மாயா பஜார்

வீர தீர சூர ராணி மச்லி! | வரலாறு முக்கியம் மக்களே! - 04

முகில்

‘மச்லிக்குப் பற்கள் எல்லாம் கொட்டிவிட்டன. அதனால் சாப்பிட முடியவில்லை. அதனை ஏதாவது உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்துப் பராமரிக்கலாம்’ என்று அந்தப் புலியின் மீது கொண்ட அன்பால் சிலர் சொன்னார்கள். ‘வனத்தின் ராணியாக வாழ்ந்த புலியை உயிரியல் பூங்காவுக்கு அனுப்புவது எல்லாம் அதை அவமானப்படுத்தும் செயல்’ என்று இன்னும் சிலர் அதே அன்புடனும் பரிவுடனும் அந்த யோசனையை மறுத்தார்கள். ‘மச்லி, ரந்தம்பூர் தேசியப் பூங்காவின் கம்பீரமான அடையாளம். அது அங்கேயேதான் கடைசி மூச்சுவரை இருக்க வேண்டும்’ என்று சில வனவிலங்கு ஆர்வலர்கள் அழுத்தமாகக் குரல் கொடுத்தார்கள்.

ஏனெனில் ரந்தம்பூருக்கு மிகப்பெரிய கௌரவத்தையும் புகழையும் பணத்தையும் சம்பாதித்துக் கொடுத்தவள் அவள். அன்றைக்கு உலகின் வயதான புலி, மச்லி! 1996ஆம் ஆண்டில் ராஜஸ்தானின் ரந்தம்பூர் தேசியப் பூங்காவில் பிறந்தது அந்த வங்கப் பெண் புலிக்குட்டி. அதன் முகத்தில் மீன் போன்ற சின்னம் இருந்தது.

அவள் அம்மா புலியின் உடலிலும் அப்படி ஒரு சின்னம் இருந்ததால் ‘மச்லி’ என்று பெயர் வைத்திருந்தனர். அதற்கு இந்தியில் ‘மீன்’ என்று அர்த்தம். அதே பெயரை அந்தத் துறுதுறு பெண் புலிக்குட்டிக்கும் வைத்தனர். குட்டி மச்லிக்கு வழங்கப்பட்ட அடையாள எண், T16. தன்னோடு பிறந்த மற்ற இரண்டு குட்டிகளைவிட, வலிமை கொண்டவளாக, ஆதிக்கம் நிறைந்தவளாக வளர்ந்தாள். இரண்டாவது வயதில் தனியே வேட்டையாடும் திறனைப் பெற்றாள்.

தலைநிமிர்ந்த வலிமையான புலி ஒன்று தன் எல்லைக்குள், தனக்குப் போட்டியாக இன்னொரு புலி இருப்பதை விரும்பாது. அது தாய், தந்தை, சகோதரன், சகோதரி என யாராக இருந்தாலும் விடாது. மச்லி கம்பீரம் நிறைந்த புலியாக நடமாடத் தொடங்கியதும் தனக்கான எல்லையை வகுத்துக்கொண்டது. ரந்தம்பூர் பூங்காவின் முக்கிய இடமான ஏரிப்பகுதியைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்தது. அதற்கு எதிர்ப்புக் காட்டிய தாய்ப்புலியையும் அங்கிருந்து விரட்டி அடித்தது.

இனி, நானே இந்தப் பகுதியின் ராணி! 2004ஆம் ஆண்டில் மச்லி இரண்டு குட்டிகளை ஈன்றது. அடுத்த ஆண்டிலேயே மூன்று குட்டிகள். 2010ஆம் ஆண்டில் மீண்டும் சில குட்டிகள். இப்படியாக மச்லிக்குப் பிறந்தவை 11 குட்டிகள் (7 ஆண்கள், 4 பெண்கள்). ரந்தம்பூரில் குறைவாக இருந்த புலிகளின் எண்ணிக்கை பெருகுவதற்கு மச்லியும் அதன் வாரிசுகளின் பங்களிப்பும் மிகப்பெரியது. புலிக்குட்டிகளை ஆண் புலிகள், பிற விலங்குகள் தாக்க வருவது இயல்பான ஒன்று.

அவற்றைப் பாதுகாக்கத் தாய்ப்புலிகள் போராடுவது உண்டு. மச்லியின் குட்டிகளை எந்த விலங்காலும் அபகரிக்க முடியவில்லை. ‘வா, வந்து பார்’ என்று கம்பீரமாக எதிர்த்து நின்று சண்டை செய்து, தன் குட்டிகளைக் காப்பாற்றி, வளர்த்து ஆளாக்கி, தன் கடமையைச் சரியாக நிறைவேற்றினாள் வீரத்தாய் மச்லி.

இந்தப் பெண் புலியின் வாழ்க்கையில் ஆகச் சிறந்த நிகழ்வு, 2009ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. ஏரிப்பகுதியில் திரிந்த 14 அடி நீள பிரம்மாண்ட முதலை ஒன்றுக்கும் மச்லிக்கும் இடையே பிரச்சினை மூண்டது. முதலை, மச்லியை வீழ்த்தியே தீர வேண்டும் என்று வாயைப் பிளக்க, முதலையை நீருக்குள் செல்லவிடாமல் நிலத்திலேயே புரட்டிப்போட்டது மச்லி.

அந்தப் போராட்டத்தில் அதன் கோரைப்பற்கள் இரண்டும் பறிபோயின. இறுதியில் முதலையின் உயிர், மச்லியிடம் பறிபோனது. அன்றைக்கு அந்த வனப்பகுதிக்குச் சுற்றுலா வந்திருந்த பயணிகள், சண்டைக் காட்சியைக் கண்டு சிலிர்த்தனர். வீடியோவாகப் பதிவும் செய்தனர். அதனால் வீர தீர சூர மச்லியின் புகழ் மேலும் பரவியது. அது ரந்தம்பூரின் பெருமைக்குரிய அடையாளமாக, சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளைப் பெருமளவு ஈர்த்தது.

மச்லியின் உடல் அமைப்பு மற்ற பெண் புலிகளைக் காட்டிலும் கம்பீரமானதாகவும் அழகானதாகவும் இருந்தது. மூர்க்கமான புலி என்றாலும், சுற்றுலாப் பயணிகளைப் பார்த்துப் பார்த்துப் பழகிப் போன மச்லி, அவர்கள் ஒளிப்படங்கள் எடுப்பதற்கேற்ப ஒத்துழைக்கவும் செய்தது. உலகிலேயே அதிக அளவில் படம்பிடிக்கப்பட்ட பெண் புலி என்கிற பெருமை மச்லிக்கு உண்டு.

தவிர, பல்வேறு ஆவணப் படங்களிலும் மச்லி இடம் பெற்றிருக்கிறது. Tiger Queen என்பது மச்லியின் வாழ்க்கையைப் பதிவு செய்த ஆவணப்படம், நேஷனல் ஜியோகிரபிக், அனிமல் ப்ளானட் அலைவரிசைகளில் ஒளிபரப்பானது. Queen of Tigers: Natural World Special என்கிற மச்லி சிறப்பு நிகழ்ச்சி பிபிசியிலும் ஒளிபரப்பாகியிருக்கிறது.

Travel Operators For Tigers என்கிற அமைப்பு, மச்லியை ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’க்குத் தேர்ந்தெடுத்தது. ஏனென்றால் மச்லியைத் தரிசிப்பதற்கென்றே ராஜஸ்தானுக்கு வந்து குவிந்த வெளிநாட்டு, உள்நாட்டுப் பயணிகள் ஏராளம். வருடந்தோறும் சுமார் 1 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு அமைதியாகச் சம்பாதித்துக் கொடுத்தது மச்லி. ஆகவே, இந்திய அரசு மச்லியைக் கௌரவிக்கும் விதமாக, தபால் உறை ஒன்றை வெளியிட்டது.

2014ஆம் ஆண்டில் மச்லி வழக்கமாக உலாவும் வனப்பகுதியில் தென்படவில்லை. ரந்தம்பூரின் ராணி எங்கே என்று எல்லாரும் பதறினார்கள். சுமார் 200 ஊழியர்கள் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். ஒரு மாதம் கழித்து மச்லி தென்பட்டது. ஆரோக்கியமாகவே இருந்தது.

எல்லாரும் கொண்டாடி மகிழ்ந்தனர். 2016. மச்லி தன் பற்கள் அனைத்தையும், ஒரு கண்ணின் பார்வையையும் இழந்திருந்தது. வேட்டையாடும் வலிமையும் இல்லை. தான் ஆண்ட வனப்பகுதியையும் அது இன்னொரு புலியிடம் பறிகொடுத்திருந்தது. வன ஊழியர்கள் மச்லி இருக்கும் பகுதியில் இரையைப் போட்டுச் சென்றனர். உயிரியல் பூங்காவுக்கு அதை அனுப்பலாம் என்றெல்லாம் யோசனைகள் சொல்லப்பட்டன.

ரந்தம்பூரின் ராணி, அது ஆண்டு அனுபவித்த வனத்திலேயே கௌரவமாகத் தன் இறுதி மூச்சை விடட்டும் என்று வனத்துறையினர் முடிவெடுத்திருந்தனர். 2016, ஆகஸ்ட் 18, உலகப் புகழ் மச்லி விடைபெற்றது. மிகுந்த மரியாதையுடன் அதற்குரிய இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இந்த நூற்றாண்டில் அதிகக் காலம் (19 ஆண்டுகள்) உயிர் வாழ்ந்த வங்கப்புலி மச்லிதான்!

(சந்திப்போம்)

- writermugil@gmail.com

SCROLL FOR NEXT