மாயா பஜார்

பாம்பின் விஷம் கீரியைக் கொல்வதில்லையே ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்

செய்திப்பிரிவு

வீட்டில் வளர்க்கப்படும் வண்ண மீன்கள் சில நாள்களிலேயே இறந்துவிடுகின்றனவே ஏன், டிங்கு? - ர. தக்‌ஷணா, 6-ம் வகுப்பு, செண்பகம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.

தண்ணீரில் அமோனியா, குளோரின் அதிகமாக இருக்கலாம். காற்றோட்டம், நீரின் வெப்பநிலை குறைவாக இருக்கலாம். தொட்டியில் இருக்கும் ஏதாவது ஒரு மீனுக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம். மீன்களுக்கு அதிகப்படியான உணவை வழங்கியிருக்கலாம். தொட்டி நீரை அடிக்கடி சுத்தம் செய்யாமல் இருந்திருக்கலாம். மீன்களுக்குக் கொடுக்கப்படும் உணவு தரமற்றதாக இருந்திருக்கலாம் என்பது போன்ற காரணங்களால் வளர்ப்பு மீன்கள் இறந்திருக்கலாம், தக்‌ஷணா.

பாம்பின் விஷம் கீரிகளைக் கொல்வதில்லையே ஏன், டிங்கு? - சு. ப்ரித்திகா, 7-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.

நல்ல கேள்வி. கீரியின் தோல் தடிமனானது. அத்துடன் நிறைய முடியும் இருக்கும். பெரும்பாலும் பாம்பின் கடி படாதபடிதான் கீரி தாக்குதலை மேற்கொள்ளும். ஒருவேளை பாம்புக் கடித்துவிட்டால், கீரியின் உடலிலுள்ள நிகோடினிக் அசிட்டைல்கோலின் (Nicotinic acetylcholine receptors) என்கிற எதிர்ப்பாற்றல் விஷத்தை முறியடித்துவிடும்.

அதனால் பாம்புடன் கடுமையாகச் சண்டை போட்டாலும் கீரிக்குப் பாதிப்பு இல்லை. கழுகுக்குப் பாம்பின் விஷத்தை முறிக்கக்கூடிய எதிர்ப்பாற்றல் கிடையாது. ஆனாலும் வேகமாகச் செயல்படுவதால் பாம்பின் கடியிலிருந்து தப்பிவிடுகிறது. இமைக்கும் நேரத்தில் பாம்பைத் தூக்கிக்கொண்டு உயரத்துக்குச் சென்றுவிடும். பிறகு திடீரென்று பாம்பைப் பாறை மீது வீசும். இறுதியில் பாம்பைக் கொன்றுவிடும், ப்ரித்திகா.

ஒரு பொருளைச் சூடாக்கினால் ஏன் விரிவடைகிறது, டிங்கு? - க. முனீஸ்வரன், 6-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது, அந்தப் பொருளில் உள்ள மூலக்கூறுகள் ஆற்றலைப் பெற்றுக்கொண்டு, வேகமாக நகர ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக மூலக்கூறுகளுக்கு இடையிலான தூரம் அதிகரிக்கிறது. அதனால் அந்தப் பொருள் விரிவடைய ஆரம்பிக்கிறது, முனீஸ்வரன்.

SCROLL FOR NEXT