மாயா பஜார்

தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது யார்? | டிங்குவிடம் கேளுங்கள்

செய்திப்பிரிவு

பறவைகளின் எச்சங்களில் வெளியே வரும் விதைகளில் இருந்து வளரும் செடிகள் செழிப்பாக வளரும் என்கிறார்களே உண்மையா, டிங்கு? - செ. நந்தபாலன், 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, சின்னப்பள்ளத்தூர், தருமபுரி.

விதைகளை விழுங்கி, எச்சத்தால் வெளியேற்றுவதன் மூலம் தாவரங்களைப் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வதில், பறவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பறவைகளால் விழுங்கப்படும் விதைகள் செரிமானம் ஆகாமல், வயிற்றில் உள்ள அமிலத்தால் தோல் மென்மையாக்கப்பட்டு, எச்சத்தின் மூலம் வெளியேறுகின்றன.

இந்த விதைகள் எங்கோ மண்ணில் விழுந்து, புதிய இடத்தில் செழிப்பாக வளர்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. பறவைகளின் எச்சம் மண்ணில் உரமாக மாறுகிறது என்பதால், பறவைகளின் வயிற்றிலிருந்து வெளியேறும் விதைகள் மட்டுமே மிகவும் செழிப்பாக வளரும் என்று சொல்ல முடியாது. அதேபோல பறவைகள் சாப்பிடும் எல்லா விதைகளும் இப்படி எச்சத்தின் மூலம் வெளியேறுவதில்லை. செரிக்க இயலாத விதைகள் மட்டுமே இப்படி வெளியே வந்து, புதிய தாவரங்களாக முளைக்கின்றன, நந்தபாலன்.

தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது யார், டிங்கு? - ர. தக் ஷ்ணா, 6-ம் வகுப்பு, செண்பகம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஜமின் ஊத்துக்குளி.

தங்கத்தின் விலையைத் தனிப்பட்ட ஒரு நபரோ தனிப்பட்ட ஒரு நிறுவனமோ நிர்ணயிப்பது இல்லை. சர்வதேச சந்தை, அமெரிக்க டாலரின் மதிப்பு, தங்கத்தின் தேவை, தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கத்தை வழங்குவதில் பாதிப்பு, இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்குவதிலும் விற்பதிலும் ஏற்படும் மாற்றங்கள், உலக அரசியல், பொருளாதார நிலை போன்ற பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றன, தக் ஷ்ணா.

SCROLL FOR NEXT