சொடக்கு ஏன் வருகிறது? அதைப் போடுவது நல்லது என்கிறார்களே உண்மையா, டிங்கு?
– எம். கார்த்திக், காரைக்குடி.
எலும்புகளுக்கு இடையே திரவம் (Synovial fluid) இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தத் திரவம் குறையும்போது இடைவெளி உருவாகிறது. அப்போது எலும்புகளை அசைக்கும்போது சத்தம் உண்டாகிறது. இதைத்தான் சொடக்கு என்கிறோம். சொடக்குப் போடுவதால் நன்மை ஒன்றும் இல்லை, கார்த்திக்.
எங்கள் வீட்டுக்குத் தினமும் இரண்டு குருவிகள் வருகின்றன. ஆனால் என்னைப் பார்த்தாலே பயந்து, பறந்துவிடுகின்றன. ஏன், டிங்கு?
–பா. கா. நம்ரதா, 8-ம் வகுப்பு, கேம்பிரிட்ஜ் பப்ளிக் இ – பள்ளி, கிருஷ்ணகிரி.
புறா, காகம், கோழி, வாத்து போன்ற பறவைகள் மனிதர்களுடன் நீண்ட காலமாகப் பழகி வருகின்றன. அதனால் அவை மனிதர்களைக் கண்டு அச்சம் அடைவதில்லை. ஆனால், குருவிகள் மனிதர்களுடன் நெருங்கிப் பழகுவதில்லை. மிகவும் கூச்ச சுபாவம் உடைய பறவைகள். அதனால்தான் வீட்டுக்கு வந்தாலும் மனிதர்களைக் கண்டவுடன் பயத்தில் பறந்துவிடுகின்றன, நம்ரதா.
–பா. சுபஸ்ரீ, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம்.
உடன்பிறந்தவர்களில், உறவினர்களில் ஒருவரின் சாயலில் இன்னொருவர் இருக்கலாம். ஆனால் ஒருவரைப்போல் அச்சு அசலாக இன்னொருவர் இருக்க வாய்ப்பில்லை. ஒருவரின் கை ரேகைபோல் இன்னொருவரின் கை ரேகைக் கூட இருப்பதில்லை. பிறகு எப்படி ஒரே மாதிரி ஏழு பேர் இருக்க முடியும், சுபஸ்ரீ?
துப்பறியும் கதைகள் உனக்குப் பிடிக்குமா, டிங்கு?
–சி. பிரணவ், சேலம்.
துப்பறியும் கதைகள் ஒரு புதிரை விடுவிப்பதுபோல் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் பிடிக்கும், பிரணவ். ஷெர்லாக் ஹோம்ஸ், துப்பறியும் சாம்பு கதைகளையும் படித்திருக்கிறேன். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த துப்பறியும் கதைகள் என்றால் அது சத்யஜித் ரே எழுதிய ‘ஃபெலுடா’ வரிசைக் கதைகள்தான். நீங்களும் படித்துப் பாருங்கள்.