மனிதர்கள் பல் துலக்கவில்லை என்றால் துர்நாற்றம் வருகிறது. ஆனால், விலங்குகளும் பறவைகளும் பல் துலக்குவதில்லை என்றாலும் பிரச்சினை இல்லையா, டிங்கு? - ரா. பிரனித், 8-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தங்களாச்சேரி, திருமங்கலம்.
நாம் எல்லாரும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, அப்படியே சாப்பிடுவதில்லை. சமைத்துச் சாப்பிடுகிறோம். ஆனால், விலங்குகள் அனைத்தும் இயற்கையாகக் கிடைக்கும் உணவு வகைகளை அப்படியே சாப்பிட்டுவிடுகின்றன. பெரும்பாலும் நார்ப் பொருள்கள் உள்ள உணவு வகைகளை உண்பதால், உண்ணும்போதே பற்கள் சுத்தமாகிவிடுகின்றன.
நாம் சாப்பிடும் உணவு வகைகளில் மாவுப் பொருள்கள் அதிகம் இருக்கின்றன. இவை நம் பற்களைப் பாதிக்கக் கூடியவை. அதனால் நாம் பல் துலக்க வேண்டியது அவசியம். விலங்குகளுக்கு அந்த அவசியம் இல்லை, பிரனித்.
ஜங்க் ஃபுட்ஸ், குளிர்பானங்களை ஏன் சாப்பிடக் கூடாது, டிங்கு? - ஏ. ஆராதனா, 2-ம் வகுப்பு, இந்தியன் பப்ளிக் பள்ளி, சேலம்.
இனிப்புகள், சாக்லேட்கள், சிப்ஸ் போன்ற எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகள், பிஸ்கெட், கேக், துரித உணவு வகைகள் எல்லாம் சுவையாக இருக்கின்றன. அதனால் நாம் அதிக அளவில் அவற்றைச் சாப்பிட விரும்புகிறோம். இவை போன்ற உணவு வகைகளில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருக்கிறது.
இது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. அதேபோல் செயற்கைக் குளிர்பானங்கள் அதிகம் குடித்தாலும் செரிமானக் கோளாறு, எலும்பு, பற்கள் தேய்மானம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே ஜங்க் ஃபுட்ஸ் (சக்கை உணவு), குளிர்பானங்களை அதிகம் சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறார்கள், ஆராதனா.