மாயா பஜார்

மீண்டும் சந்திப்போமா? -  கதை

கொ.மா.கோ. இளங்கோ

கடற்கரையில் இருந்த மணல் பொந்துக்குள்ளிருந்து வெளியே வந்தது ஒரு குஞ்சு உள்ளான். “அடேயப்பா, இந்த உலகம் எவ்வளவு அழகு!” என்று நினைத்தது. அம்மா உள்ளான் மற்ற உள்ளான்களுடன் இரை தேடிச் சென்றிருந்தது. ‘எதையாவது சாப்பிடுவோம்’ என்று நினைத்த குஞ்சு உள்ளான், சிறிய கற்களை அலகால் தள்ளிப் பார்த்தது. மணற் குவியலில் இருந்த ஒரு கல்லை அலகால் கொத்தியது. உடனே அந்தக் கல் அசைந்தது! பயத்தில் சற்றுத் தள்ளி நின்றது.

சில நிமிடங்களில் மணல் குவியலிலிருந்து ஒரு தலை எட்டிப் பார்த்தது. இதுவும் ஒரு பறவைதான் போல என்று உள்ளான் நினைத்தது. “நான் பறவை இல்லை. கடல் ஆமை” என்றதும் உள்ளானுக்கு வியப்பு. “ஓ! அப்படியா? நீ கறுப்பு நட்சத்திரம் போல இருக்கிறாய்” என்று புகழ்ந்த உள்ளான், அடுத்தடுத்து வெளியே வந்த நூற்றுக்கணக்கான குஞ்சு ஆமைகளைப் பார்த்தது. அதற்குள் அந்த ஆமை, “பேசிக்கொண்டே இருக்காதே. பசிக்கிறது. ஏதாவது சாப்பிடத் தருகிறாயா?” என்றது.

“என் அம்மா உணவு தேடிப் போயிருக்கிறார்” என்று உள்ளான் சொல்ல, கூடியிருந்த ஆமைகள் ஆரவாரம் செய்தன. “எல்லாரும் சீக்கிரம் வாங்க. நமக்கான உணவைக் கடலில் தேடுவோம்” என்று ஓர் ஆமை அவசரப்படுத்த, முதல் ஆமையும் வேறு வழியில்லாமல் அவற்றுடன் கடலுக்குச் சென்றது. ஆமைகள் போனதும் உள்ளானுக்கு வருத்தமாக இருந்தது. ‘அம்மாவிடம் இந்த ஆமைகளைப் பற்றிக் கேட்கணும்’ என்று நினைத்துக் கொண்டது.

சற்று நேரத்தில் கறுப்பு நிழல் படர்ந்தது. அது தன் அம்மா என்பதை உணர்ந்ததும் உள்ளான் துள்ளிக் குதித்தது. அம்மா உள்ளான் மற்ற பறவைகளுடன் மணலில் இறங்கியதும், குஞ்சு உள்ளான் நடந்ததைக் கூறியது. “அம்மா, நான் புது நண்பர்களைப் பார்த்தேன். இறக்கைகள் இல்லை. துடுப்புகள் இருந்தன. ஆனால், அவை பறப்பதில்லையாம். கடலுக்குள் நீந்துமாம். எல்லாம் கடலுக்குள் போய்விட்டன. என்னால் அவற்றுக்கு உணவு கொடுக்க முடியவில்லை” என்று சொன்னது குஞ்சு உள்ளான்.

“செல்லமே, அவை கடல் ஆமைகள், பறவைகள் அல்ல. நாம் இறக்கையை அசைத்து வானை அளப்போம். அவை, துடுப்பை அடித்து கடலை அளக்கின்றன. நீ கவலைப்படாதே. அவை கடலில் உணவு தேடிக்கொள்ளும்” என்று புன்னகையுடன் சொன்னது அம்மா உள்ளான். உள்ளான் ஆச்சரியத்துடன் தன் அம்மாவைப் பார்த்தது. சற்று நேரத்தில் அங்கு வந்த தலைவர் பறவை, “வலசை காலம் முடிந்து, நாம் நாடு திரும்ப வேண்டும். நாளை காலை விடியலுக்கு முன் தயாராகுங்கள்” என்று சொன்னதைக் கேட்ட குஞ்சு உள்ளானுக்கு அதிர்ச்சி.

‘இனி, என் நண்பன் கடல் ஆமையைப் பார்க்க முடியாதே’ என்கிற கவலை வந்தது. அடுத்த நாள் காலை கூட்டத்தோடு புறப்படும் முன், அம்மா உள்ளான் குஞ்சிடம் ஒரு சிறு குச்சியைத் தந்தது. “அலகில் பத்திரமாகக் கவ்விக்கொள். நீண்ட தூரம் பறக்க வேண்டும். அப்போது இது உதவியாக இருக்கும்.” எல்லாப் பறவைகளும் வானில் பறந்தன. “கீழே இறங்கிப் பறக்கலாம் வா” என்ற அம்மா, கடல் மட்டத்தை ஒட்டி குஞ்சு உள்ளானை அழைத்துச் சென்றது.

“களைப்பாக இருந்தால் குச்சியைக் கடலில் போடு. மிதக்கும் குச்சியில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு பறக்கலாம்” என்ற அம்மா, கடலில் எப்படி ஓய்வெடுக்க வேண்டும் என்று கற்றுத் தந்தது. அம்மா சொன்னது போலவே செய்தது குஞ்சு உள்ளான். திடீரென்று “நண்பா” என்று ஒரு குரல் கேட்டது. குஞ்சு உள்ளான் சத்தம் வந்த திசையைப் பார்க்க, அங்கே கடல் ஆமை நீந்திக் கொண்டிருந்தது.

“உன்னை இனி சந்திப்பேனா என்று கவலையோடு இருந்தேன். நாம் இருவரும் மறுபடியும் சந்தித்துவிட்டோம். களைப்பாக இருக்கிறாய். என் முதுகில் ஏறி ஓய்வெடு” என்றது கடல் ஆமை. ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது உள்ளான். இரண்டும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தன. “அம்மா என்னிடம் தந்த குச்சியில், இன்னும் இரண்டு இலைகள் மிச்சம் உள்ளன. நீ உணவு கேட்டபோது என்னால் தரமுடியவில்லை. இதோ இப்போது சாப்பிடு” என்றபடி, ஆமை இலையைச் சாப்பிடும் வரை காத்திருந்தது உள்ளான்.

“நன்றி! இனி நாம் வெவ்வேறு உலகில் வாழ்ந்தாலும், இன்று சந்தித்த நினைவுகள் மறக்காமல் இருக்கும். நான் நீரோட்டப் பாதையில் பயணிக்க வேண்டும். விடை பெறலாம்” என்று சொல்லிவிட்டு, நீந்த ஆரம்பித்தது கடல் ஆமை. நண்பனைச் சந்தித்த மகிழ்ச்சியில் குஞ்சு உள்ளான் அம்மாவுடன் மறுபடியும் உற்சாகமாகப் பறக்கத் தொடங்கியது. அவற்றின் நட்பில் கடலும் வானும் இணைந்தன.

SCROLL FOR NEXT