பூமியும் பிற கோள்களும் சூரியனைச் சுற்றுகின்றன என்றால், சூரியன் எதைச் சுற்றுகிறது டிங்கு? - ம. மெளசிகன், 7-ம் வகுப்பு, ஊ.ஒ. காந்தியார் நடுநிலைப் பள்ளி, வேலாயுதம்பாளையம், கரூர்.
பூமியும் பிற கோள்களும் குறுங்கோள்களும் வான் பொருள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நம் சூரியனோ சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள், குறுங்கோள்கள், வான் பொருள்களையும் சேர்த்துக்கொண்டு பால்வெளி மண்டலத்தைச் (கேலக்சி) சுற்றி வருகிறது.
மணிக்கு சுமார் 7,20,000 கி.மீ. வேகத்தில் சுற்றும் சூரியன், பால்வெளி மண்டலத்தை 23 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி முடிக்கிறது, மெளசிகன்.
முட்டையின் மேல் ஓடு எப்படி உருவாகிறது, டிங்கு? - சு. ப்ரித்திகா, 7-ம் வகுப்பு, ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி. தங்களாச்சேரி. திருமங்கலம்.
முதலில் மஞ்சள் கரு உருவாகிறது. பின்னர் அதைச் சுற்றி வெள்ளைக் கரு உருவாகிறது. வெள்ளைக் கருவைச் சுற்றி ஒரு சவ்வுப்படலம் உருவாகும். இந்தக் கரு கருப்பை என்கிற ஓட்டுச்சுரப்பிக்குள் செல்கிறது. அங்கே சவ்வுப்படலத்தைச் சுற்றி 20 மணி நேரத்துக்குள் கால்சியம் கார்பனேட் துகள்கள் படிந்து, முழுமையான வலுவான ஓடாக மாறிவிடுகின்றன, ப்ரித்திகா.