நிலவிலிருந்து நேராக பூமியில் குதிக்க முடியுமா, டிங்கு? - ஜ.சை. அன்சஃப், 9-ம் வகுப்பு, செயிண்ட் பிரான்சிஸ் அசிசி மெட்ரிக். பள்ளி, மாரத்தா, கன்னியாகுமரி.
ஒரு பாரசூட்டி லிருந்து பூமியில் குதிப்பதைப் போல் நிலவிலிருந்து குதிக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். பூமிக்கும் நிலவுக்கும் தொலைவு மிக மிக அதிகம். நிலவும் ஒரு குறுங்கோள். அதற்கும் ஈர்ப்பு விசை உண்டு. ஆனால், பூமியைவிட குறைவான ஈர்ப்பு விசை. ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல் நிலவிலிருந்து குதிப்பதாக வைத்துக்கொண்டாலும் நேராகப் பூமியில் வந்து விழ முடியாது.
பூமியின் ஈர்ப்பு விசை அவ்வளவு தூரத்துக்கு இருக்காது. அதனால் நிலவின் குறைவான ஈர்ப்பு விசையால் விண்வெளியில் மிதந்துகொண்டுதான் இருக்க முடியும். எனவே நிலவிலிருந்து பூமியில் குதிக்க முடியாது. நிலவிலிருந்து பூமிக்கு வர வேண்டும் என்றால், விண்கலத்தின் மூலம் மட்டுமே வர முடியும், அன்சஃப்.
அனைத்துத் தாவரங்களின் இலைகளும் ஏன் ஒரே சுவையுடன் இல்லை, டிங்கு? - த. அஸ்வதி, 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.
ஒவ்வொரு வகைத் தாவரமும் இயல்பிலேயே வித்தியாசமானது. அதேபோல வேதிக் கலவையிலும் வித்தியாசமானது. பூச்சிகள், சூழலுக்கு ஏற்றபடி தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த வேதிப்பொருள்களைத் தாவரங்கள் உற்பத்தி செய்கின்றன. மரபணுக்கள், மண், காலநிலை போன்ற காரணிகளால் இலைகளின் சுவை ஒவ்வொரு தாவரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது, அஸ்வதி.