மாயா பஜார்

குக்கூ...கிக்கீ...கூ...கீ... | பறப்பதுவே 15

பெ. சசிக்குமார்

நாள் முழுவதும் தொடர்ந்து பாட்டுப் பாடவும், தன் இனத்தோடு தொடர்புகொள்ளவும் பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு பறவையும் தனது தேவைக்கேற்ப ஒலியை உருவாக்குகிறது. ஒலி எழுப்புவது பல்வேறு காரணங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.

ஒரு நாளில் காலை அல்லது மாலை மட்டும் ஒலி எழுப்பும் பறவைகள் இருக்கின்றன. வானிலை இதமாக இருக்கும்போது மட்டும் அதிகமான நேரம் பாடும் பறவைகள் இருக்கின்றன. கடுமையான வானிலையில் பாடுவதை நிறுத்திக்கொள்ளும் பறவைகளும் இருக்கின்றன.

இனப்பெருக்கக் காலங்கள், ஒவ்வொரு பறவைக்கும் உள்ள தனித்துவமான வாழ்க்கை முறை ஆகியவையும் பறவைகள் ஒலி எழுப்புவதைத் தீர்மானிக்கின்றன. மற்ற எல்லா உயிரினங்களைக் காட்டிலும் நீண்ட நேரம் பறவைகளால் ஒலி எழுப்ப முடிகிறது. சிட்டுக்குருவிபோல் இருக்கும் வட அமெரிக்கப் பறவை Red-eyed Vireo இரண்டு விநாடிகளுக்கு ஒரு முறை ஓர் ஒலியை எழுப்புகிறது. இது போன்று ஒலி எழுப்புவது மனிதர்களாலும் மற்ற விலங்குகளாலும் சாத்தியமே இல்லை.

மனிதர்களால் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பேச முடியும். பயிற்சி பெற்ற பேச்சாளர்களாக இருந்தாலும் சில மணி நேரப் பேச்சுக்குப் பிறகு ஓய்வு தேவை. இல்லை என்றால் குரல் கரகரத்துவிடும். உடலுக்கு எப்படி ஆக்சிஜன் தேவையோ, அதே போன்று ஓர் ஒலியை உருவாக்குவதற்கும் காற்று தேவைப் படுகிறது. நாம் பேசுவதற்கோ ஏதாவது ஒலியை எழுப்புவதற்கோ நுரையீரலில் இருக்கும் காற்று தேவைப்படுகிறது.

பறவைகளின் சுவாச மண்டலம் மற்ற விலங்குகளைவிடச் சிறப்பானதாக இருப்பதால் அவற்றால் தொடர்ந்து ஒலியை எழுப்ப முடிகிறது. மனிதர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் குரல் நாண் சேதம் அடைவது ஒருபுறம் இருந்தாலும், தொடர்ந்து பேசுவதற்குத் தேவையான காற்றை நுரையீரலால் கொடுக்க முடியாது. அது மட்டுமல்லாமல் தொடர்ந்து பேசுதல் உடலில் நீர் இழப்பிற்குக் காரணமாகி, அதனால் பிரச்சினை ஏற்படலாம்.

தொடர்ந்து ஒலி எழுப்புவதற்காகப் பறவைகள் சிரின்க்ஸ் (syrinx) எனப்படும் தனித்துவமான குரல் உறுப்பைக் கொண்டுள்ளன. இது மூச்சுக்குழாயின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. விலங்குகளைக் காட்டிலும் தனித்துவமான, சிக்கலான ஒலியை உருவாக்குவதிலும், தொடர்ந்து ஒலியை உருவாக்குவதிலும் இந்த சிரின்க்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. அடர்ந்த காடுகளிலும் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயரும் போதும் மற்றவர் புரிந்துகொள்ள இயலாத சிக்கலான சமிக்ஞைகளுக்குப் பறவைகள் குரல் தொடர்புகளைப் பெரிதும் நம்பியுள்ளன.

மனிதனை ஒத்த பாலூட்டிகள் குரல் வளையத்தில் உள்ள குரல் நாண்கள் மூலம் ஒலியை எழுப்புகின்றன. தவளைகள் தொண்டையில் இருக்கும் அதிர்வுறும் சவ்வுகளைப் பயன்படுத்தி ஒலியை எழுப்புகின்றன. பூச்சிகள் உடல் பாகங்களைத் தேய்ப்பதன் மூலம் ஒலியை உருவாக்குகின்றன. இப்படி ஒலி எழுப்பும் அனைத்து வகை உயிரினங்களும் பறவைகளைப் போல தொடர்ந்து ஒலி எழுப்ப முடியாது. அதற்கு அவற்றின் உடலில் சிரின்க்ஸ் போன்ற அமைப்பு இல்லாதது முக்கியமான காரணம்.

மனிதர்கள் மொழியைக் கற்றுக் கொள்வதுபோல், பறவைகள் பிறந்த சில நாள்களில் மொழியைக் கற்றுக்கொள்கின்றன. மற்ற உயிரினங்களின் ஒலியைப் போல் ஒலி எழுப்பி செய்தியைப் பரிமாறும் பறவைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு பறவை இனத்துக்கும் ஏற்ப எழுப்பும் ஒலி வேறுபடுகிறது.

வேறு வேறு அதிர்வெண்களில் தன் இனத்துடன் தொடர்புகொள்கிறது. அதனால் எந்தப் பறவை ஒலி எழுப்புகிறது என்பதை அந்தக் குறிப்பிட்ட பறவை இனங்கள் கண்டுகொள்கின்றன. தான் இருக்கும் இடத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இனச்சேர்க்கைக்காகவும், தனது இனத்துடன் தொடர்பில் இருக்கவும், எச்சரிக்கை செய்யவும் பறவைகள் தொடர்ந்து ஒலி எழுப்புகின்றன.

பறவைகள் எளிதாக அதிக நேரம் ஒலியை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அதிக அதிர்வெண்ணிலும் ஒலியை உருவாக்க இயலும். அதிக சுருதியில் உருவாக்கப்படும் ஒலி பல நேரம் அவற்றுக்குத் தேவைப்படுகிறது. இலைகள் அதிகமாக உள்ள அடர்ந்த காடுகளில் செல்லும்போது எழுப்பப்படும் ஒலி சிதறடிக்கப்படும். மற்ற இடங்களில் இருந்து தன் ஒலியை வேறுபடுத்திக்காட்டுவதற்காக வெவ்வேறு அதிர்வெண்களில் அவை ஒலியை எழுப்புகின்றன .

நகர்ப்புறச் சூழலில் வாழும் பறவைகள் இரைச்சலுக்கு மேலே தனது இனத்துடன் தகவலைப் பகிர்ந்துகொள்ள அதிக சுருதியில் ஒலியை எழுப்ப வேண்டியிருக்கிறது. பொதுவாகச் சிறிய பறவைகளின் ஒலி அதிக அதிர்வெண்ணிலும் பெரிய பறவைகளின் ஒலி குறைவான அதிர்வெண்ணிலும் உருவாக்கப் படுகிறது.

அதனால் பெரிய பறவைகளின் ஒலி சில நூறு மீட்டர் வரை மட்டுமே கேட்கும். பல வகையான ஒலிகளை எழுப்புவதற்கும், வேறு வேறு சுருதியில் ஒலிகளை எழுப்புவதற்கும் பறவையின் சிரின்க்ஸ் பயன்படுகிறது. மேலும் குறைந்த ஆற்றல் செலவில் இந்த ஒலிகளை உருவாக்கவும் அது உதவுகிறது. அதனால்தான் பறவைகளால் தொடர்ந்து ஒலி எழுப்ப முடிகிறது.

(பறப்போம்)

- writersasibooks@gmail.com

SCROLL FOR NEXT