கரடிகள் பெரும்பாலும் தனிமையை விரும்பும் விலங்குகள். ஒலி, உடல் மொழி, வாசனை மூலம் கரடிகள் தம் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றன. ஆராய்ச்சியாளர் கேரி பிரவுன், கரடிகள் பதினோரு விதமான ஒலிகளை வெளியிடுவதாகக் கண்டறிந்துள்ளார்.
கரடிகளின் ஒலி தொடர்பு முறையை மூன்றாகப் பிரிக்கலாம். முதல் நிலையில், நாக்கைச் சொடுக்கும் ஒலியும் முணுமுணுப்பும் அடங்கும். கரடி அமைதியான சூழ்நிலைகளில் இருக்கும் போது இந்த ஒலிகளைப் பயன்படுத்தப்படுகிறது. தாய் கரடிகள் தமது குட்டிகளுடன் பேசுவதற்கும், இணைகளுடன் தொடர்பு கொள்வதற்கும் நாக்கைச் சொடுக்கும்.
இரண்டாம் நிலையில், காற்றை வெளியேற்றுதல் அதாவது நாம் பெருமூச்சு விடுவது போல் இருக்கும். இதை மட்டும் வைத்து என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ள இயலாது. ஊதும் போது அதன் உடல் மொழியையும் கவனிக்க வேண்டும். கரடிகள் பயத்தில் இருக்கும் போது ஊதுவதோடு, பற்களைக் கடிக்கும் சத்தத்தையும் எழுப்புகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் அச்சுறுத்தும் விதமாகத் தோன்றினாலும், உண்மையில் அது பதற்றத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். இப்படி இருக்கும் கரடிகள் ஒருபோதும் அருகில் வந்து தாக்குவது கிடையாது.
மூன்றாம் நிலையானது தீவிரம் கொண்ட ஒலிகள். மனிதர்கள் கோபத்தில் கத்துவது போல் கரடிகளின் அடர்த்தியான சத்தம் வலுவான உணர்வுகளைக் காட்டுகின்றன. பெண் கரடிக்காக இரண்டு ஆண் கரடிகள் சண்டையிடும் போது இந்தச் சத்தத்தைக் கேட்கலாம். அதே போல் தாய் கரடி, ஆண் கரடியிடம் இருந்து குட்டியைக் காப்பாற்றும் போது இப்படிக் கத்தும். வயது முதிர்ந்த கரடிகள் துன்பத்தில் இருக்கும்போது சத்தமிட்டு அழும்.
ஒலிக்கு இருக்கும் முக்கியத்துவம் உடல்மொழிக்கும் உள்ளது. கரடிகளின் உடல்மொழி அவற்றின் மனநிலையையும் நோக்கங்களையும் தெரிவிக்கும் முக்கிய வழி. ஓய்வாக இருக்கும் கரடி, சாவகாசமாக உட்கார்ந்து அல்லது படுத்துக்கொண்டு சுற்றுப்புறத்தைக் கவனிக்கும். அதே பின்னங்கால்களில் கரடி நின்றால், விழிப்புணர்வோடு அல்லது ஆர்வத்தோடு இருக்கிறது என்று அர்த்தம்.
கரடிகள் கவனமாக இருக்கும் போது, காதுகள் நிமிர்ந்து நிற்கும். அதே நேரம் காதுகள் தட்டையாக இருந்தால் அது பயத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். காதுகளைப் போல் வாலின் மூலமும் தொடர்பு மொழியைப் புரிந்துகொள்ளலாம். வால் நின்றிருந்தால், கரடி நம்பிக்கையான சூழலில் இருக்கிறது என்று அர்த்தம். அதே நேரம் சோர்ந்து போயிருந்தால் அசௌகரியத்தைக் குறிக்கும்.
மனிதர்களை அச்சுறுத்தத் தாக்குவது போல் அது செய்யும் செயலுக்கு அர்த்தம், அது அசௌகரியமாக இருக்கிறது என்பது மட்டுமே.
கரடிகள் மரங்களில் தேய்த்து அடையாளம் வைப்பதும் ஒரு முக்கியமான வாசனை தொடர்பு முறை. வாசனை உணர்வு உணவைக் கண்டறிவதற்கு மட்டுமல்லாமல், அவை ஒன்றோடு மற்றொன்று தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. சிறுநீர், மலம், உடலிலிருந்து வரும் வாசனைகள் ஒரு கரடியைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கின்றன. அதாவது வாசனைக்குறிய கரடி இளம் வயதா, முதுமையா, ஆணா, பெண்ணா என்று அனைத்தும் தெரிந்துவிடும்.
கரடிகளில் பல இனங்கள் உள்ளன. அவற்றின் தொடர்பு முறைகளும் வெவ்வேறாக இருக்கின்றன. கருங்கரடிகள் மூச்சை நீண்ட நேரம் வெளியேற்றும். நாய் குரைப்பது போன்ற ஒலியையும் எழுப்பும்.
ரிஸ்லி கரடிகள், பழுப்பு கரடிகள் கர்ஜனைக்குப் பெயர்பெற்றவை. இதன் ஒலி வலுவான அதிர்வெண்களைக் கொண்டது. குறிப்பாக இனப்பெருக்கக் காலத்தில் இதன் சத்தம் அதிகமாக இருக்கும். தமது பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கான இவற்றின் கர்ஜனை நீண்ட தூரம் கேட்கும்.
சான்டியாகோ உயிரியல் பூங்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், சிறைபிடிக்கப்பட்டத் துருவக் கரடிகள் அதிகம் பேசும் குணம் கொண்டவை என்று கண்டறிந்துள்ளனர்.
நவீன ஆராய்ச்சி தொழில்நுட்பங்கள் கரடிகளின் ரசாயனத் தொடர்பின் தன்மையை வெளிப்படுத்தி வருகின்றன. இவற்றின் மூலம் எதிர்காலத்தில் இந்தக் கரடிகளின் மொழியை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். கரடிகளின் தொடர்பு மொழியைப் புரிந்துகொள்வது, அவற்றின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கு அவசியமானது.
கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: writernaseema@gmail.com
முந்தைய அத்தியாயம்: சிங்கத்தின் கர்ஜனைக்கு என்ன அர்த்தம்? | உயிரினங்களின் மொழி - 20