தாவரங்கள் ஏன் புவிஈர்ப்பு விசைக்கு எதிராக மேல் நோக்கி வளர்கின்றன, டிங்கு? - வி. சிவப்ரியா, 7-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தங்களாச்சேரி, திருமங்கலம்.
சுவாரசியமான கேள்வி சிவப்ரியா. தாவரங்களில் phototropism, Geotropism என்று இரண்டு வகை செயல்பாடுகள் நிகழ்கின்றன. போட்டோடிராபிசம் என்பது தாவரங்களின் தண்டுகளை ஒளியை நோக்கி வளைய வைக்கிறது. ஜியோட்ரோபிசம் என்பது வேர்களைக் கீழ்நோக்கி வளரச் செய்கிறது. அதாவது தாவரங்களின் செல்களில் ஆக்சின் (Auxin) எனும் ஹார்மோன்கள் இருக்கின்றன.
இவை தண்டுகள் மேல்நோக்கி வளர்வதை, அதாவது ஈர்ப்பு விசைக்கு எதிராக வளர்வதை ஊக்குவிக்கின்றன. இதே ஆக்சின் ஹார்மோன்கள் வேர்களில் ஈர்ப்பு விசைக்கு எதிராகச் செல்வதைத் தடுத்து, கீழ்நோக்கி வளர்வதை ஊக்குவிக்கின்றன. எனவே தாவரங்களின் தண்டுகள் மேல்நோக்கியும் வேர்கள் கீழ்நோக்கியும் வளர்கின்றன. இயற்கை எவ்வளவு விந்தையாக இருக்கிறது இல்லையா!
டைனசோர் என்கிற உயிரினம் உண்மையிலேயே பூமியில் வாழ்ந்ததா? – நா. தருவின், 3-ம் வகுப்பு, நோட்ரேடேம் அகாடமி பள்ளி, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி.
ஏன் இப்படி ஒரு சந்தேகம் தருவின்? கண்டங்கள் பிரியாமல் ‘பாஞ்சியா’ என்கிற ஒரே நிலப்பரப்பாக இருந்தபோது டைனசோர்கள் வாழ்ந்துள்ளன. இன்று பூமியில் ஏழு கண்டங்களிலும் டைனசோர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் டைனசோர்கள் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள். இதுவரை சுமார் 700 வகையான டைனசோர்கள் வாழ்ந்திருப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.