ஒரு நாள் லியர் அரசர் எங்கள் மூவரையும் அழைத்தார். “குழந்தைகளே, எனக்கு வயதாகிவிட்டது. கண்காணாத நிலத்துக்குச் சென்று நிம்மதியாகப் பொழுதைக் கழிக்க விரும்புகிறேன். எனக்கு இருப்பதோ மூன்று மகள்கள். உங்கள் மூவருக்கும் என் ஆட்சியைப் பிரித்துக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறேன்.
சொல்லுங்கள், நீங்கள் உங்கள் தந்தையை எவ்வளவு நேசிக்கிறீர்கள்? எந்த அளவுக்கு நான் உங்கள் வாழ்வில் முக்கியம் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் நேசிப்பின் அளவைப் பொருத்துதான் நான் அளிக்கப்போகும் செல்வத்தின் அளவும் இருக்கும்.” முதலில் பாய்ந்து வந்தவர் கானரில்.
“அப்பா, அப்பா, உங்கள் மீது நான் வைத்திருக்கும் அன்புக்கு எல்லையே இல்லை” என்று கடகடவென்று உருக ஆரம்பித்தார். “கடலின் ஆழம், மலையின் கனம் இரண்டையும்விட உங்கள்மீதான என் அன்பு மேலானது. விழித்திருக்கும் நேரம் மட்டுமல்ல, உறங்கும்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருப்பேன் அப்பா” என்று உருகினார். “ஆ, கானரில் இங்கே வா” என்று கட்டியணைத்து ஒரு பெரும் பங்கை அள்ளிக் கொடுத்தார் லியர்.
துள்ளிக் குதித்து வந்து லியரின் கரங்களைப் பற்றிக்கொண்டார் ரேகன். “அப்பா, உங்கள் உண்மையான செல்ல மகள் நான்தான். என் அன்பின் உயரம் பாதாளத்தில் தொடங்கி வானத்தையும் கடந்து வளர்ந்து நிற்கிறது. அக்காவைப் போல் உறங்கும்போது நான் உங்களை நினைப்பதில்லை, அப்பா.
உங்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக உறக்கத்தையே கைவிட்டுவிட்டேன். என் இதயம் அப்பா, அப்பா என்றுதான் துடிக்கும் தெரியுமா?” கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கு நட்சத்திரம், நிலா, சூரியன் என்று ஒரு சுற்றுச் சுற்றிவிட்டுதான் அவர் ஓய்ந்தார்.
அக்காவைக் காட்டிலும் ரேகனுக்கு அதிகம் கொடுத்துவிட்டு என்னிடம் திரும்பினார் லியர். “கண்ணே, கார்டீலியா, உன் சொற்களுக்காகவே காத்திருக்கிறேன்” என்றார் ஏக்கத் தோடு. சகோதரிகளும்கூடக் குறு குறுப்போடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
கார்டீலியா, புத்திசாலி அல்லவா? நம்மைக் காட்டிலும் கற்பனை வளம் மிக்கவள் அல்லவா? இவளுடைய சொற்களைக் கண்டு மயங்கி நம்மிடம் இருப்பதையும் பிடுங்கி இவளிடமே கொடுத்துவிடுவாரோ அப்பா? நான் அப்பாவை நிமிர்ந்து பார்த் தேன். “ஒரு மகளுக்கு அப்பாவை எந்த அளவுக்குப் பிடிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு எனக்கு உங்களைப் பிடிக்கும், அப்பா” என்றேன். அப்பா விழித்தார்.
“அவ்வளவு தானா? கானரிலுக்கும் ரேகனுக் கும் என்மீது இருக்கும் அன்பில் ஒரு துளிகூடவா இல்லை உன்னிடம்? இவ்வளவு தட்டையான சொற்களா வெளிவரவேண்டும் உன்னிடமிருந்து?” அப்பாவின் ஏமாற்றம் சோகமாகவும் பின்னர் கோபமாகவும் மாறுவதை உணர்ந் தேன். “உன்னை எவ்வளவு நம்பினேன், கார்டீலியா. ஏமாற்றி விட்டாயே. என்மீது அன்பில்லாத உனக்கு எதற்குத் தரவேண்டும் என் செல்வத்தை? எப்படி உன்னை என் மகள் என்று இனி அழைப்பேன்? போய்விடு. உன்னைக் காணவே பிடிக்கவில்லை.”
என் மூட்டை முடிச்சுகளோடு லியர் மன்னரின் மாளிகையிலிருந்து புறப்பட்டபோது ஏமாற்றம், கோபம், துயரம் எதுவும் இல்லை என் மனதில். ஆதங்கம் மட்டுமே. அப்பா, இவ்வளவு அனுபவத்தைக் கொண்டிருக்கும் உங்களால் எது உண்மை, எது பொய் என்பதைக்கூடவா கண்டறிய முடியவில்லை? மற்ற இருவரையும் போல் நானும் பொய்களை அடுக்கிக் காட்ட வேண்டும் என்றா விரும்புகிறீர்கள்? ஆயிரம் கவிதைகள் வாசித்திருக்கும் என்னிடம் சொற்களுக்கா பஞ்சம்? ஆனால், எனக்குப் பொய்கள் வராது அப்பா. அதுவும் தூய அன்பில் ஒரு துளி மிகையைக் கூட, ஒரு துளி ஆடம்பரத்தைக்கூட, பொய்யின் ஒரு துளி நிழலைக்கூட என்னால் அனுமதிக்க முடியாது அப்பா.
நான் எவ்வளவு அழகு, சொல்? - என்று ஒரு பூ கேட்டால் என்ன சொல்வது? அதன் தோற்றம், அமைப்பு, வண்ணம், நறுமணம், மென்மை, அழகு போன்றவற்றை விளக்குவதற்கு நம்மிடம் சொற்கள் உள்ளன என்றா நினைக்கிறீர்களா? அப்பா, உங்கள்மீதான என் அன்பை நான் எப்படி அப்பா விளக்கு வேன்? ஏன் விளக்க வேண்டும், சொல்லுங்கள்? நீங்கள் அளிக்கப் போகும் செல்வத்துக்கா? பதவிக்கா? ஐயோ, அது கொடுமை இல்லையா அப்பா? நீங்கள் எனக்கு லியர் மன்னர் கிடையாது.
நீங்கள் என் அப்பா. அப்பா மட்டும்தான். நான் மன்னரின் மகள் கிடையாது. இளவரசி கிடையாது. உங்கள் மகள். மகள் மட்டும்தான். நமக்கு இடையில் எதுவும் இல்லை. எதுவுமே தேவைப்படாது அப்பா. நம் உறவு இயற்கையானது.
தூய்மையானது. உயர்வானது. அழகானது. அற்புதமானது. ஒரு மகளின் அன்பை எப்படி அப்பா விளக்க முடியும்? கஷ்டப்பட்டு விளக்கிவிடுகிறேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள். ஆகா, அபாரம் கார்டீலியா இந்தா என்று அழைத்து நீங்கள் எதைக் கொடுத்தாலும், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அது எனக்குத் துயரையும் வலியையும் மன உளைச்சலையும் அல்லவா, அளிக்கும்? அதன்பின் எப்படி உறங்கு வேன்? எப்படி உண்பேன்? எப்படி வாழ்வேன்? நீங்கள் நியாயமற்று அளிக்கும் சொத்துகளைவிட உங்கள் கோபம் உண்மையானது.
அதை மதிக்கிறேன். நீங்கள் என்னைக் கொன்றே போட்டாலும் உங்கள் மகளாகவே இறப்பேன். எனக்கு அளிக்க லியர் மன்னரிடம் எவ்வளவோ இருக்கின்றன. அவை எதுவும் வேண்டாம் எனக்கு. ஓர் அப்பாவாக இருப்பதைக் கடந்து நீங்கள் எனக்கு அளிப்பதற்கு எதுவுமே இல்லை.
ஒரு மகளாக இருப்பதைக் கடந்து உங்களுக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை. மயக்கம் கலையும்போது, இதை நீங்கள் என்றாவது புரிந்துகொள்வீர்கள், அப்பா. அப்போது நீங்களே என்னைத் தேடிவந்து ‘மகளே’ என்று அழைப்பீர்கள். அப்போது உங்களைக் கட்டிப்பிடித்து அழுவேன். அமைதியாக.
வில்லியம் ஷேக்ஸ்பியர் உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர். தன் வாழ்நாளில் 39 நாடகங்களை எழுதியிருக்கிறார். அவற்றில் ஒன்று ‘லியர் மன்னர்’ (King Lear).
(இனிக்கும்)
- marudhan@gmail.com