மாயா பஜார்

புறாக்களின் மொழி | உயிரினங்களின் மொழி - 23

நஸீமா ரஸாக்

மனிதர்கள் ஆரம்பக் காலத்திலிருந்தே செய்தியைப் பரிமாறிக் கொள்ளப் புறாக்களைப் பயன்படுத்தினார்கள். முதல் உலகப் போரில் Cher Ami என்கிற ஆண் புறா 25 மைல் தூரத்தைக் கிட்டத்தட்ட 25 நிமிடங்களில் கடந்து, ஒரு முக்கியமான செய்தியைக் கொண்டு சென்றதன் மூலம், ’Lost Battalion’ என்று அறியப்பட்ட ஒரு படைப்பிரிவையே காப்பாற்றியது. அஞ்சல் பறவைகள் என்று அழைக்கப்படும் இவை தங்களுக்குள் தொடர்புகொள்ளத் தனித்துவமான வழிகளை வைத்துள்ளன. ஒலி, உடல் மொழி, பறக்கும் விதம் போன்றவற்றை இதற்காகப் பயன்படுத்துகின்றன.

புறா என்றால் அதன் ’கூ.. கொ... கொக்..’ என்கிற கூவல்தான் நினைவுக்கு வரும். ஆனால், அந்தக் கூவலின் தன்மை, அளவு, தொடர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடும். மெல்லிய ’குறுகுறு’ ஒலிகள் அவற்றின் உணர்வுகளை, தேவைகளை மற்ற புறாக்களுக்குத் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஆண் புறா தன் துணையை ஈர்க்க, குறுகுறு சத்தத்துடன், உடல் மொழியையும் இணைத்துச் செயல்படுத்தும்.

ஒரு புறா பறக்கும்போது திடீரெனத் திசைமாற்றம் செய்தால், மற்ற புறாக்கள் அச்சத்தை உணர்ந்து, அதன் திசையில் பறக்கத் தொடங்கும். இதுவே புறாக்களின் ’பறக்கும் மொழி’. இதன் மூலம் அபாயங்களைத் தவிர்க்கவும் குழுவாகச் செயல்படவும் புறாக்கள் பழகியிருக்கின்றன. இனப்பெருக்கக் காலத்தில் இரண்டு புறாக்கள் எதிரெதிராக நின்று, அவற்றின் அலகுகளைத் தட்டி ஒரு தனித்துவமான ஒலியை எழுப்பும். இதன் மூலம் மற்ற புறாக்கள், காதல் புறாக்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்.

பெரிய புறாக்கள் போல் அல்லாமல் குஞ்சு புறாக்கள் தனித்துவமான ஒலிகளைக் கொண்டுள்ளன. அவற்றில் முணுமுணுப்புடன் கூடிய சின்ன கொக்.. கொக்கும், மெல்லிய விசில் ஒலியும் அடங்கும். இந்த ஒலிகள் தேவைகளை வெளிப்படுத்தவும், பெற்றோருக்கு அபாயம் குறித்து எச்சரிக்கை செய்யவும் பயன்படுகின்றன.

புறாக்கள் தெளிவான பார்வைக்காகத் தலையை அசைக்க வேண்டும். அது பரபரப்புடன் இருக்கும் போது தலையை வேகமாக முன்னோக்கி அசைப்பதைக் காணலாம். அதுவே அமைதியாக இருக்கும் போது தலையும் ஓர் இடத்தில் நிற்கும். அதன் இறகுகளின் நிலையைப் பார்த்து அதன் மனநிலையை அறிந்துகொள்ளலாம். தளர்ந்த இறகுகளைப் பார்க்கும்போது புறா, சௌகரியமாக இருக்கிறது என்று அர்த்தம். அதுவே உப்பிய இறகுகள், அசௌகரியத்தைக் குறிக்கின்றன.

ஆண் புறா துணையைத் தேடும்போது, கழுத்து இறகுகளை விரித்து, பெண்ணின் முன்னால் குனிந்து, சுற்றித் திரியும். அந்த நேரத்தில் கழுத்து இறகுகளையும் விரித்து, வால் இறகுகளைத் தரையில் இழுத்துக்கொண்டு செல்வதும் நடக்கும். புறாக்கள் ஒரே பயணத்தில் நூற்றுக்கணக்கான மைல்களைக் கடக்கும் திறனைக் கொண்டுள்ளன. அவை பூமியின் காந்தப்புலத்தைப் பயன்படுத்தி பாதையை அமைத்துக்கொள்ளும். இந்தத் தனித்திறமை மூலம், வழித்தடங்களை அவை ஞாபகம் வைத்துக் கொள்கின்றன.

பொ.ஆ.மு. 1350-இல் எகிப்தில் புறாக்களை அதிகமாகத் தகவல் தொடர்புக்காகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நைல் நதியின் வெள்ளம் பற்றிய செய்தியைத் தெரிவிக்க புறாக்கள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

நகர்ப்புறப் புறாக்கள் தங்களுடைய ஒலிகளை நகர்ப்புறச் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டுள்ளன. நகரங்களில் இரைத் தேடலின் போது சிதறிய குழுக்களை ஒன்று சேர்க்க, அதிக சத்தத்துடன் கத்துகின்றன. இதே கிராமப்புறத்தில் இருக்கும் புறாக்கள் ஒலியில் சிறிய வேறுபாடு தெரியும். இன்றைய ஆராய்ச்சியாளர்கள் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புறாக்களின் தகவல் பரிமாற்றம், ஒலி வேறுபாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கட்டுரையாளர், எழுத்தாளர் | தொடர்புக்கு: writernaseema@gmail.com

முந்தைய பகுதி > ஒட்டகங்கள் எப்படித் தகவல் பரிமாறிக்கொள்கின்றன? | உயிரினங்களின் மொழி - 22

SCROLL FOR NEXT