மாயா பஜார்

கடுகு வெடிப்பது ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்

செய்திப்பிரிவு

எண்ணெயில் போட்டவுடன் கடுகு வெடிக்கிறதே, என்ன காரணம் டிங்கு? - கே. ஸ்ரீநிதி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.

காய்ந்த கடுகாகத் தெரிந்தாலும் கடுகுக்குள் நீர்ச் சத்து இருக்கிறது. அதைச் சூடான எண்ணெயிலோ பாத்திரத்திலோ போடும்போது, கடுகில் உள்ள நீர் வெப்பத்தால் ஆவியாகி, கடுகை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது. அப்போதுதான் கடுகிலிருந்து வெடிக்கும் சத்தம் வருகிறது. சோளத்தை இப்படிச் சூடேற்றும்போதும் அதிலிருக்கும் நீர் ஆவியாக வெளியேறி, பாப்கார்னாக மாறுகிறது. அப்பளத்திலும் ஈரம் இருப்பதால்தான் பொரிகிறது, ஸ்ரீநிதி.

கால் நகங்கள், கை நகங்களைவிட மெதுவாக வளர்வது ஏன், டிங்கு? - பா.ம. வசுந்தரா, 9-ம் வகுப்பு, ஏசியன் கிறிஸ்டியன் உயர்நிலைப் பள்ளி, ஓசூர்.

நகங்களின் வளர்ச்சி விகிதம் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். கால் நகங்களைவிடக் கை நகங்கள் அதிகமான ரத்த ஓட்டத்தைப் பெறுகின்றன. கால் நகங்களைவிடக் கை நகங்கள் அதிக அளவில் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. அதனால், ஒப்பீட்டு அளவில் கால் நகங்களைவிடக் கை நகங்கள் வேகமாக வளருகின்றன, வசுந்தரா.

பென்சில் சீவும்போது பிளேடு கையில் பட்டு ரத்தம் வந்தால், வாயில் வைத்து உறிஞ்சச் சொல்கிறார்களே அது சரியா, டிங்கு? - ம. இளம்பரிதி, 7-ம் வகுப்பு, நாச்சியார் தி வேர்ல்டு ஸ்கூல், ஜமீன் ஊத்துகுளி, பொள்ளாச்சி.

ரத்தம் உயிர் காக்கும் அரிய திரவம் என்பதால், ரத்தத்தை வீணாக்கக் கூடாது என்கிற எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறது. அத்துடன் வாயில் வைத்துச் சப்பினால் ரத்தம் வெளியேறுவது நிற்கும் என்றும் நினைக்கிறார்கள். அதனால்தான் ரத்தம் வெளியேறியவுடன் வாயில் வைத்து உறிஞ்சச் சொல்கிறார்கள். வாய்க்குள் குளிர்ச்சியான எச்சில் பட்டவுடன் ரத்தம் நின்றுவிடும் என்பது உண்மைதான். ஆனால் சுத்தமான வாயாக இல்லாவிட்டால், காயத்தின் வழியே தொற்று ஏற்படக்கூடும்.

அதனால், வாய்க்குள் வைப்பதைத் தவிர்த்து, தண்ணீரில் கையை நனைக்கலாம். ரத்தம் வெளியேறுவது விரைவில் நின்றுவிடும். தண்ணீர் இல்லாவிட்டாலும் காயம் பட்ட இடத்துக்கு அருகில் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாலும் ரத்தம் வெளியேறுவது நின்றுவிடும். அதனால், வாயில் வைத்து உறிஞ்ச வேண்டியதில்லை. இன்னொரு விஷயம், இப்படி வெளியேறும் ரத்தத்தை உறிஞ்சுவதால், அது ரத்தத்துடன் போய்ச் சேர்வதும் இல்லை, இளம்பரிதி.

SCROLL FOR NEXT