ஒட்டகம் ஒரு சமூக விலங்கு. இவை ஒன்றோடு மற்றொன்று தொடர்பு கொள்ள ஒலியை மட்டும் சார்ந்து இருப்பது இல்லை. வாசனை, உடல் மொழி, சில நடத்தைகள் மூலம் தொடர்புகொள்கின்றன. ஒட்டகங்களில் பல்வேறு இனங்கள் உள்ளன. ஆசியக் கண்டத்தில் வாழும் இனங்களும் மத்தியக் கிழக்குப் பகுதிகளில் வாழும் ஒட்டகங்களும் ஒன்றல்ல. மத்தியக் கிழக்கு ட்ரோமெட்ரி ஒட்டகங்களுக்கு ஒரு திமில் இருக்கும். ஆசிய பாக்ட்ரியன் ஒட்டகங்களுக்கு இரண்டு திமில்கள் இருக்கும். இரண்டின் ஒலி தகவல் தொடர்பும் ஓரளவு ஒத்துப்போகின்றன.
ஒட்டகங்கள் கத்தும் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவை அனைத்தும் ஒன்று போல் இருக்காது. சில நேரத்தில் முனகும். சில நேரம் உயர்ந்த அதிர்வெண் அலைவரிசையில் கத்தும். எப்போதாவது கர்ஜிக்கும். ஆனால், இந்தக் கர்ஜனைக்கும் சிங்கத்தின் கர்ஜனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இனப்பெருக்கக் காலத்தில் ஆண் ஒட்டகங்கள், தொண்டைக்குள் 5 – 10 விநாடிகள் வரை காற்றை அடைத்து வைத்துக் கொள்கின்றன. பின்பு, துல்லா என்கிற உறுப்பின் மூலம் வெளியேற்றுகின்றன. அப்போது குர்குர் என்று சத்தம் வரும். இதைப் பெண் ஒட்டகங்களை ஈர்க்கப் பயன்படுத்துகின்றன. அதுமட்டுமன்றி, ஆண் ஒட்டகங்கள் இனப்பெருக்கக் காலத்தில் மற்ற ஆண் ஒட்டகங்களோடு கழுத்து மல்யுத்தம் செய்கின்றன. இதன் மூலம் மற்ற ஆண் ஒட்டகங்கள் தன் குழுவிற்குள் வருவதைத் தடுக்கின்றன.
பொதுவாக இளம் ஒட்டகங்களும் பெண் ஒட்டகங்களும் ஆண்களுக்கு முன் அமைதியான ’முணுமுணுப்பு’ ஒலியை எழுப்புகின்றன. குட்டி ஒட்டகங்கள் தாயுடன் தொடர்பு கொள்ள மெல்லிய ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. இது முனகல் போல் இருக்கும். அவையும் தங்கள் குட்டிகளை அழைக்கும்போது, இதே போன்ற மென்மையான ஒலிகளை எழுப்பும்.
நரி, சிறுத்தை போன்ற விலங்குகளைக் காணும் போது ஒட்டகங்கள் உச்சஸ்தாயில் சத்தமிடுகின்றன. ஒலிகள் மட்டுமல்ல தலை, கழுத்து, காது, வால் போன்ற உறுப்புகளின் அசைவுகளுக்கும் ஒவ்வோர் அர்த்தம் உண்டு. ஒட்டகங்களின் காதுகள், குதிரைகளைப் போல அதிக அசைவுகள் கொண்டவை அல்ல. காதுகளை எச்சரிக்கை சமிக்ஞையாகப் பயன்படுத்துவதில்லை. ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகளின்படி, ஒட்டகங்களின் காதுகள் பின்னோக்கி இருந்தால், அது அதிக ஆர்வத்துடன் இருப்பதைக் குறிக்கிறது.
எப்போதும் உடல் அளவில் தலையைத் தாழ்த்தி வைத்திருக்கும். தேவைப்படும் போது உயர்த்திக் கொள்ளும். உதாரணத்திற்கு மரங்களிலிருந்து இலையை எட்டிப் பறிக்க இப்படிச் செய்யும். ஏதாவது அசௌகரியமான நிலையில் இருக்கும் போதும் தலையை உயர்த்தும். வயதான ஒட்டகங்கள் தலையைக் குனிந்து கழுத்தைக் கொண்டு மற்ற ஒட்டகங்களைத் தள்ளும் நடத்தையைக் கொண்டுள்ளன. வால் முதுகின் மேல் சுருண்டிருந்தால் அது சாதுவான மனநிலையில் இருக்கிறது என்று அர்த்தம்.
ஒட்டகங்கள் கூட்டம் கூட்டமாக வாழும். ஒவ்வொரு கூட்டத்திலும் குறைந்தபட்சம் 2 -20 ஒட்டகங்கள் இருக்கும். கூட்டத்தில் அதிகமாகப் பெண் ஒட்டகங்களும் குட்டிகளும் இருக்கும். ஆண் ஒட்டகங்கள் ஒன்றிரண்டு மட்டுமே இருக்கும். குழுவைச் சேர்ந்த ஒட்டகம் ஒன்று பிரிந்து சென்று, நீண்ட காலத்துக்குப் பிறகு திரும்பி வந்தால், அதன் வாசனையை வைத்து மற்ற ஒட்டகங்கள் அதை அடையாளம் கண்டு கொள்ளும்.
ஓர் ஒட்டகம் மற்ற ஒட்டகத்தின் மீது கழுத்தை வைத்திருப்பது, நட்பின் அடையாளம் . உற்சாகமடையும்போது அல்லது எச்சரிக்கை செய்யும் போது, நாசியை வேகமாக விரித்து மூச்சு விடும். அது போலவே எச்சிலை வெளியேற்றவும் செய்யும்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் ஒட்டகங்கள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் தகவல்கள் குறைவாகவே உள்ளன. பண்டைக் காலம் முதல் பாலைவன மக்களுக்கு உற்றத் துணையாக ஒட்டகங்கள் இருந்து வருகின்றன. எதிர்கால ஆராய்ச்சிகள், ஒட்டகங்களின் தகவல் தொடர்பு முறைகளின் தன்மையை இன்னும் தெளிவாக வெளிப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுரையாளர், எழுத்தாளர் | தொடர்புக்கு: writernaseema@gmail.com
முந்தைய அத்தியாயம்: கரடிகளின் தொடர்பு மொழி | உயிரினங்களின் மொழி - 21