஓர் உருவம் தென்பட்டது. அது பயந்து பதுங்கியிருந்த ஷ்ரெக்தான். ஆறு ஆண்டுகள் வரை அதன் உடலில் ரோமம் அகற்றப்படவில்லை என்பதை அவர்கள் கண்டறிந்தார்கள்.
ஷ்ரெக் குறித்த செய்தி நியூசிலாந்து எங்கும் ஒளிப்படங்களுடன் பரவியது. இரண்டு வாரங்கள் கழித்து அதற்கு ரோமம் அகற்றப்பட்டது. ஓர் ஆண்டில் ஒரு செம்மறி ஆட்டிடம் இருந்து 4.5 கிலோ வரை ரோமம் கிடைக்கும் என்றால், அப்போது ஷ்ரெக்கிடமிருந்து 27 கிலோ ரோமம் வெட்டி எடுக்கப்பட்டது.
அதன் பிறகு நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஷ்ரெக் கௌரவிக்கப்பட்டது. ஷ்ரெக்கின் ரோமம் விற்ற காசு, அதை வைத்து கண்காட்சி நடத்தி திரட்டிய பணம் எல்லாவற்றையும் குழந்தைகள் நலநிதிக்காக ஒதுக்கினர். இப்படியாக, பயந்து ஒதுங்கி, புகழ் வெளிச்சத்தில் சிக்கிக்கொண்டது ஷ்ரெக்.
Mary had a little lamb பாடலை எல்லாருமே பாடியிருப்போம். மேரியிடம் ஓர் ஆட்டுக்குட்டி இருந்தது. ஒருநாள் அது அவளுடன் பள்ளிக்கு வந்தது. குழந்தைகள் எல்லாரும் அதைப் பார்த்துச் சிரித்தார்கள் என்று அந்தப் பாடல் நீளும். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதெல்லாம் நிஜமாகவே நடந்த சம்பவங்களே. அமெரிக்காவின் நியூ ஹாம்ஷர் மாகாணத்தில் நியூபோர்ட் என்கிற ஊர் இருக்கிறது. அங்கே சாரா ஹேல் என்கிற பெண் தனது வீட்டுக்கு அருகில் சிறு குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை அமைத்தார்.
ஒருநாள் காலை அவரின் மாணவியான மேரி வகுப்புக்குள் நுழைந்தாள். அவள் பின்னாலேயே ஆட்டுக்குட்டி ஒன்றும் சத்தமின்றி நுழைந்தது. வகுப்பில் இருந்தவர்கள் ‘ஹோ’ என்று சத்தம் எழுப்ப, சாரா ஆச்சரியத்துடன் மேரியைப் பார்த்தார். வகுப்புக்கு ஆட்டுக்குட்டியை எல்லாம் அழைத்துவரக் கூடாது என்று அதனை வெளியில்விடச் சொன்னார்.
பள்ளி முடியும் வரை ஆட்டுக்குட்டி மேரியைப் பார்க்க முடியாமல் அங்கும் இங்கும் பரிதவித்தது. ‘இந்த ஆட்டுக்குட்டி மேரியை ஏன் இவ்வளவு நேசிக்கிறது?’ என்று குழந்தைகள் கேட்க, ‘ஏனென்றால் மேரியும் தன் ஆட்டுக்குட்டியை அவ்வளவு நேசிக்கிறாள்’ என்றார் சாரா.
சாரா ஹேல்தான் பிறகு Mary had a little lamb பாடலை எழுதினார். 1830ஆம் ஆண்டில் வெளியான சாராவின் கவிதை நூல் ஒன்றில் அந்தப் பாடல் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. 1876ஆம் ஆண்டில் மேரி டெய்லர் என்கிற அமெரிக்கப் பெண், ‘Mary had a little lamb’ பாடலில் வரும் மேரி நான்தான். சிறுவயதில் நான்தான் என் ஆட்டுக்குட்டியைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றேன்’ என்றார். அதற்குச் சில ஆதாரங்களையும் அவர் கொடுத்தார். மேரியின் ஆட்டுக்குட்டி இன்னமும் பள்ளிகளில் சுற்றிக் கொண்டிருக்கிறது, பாடலாக!
(சந்திப்போம்)
- writermugil@gmail.com