வரலாறு கற்காவிட்டால் என்னாகும் தெரியுமா? உலக அறிவு எவ்வளவு முக்கியம் தெரியுமா? கடந்த காலத்திடமிருந்து கற்காவிட்டால் நமக்கெல்லாம் எதிர்காலமே கிடையாது என்பதை அறிவாயா? இப்படி எல்லாம் ரொம்பவுமே பெருமையோடு வரலாற்றைக் கொண்டாடுபவர்களிடம் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன.
எனக்காகச் சில நிமிடங்கள் ஒதுக்கி, உங்கள் வரலாறு என்னை எப்படிப் பதிவு செய்து வைத்திருக்கிறது என்று கொஞ்சம் பார்த்துச் சொல்ல முடியுமா? நீங்கள் கொண்டாடும் வரலாற்று மேதைகள் என் வாழ்வை எப்படி எல்லாம் ஆய்வு செய்திருக்கிறார்கள் என்றும் என்னைப் பற்றி என்னவெல்லாம் கண்டறிந்து வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியுமா? நான் பார்த்த எல்லாப் புத்தகங்களிலும் என்னை இப்படித்தான் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். ‘கிளியோபாட்ரா ஒரு மாபெரும் அழகி. அவர் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது.’
வரலாறு என்றால் அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பிக்கொண்டே போவதாம். சரி, அப்படி என்ன தோண்டித் துருவி இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். ‘கிளியோபாட்ரா உயரமா, குள்ளமா?’ இது ஒரு கேள்வி. ‘கிளியோபாட்ராவின் தோல் நிறம் என்ன?’ இது இன்னொரு கேள்வி. ‘கிளியோபாட்ராவின் மூக்கு சாதாரணமாக இருக்குமா அல்லது கூர்மையாக இருக்குமா?’ இப்படி ஓர் ஆய்வு நடந்திருக்கிறது.
இன்னோர் ஆய்வாளர் என்னை வைத்து உலக வரலாற்றையே எழுதி முடித்துவிட்டார். அதுவும் ஒற்றை வரியில். ‘ஒருவேளை கிளியோபாட்ராவின் மூக்கு சிறியதாக இருந்திருந்தால் உலக வரலாறே மாறிப்போயிருக்கும்.’ எப்படி ஐயா மாறியிருக்கும்? என் மூக்கு அதுவாகவே குதிரையில் ஏறி அமர்ந்து வாள் ஏந்திப் போரிட்டு ஒவ்வொரு நாடாக ஆக்கிரமித்திருக்குமா?
என்னை வைத்துக் கணித ஆய்வுகள்கூட நடத்தியிருக்கிறார்கள், தெரியுமா? நான் தினமும் கழுதைப் பாலில்தான் குளிப்பேனாம். ஒரு நாளைக்கு ஓர் அண்டா கழுதைப்பால் என்றால், கிளியோபாட்ராவுக்கு ஒரு மாதத்துக்கு எவ்வளவு கழுதைகள் தேவைப்பட்டிருக்கும்? யாரோ மிகத் துல்லியமாக இதற்கு விடை கண்டறிந்து வைத்திருக்கிறார்களாம்.
நான் பார்க்கவில்லை. விருப்பமில்லை. இதுதான் வரலாறு என்றால், அந்த வரலாற்றின்மீது எனக்குச் சலிப்புதான் ஏற்படுகிறது.இதுதான் உலக அறிவு என்றால் அப்படி ஒன்று தேவையே இல்லை என்பேன்.
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் ஒரு பெண் எப்படிப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்திருப்பார்? அவருக்கு என்ன கல்வி கிடைத்தது? அது எத்தகைய கல்வி? அவர் என்னென்ன துறைகளில் ஆர்வம் செலுத்தினார்? அவருக்குக் கணிதம் பிடிக்குமா, கவிதை பிடிக்குமா? அவருக்குத் தத்துவம் பிடிக்குமா? எகிப்திய மொழி, கிரேக்கத்தைக் கடந்து பல மொழிகளைக் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்களே, உண்மையா? எப்படிக் கற்றுக்கொண்டார்? எதற்காக இவ்வளவு மொழிகளைக் கற்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது? எத்தகைய கனவுகளை அவர் வளர்த்துக்கொண்டார்? எகிப்தியப் பேரரசை ஆளவேண்டும் என்பது அந்தக் கனவுகளில் ஒன்றா? அதை அவர் எப்படி வளர்த்தெடுத்தார்? இவ்வளவு பெரிய கனவைச் சுமந்துகொண்டு ஒரு பெண்ணால் அன்று எப்படி வாழ்ந்திருக்க முடியும்? முழுக்க, முழுக்க ஆண்கள் மட்டுமே நிறைந்திருக்கும் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தபோது, அவர் என்ன நினைத்தார்? எப்படி நீ இங்கே வரலாம்.
இது எங்கள் இடம் என்று ஆர்ப்பரித்த ஆண் கூட்டத்தை அவர் எப்படி வென்றார்? போட்டியை, பொறாமையை, பகையை எப்படி முறியடித்தார்? அவரை அழிப்பதற்காகத் தீட்டப்பட்ட எண்ணற்ற சதித்திட்டங்களை எப்படி அடித்து நொறுக்கினார்? வலி, அவமானம், துரோகம், காயம் அனைத்தையும் எப்படித் தாங்கிக்கொண்டார்? எவ்வளவு அழுதிருப்பார்? எவ்வளவு துடித்திருப்பார்? எவ்வளவு போராடியிருப்பார்? எங்கிருந்து திரட்டிக்கொண்டார் இவ்வளவு வலுவை? எங்கிருந்து பெற்றுக்கொண்டார் இவ்வளவு நிதானத்தை? எகிப்தியப் பேரரசியாகச் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தபோது எப்படி உணர்ந்திருப்பார்? எப்படி இருந்தது அவர் ஆட்சி? மக்கள் அவரை எப்படிக் கண்டனர்? அவர் மக்களை எப்படிக் கண்டார்?
வாள் சுழற்றத் தெரியுமா அவருக்கு? புத்தகம் படிப்பாரா? படிப்பாரா அல்லது எழுதவும் செய்வாரா? அவர் எப்படிச் சிந்தித்தார்? தன் காலத்தில் நிலவிய பிரச்சினைகளை அவர் எவ்வாறு புரிந்துகொண்டார்? எவ்வாறு அணுகினார்? தனக்குக் கிடைத்த அதிகாரத்தை அவர் எவ்வாறு பயன்படுத்தினார்? அவர்மீது நியாயமாக வைக்கக்கூடிய விமரிசனங்கள் என்னென்ன? அவர் ஒரு பெண் என்பதை ஒதுக்கிவைத்துவிட்டு அவருடைய குறைகளையும் போதாமைகளையும் விவாதிக்க முடியுமா? அவர் அழகை ஒரு நிமிடம் மறந்துவிட்டு, அவருடைய மெய்யான ஆற்றலை ஆராய முடியுமா? கழுதைக் கணக்கு போடுவதில் செலவிட்ட நேரத்தில் கால் பங்கு ஒதுக்கியிருந்தால்கூட இந்தக் கேள்விகளை எழுப்பியிருக்க முடியும். செய்யவில்லை.
எனக்குத் தெரிந்து ஒரு காரணம்தான் இருக்க முடியும். நான் பெண்ணாக இருந்துவிட்டேன். அதுவும் அழகிய பெண்ணாக. எனவே ஒரு ஜூலியஸ் சீசர்போல், ஒரு மார்க் ஆண்டனிபோல் என்னை நிறை, குறைகளோடு ஆராய எவரும் தயாராக இல்லை. ஏனென்றால் வரலாறு என்பது ஆண்களால், ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு துறை. ஒரு பெண்ணை எப்படி அணுக வேண்டும் என்று அதற்கு யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. அது கற்றுக்கொள்ளவும் இல்லை.நான் எகிப்தைக் கைப்பற்றி வென்றதுபோல், நாளை வரலாற்றுத் துறையைப் பெண்கள் கைப்பற்றி, வெல்வார்கள்.
என் மூக்கு அமைந்திருக்கும் அதே முகத்தில் ஒரு மூளையும் இருந்திருக்கிறது, அது ஆற்றலோடு செயல்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் கண்டறிவார்கள். என்னை மட்டுமல்ல, ஒற்றை வரியில் வரலாறு ஒதுக்கித் தள்ளிய அனைத்துப் பெண்களையும் அவர்கள் மீட்டெடுப்பார்கள்.
அதன்பின் எழுதப்படும் வரலாறுதான் உண்மையான, முழுமையான வரலாறாக இருக்கும். அதன்பின் தோன்றும் அறிவே உண்மையான, முழுமையான அறிவாக இருக்கும். அப்போது நீங்கள் வேறொரு புதிய கிளியோபாட்ராவைக் காண்பீர்கள்.
கிளியோபாட்ரா எகிப்தின் மிகப் புகழ்பெற்ற அரசி. இவர் தாலமி வம்சத்தைச் சேர்ந்த ஏழாம் கிளியோபாட்ரா. இந்த வம்சத்தின் கடைசி அரசி.
(இனிக்கும்)
- marudhan@gmail.com