சில பறவைகள் தனித்துவமான கூடுகளை அமைக்கின்றன. சில பறவைகள் கூடுகளையே கட்டுவதில்லை. முட்டை அடைகாக்கப் பட்டால்தான் குஞ்சுகள் வெளிவரும். அதனால் முட்டை ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் இருக்க வேண்டியது அவசியம். இதற்காகப் பறவை தனது உடல் வெப்பத்தை முட்டையின் மீது செலுத்தி, அடைகாக்கிறது. பெரும்பாலான பறவைகள் இதே முறையைப் பயன்படுத்து கின்றன. Malleefowl எனும் ஆஸ்திரேலியப் பறவை, வித்தியாசமான முறையில் முட்டைகளை அடைகாக்கிறது.
முதலில் ஓர் ஆழமான பள்ளத்தை உருவாக்கி, மட்கக்கூடிய பொருள்களால் நிரப்புகிறது. அதன் மீது முட்டைகளை வைத்து, மண்ணை நிரப்புகிறது. எவ்வளவு மண் நிரப்ப வேண்டும், எவ்வளவு மட்கக்கூடிய பொருள்களைச் சேர்க்க வேண்டும் என்பதை அந்த இடத்தின் தட்பவெப்ப நிலை, தேவையான வெப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாகக் கணிக்கிறது. இதன் மூலம் கூட்டில் எப்போதும் தேவையான வெப்பநிலை நிலைத்திருப்பதை உறுதி செய்கிறது.
எனவே முட்டைகள் முறையாக அடைகாக்கப் பட்டு, குஞ்சுகள் வெளிவருகின்றன. கிண்ணம் போன்ற வடிவில் கூட்டை உருவாக்கும் ஓசனிச்சிட்டுகள், கூட்டுக்குள் பாசிகளை (Moss) வைக்கின்றன. இது ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் எதிரிகளின் கண்களுக்குச் சட்டெனப் படாமல் உருமறைப்புக்கும் பயன்படுகின்றன.
பல அடுக்கு, பல நுழைவாயில் கொண்ட மிகப் பெரிய கூடுகளைக் கட்டுகின்றன ஆப்பிரிக்காவில் காணப்படும் Soical Weaver பறவைகள். நூற்றுக்கணக்கான பறவைகள் ஒரே நேரத்தில் தங்கும் விதமாக மிகப் பெரிய கூடுகளைக் கட்டுகின்றன.
இவைதான் உலகிலேயே மிகப் பெரிய கூடுகள். பல்லாயிரக்கணக்கான சிறிய குச்சிகள், புல், உதிர்ந்த சருகுகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்துவமான வடிவமைப்பில் கூட்டுக்கூடு அமைந்திருக்கும். பெரும்பாலும் ஒரே கூட்டில் பல தலைமுறை பறவைகள் வாழ்கின்றன. கூட்டுக்கூடுகள் தட்பவெப்ப நிலையைக் கட்டுப்படுத்தி, கடும் வெப்பத்திலிருந்தும் குளிரிலிருந்தும் பறவைகளைப் பாதுகாக்கின்றன.
குயில், Cowbird போன்ற பறவைகள் தாங்கள் கூடுகட்டி, முட்டைகளை இட்டு, அடைகாக்கும் பணியைச் செய்வதில்லை. இவை முட்டைகளை அடைகாக்கவும் குஞ்சுகளைக் குறிப்பிட்ட காலத்துக்கு வளர்க்கவும் பிற பறவைகளைச் சார்ந்து இருக்கின்றன. இப்படிப் பிற பறவைகளைச் சார்ந்து இருக்கும் குயில் போன்ற பறவைகளை ஒட்டுண்ணி (Parasite) என்றும் காகம் போன்ற பறவைகளை ஓம்புயிரி (Host) என்றும் அழைக்கிறார்கள்.
ஒட்டுண்ணிப் பறவைகள் ஓம்புயிரிப் பறவைகளைத் திசைதிருப்பி, அவற்றின் கூடுகளில் முட்டைகளை இடுவது பரிணாம வளர்ச்சியில் உருவானது. ஒட்டுண்ணிப் பறவைகளின் இனப்பெருக்கக் காலமும் ஓம்புயிரிப் பறவைகளின் இனப்பெருக்கக் காலமும் ஒன்றாக இருக்கும்.
இவை இடும் முட்டைகளின் அளவும் நிறமும் ஒரே மாதிரியாக இருக்கும். கூட்டில் புதிய முட்டைகள் இருப்பதைக் ஓம்புயிரி கண்டறிந்தால், அவற்றைத் தள்ளிவிடும். கண்டறிய முடியவில்லை என்றால், ஒட்டுண்ணிப் பறவைகளின் முட்டைகள் ஓம்புயிரிப் பறவைகளால் அடைகாக்கப்பட்டு, குஞ்சுகளாக வெளிவரும்.
ஒருவேளை மீண்டும் மீண்டும் ஒட்டுண்ணிப் பறவைகளின் முட்டைகளை ஓம்புயிரிப் பறவைகள் கண்டறிந்து, தள்ளிவிட்டால், கூடுகளை ஒட்டுண்ணிக் கலைத்துவிடும். மீண்டும் மீண்டும் கூடுகளை உருவாக்கு வது கடினம் என்பதால், சில ஓம்புயிரிப் பறவைகள் ஒட்டுண்ணிப் பறவைகளின் முட்டைகளைக் கண்டும் காணாததுபோல் அடைகாக்கும். பரிணாம வளர்ச்சியில் ஒட்டுண்ணிப் பறவைகளின் முட்டைகள் ஓம்புயிரி பறவைகளால் எளிதில் சிதைக்க முடியாதபடி வலிமையான ஓட்டுகளைப் பெற்றுக்கொண்டே வருகின்றன.
அதேபோல ஓம்புயிரிப் பறவைகளும் பரிணாம வளர்ச்சியில் ஒட்டுண்ணிப் பறவைகளின் முட்டைகளைக் கண்டறியும் சூட்சுமத்தைப் பெற்றுக் கொண்டே வருகின்றன. சில பறவைகள் உமிழ்நீரை ஒட்டும் பொருளாகப் பயன்படுத்திக் கூடுகளை அமைக்கின்றன. தென்கிழக்கு ஆசியப் பறவையான White-Nest Swiftlet உமிழ்நீரைப் பயன்படுத்தி கூடுகளைக் கட்டுகின்றன. உமிழ்நீர் பிசுபிசுப்பான, ஜெலட்டின் போன்ற பொருளாக மாறி, காற்றில் உலர்ந்து திடமான கூடாக உருவாகிறது.
இந்தக் கூடுகள் பொதுவாகக் குகைகளின் உயரமான பகுதிகளிலோ பாறைகளின் பிளவுகளிலோ கட்டப்படுகின்றன. இது வேட்டையாடிகளிடமிருந்து பாதுகாப்பைத் தருகிறது. முட்டைகள், குஞ்சுகளைப் பாதுகாக்க இந்தக் கூடு ஒரு வலிமையான அடுக்காகச் செயல்படுகிறது.
(பறப்போம்)
- writersasibooks@gmail.com