மழைநீரைப் பிடித்து வைத்து, நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்தினாலும் நன்றாக இருக்கிறது. குழாயில் வரும் நீரில் சில நாள்களிலேயே நாற்றமும் புழுவும் வருகிறதே ஏன், டிங்கு? - ஜா. அகமது ஜாபிர், 8-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, அமரடக்கி, புதுக்கோட்டை.
மழை நீர் சுவையோ மணமோ இன்றி, தூய்மையாக உருவாகிறது. அந்த மழை நீர் காற்று மண்டலத்தில் நுழையும்போது தூசு, மகரந்தம், ரசாயனம் போன்றவை சேர்ந்து, பூமியில் விழுகிறது. அப்படி விழும் மழை நீரை நாம் எப்படிப் பிடித்து, வடிகட்டி, பாதுகாக்கிறோம் என்பதைப் பொறுத்து மழை நீர் நீண்ட நாள்களுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கிறது.
குழாயில் வரும் நீர் அப்படிப்பட்டதல்ல. அது ஏரி, குளம் போன்றவற்றில் மழை நீரை பலநாட்கள், மாதங்களுக்குச் சேமித்து, மனிதர்கள் பயன்படுத்தும் விதத்தில் பாதுகாப்பாக இருப்பதற்காகச் சுத்திகரிக்கப்பட்டு, குளோரின் சேர்க்கப்பட்டு பயன்பாட்டுக்கு வருகிறது. அதனால் மழை நீரைவிட, குழாய் நீர் விரைவில் கெட்டுப் போகிறது, அகமது ஜாபிர்.
கலங்கரை விளக்கம் எப்போது முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது, டிங்கு? - ஜி. இனியா, 9-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
எப்போது என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. மிகப் பழங்காலத்திலேயே கப்பல்களுக்கு கரையைக் காட்டுவதற்காக மலை உச்சிகளில் நெருப்பை ஏற்றி வைத்திருக்கிறார்கள். பொ.ஆ.மு. (கி.மு.) 280இல் எகிப்தியர்கள் அலெக்சாண்ட்ரியா நகரில் ஓர் உயரமான அமைப்பைக் கட்டி கலங்கரை விளக்கமாகப் பயன்படுத்தினர்.
ரோமானியர்கள் அதிக அளவில் கலங்கரை விளக்கங்களைக் கட்டினர். 18ஆம் நூற்றாண்டில் கலங்கரை விளக்கங்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வந்தன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மின்சாரம், தானியங்கி அமைப்புகள் கலங்கரை விளக்கத்துக்குள் நுழைந்தன. இன்றைய நவீனத் தொழில்நுட்பக் காலத்தில் கலங்கரை விளக்கங்களின் தேவை குறைந்துவிட்டது, இனியா.