விமானங்கள் ஏன் விண்வெளிக்குச் செல்வதில்லை, டிங்கு? - வி. வெண்பா, 4-ம் வகுப்பு, டி.ஆர்.எஸ். குளோபல் பப்ளிக் பள்ளி, அரக்கோணம்.
நல்ல கேள்வி வெண்பா. நாம் பார்க்கக்கூடிய, பயணம் செய்யக்கூடிய விமானங்கள் எல்லாம் காற்று மண்டலத்தில் பயணிக்கின்றன. காற்றை உந்தித் தள்ளி செயல்படும் விதத்தில் விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. விண்வெளி என்பது காற்று இல்லாத வெற்றிடம். அதற்கு ஏற்றவாறு விண்வெளிக்குச் செல்லும் விண்கலங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் சாதாரணமாக நாம் பயணிக்கும் விமானங்களால் விண்வெளிக்குச் செல்ல இயலாது. ஆனாலும் சில பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, X-15 மற்றும் SpaceShipOne போன்ற சில விமானங்களில் விமான இன்ஜின்களுக்குப் பதிலாக ராக்கெட் இன்ஜின்களைப் பொருத்தி, விண்வெளி எல்லைக் கோடு வரை செலுத்தி, சோதனை முயற்சிகளைச் செய்து பார்த்திருக்கிறது.
தோசை ஊற்றும்போது சில நேரம் தோசை, கல்லில் ஒட்டிக்கொண்டு விடுகிறதே ஏன், டிங்கு? - மு. அருளமுதன், 6-ம் வகுப்பு, சென்னை மேல்நிலைப் பள்ளி, வேளச்சேரி.
கல்லில் தோசை ஒட்டிக்கொள்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. கல்லின் வெப்பநிலை குறைவாக இருத்தல், வெப்பநிலை அதிகமாக இருத்தல், கல்லில் எண்ணெய் தடவாவிட்டால், பழகாத புதுக் கல், அரிசி, உளுந்து கலவையில் மாற்றம், தோசை வேகுவதற்குப் போதுமான அவகாசம் கொடுக்காமல் அவசரப்பட்டு எடுத்தல், அளவுக்கு அதிகமாக மாவு புளித்தல் போன்ற காரணங்களால் தோசை ஒட்டிக்கொள்ளலாம், அருளமுதன்.