மாயா பஜார்

டிங்குவிடம் கேளுங்கள்: கோயில் மீது பருந்து வட்டமிடுவது ஏன்?

செய்திப்பிரிவு

கோயில் கும்பாபிஷேகம் நடக்கும்போது மட்டும் எப்படிச் சரியாகப் பருந்து கோயிலைச் சுற்றி வருகிறது, டிங்கு? - ச.குகன், 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

நல்ல கேள்வி. பருந்துகள் அதிக ஆற்றலைச் செலவழிக்காமல் பறப்பதற்கு, பூமியிலிருந்து மேலே செல்லும் வெப்பக் காற்றுள்ள பகுதிகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன. இந்த வெப்பக் காற்றின் மூலம் பருந்துகளால் எளிதாக உயரத்துக்குச் செல்ல முடிகிறது. அந்த உயரத்திலிருந்து பரந்த பரப்பை நன்றாகப் பார்க்க முடியும் என்பதால், அந்த இடத்திலிருந்தபடி வட்டமடிக்கின்றன.

இப்படி வட்டமடிப்பதன் மூலம் பருந்தின் ஆற்றல் சேமிக்கப்படுகிறது. நிலப்பகுதியில் குறிப்பிட்ட தொலைவு வரை இரை இருப்பதைக் கூர்மையான அவற்றின் கண்களால் எளிதாகப் பார்க்க முடிகிறது. இரை தென்பட்டவுடன் திசையை மாற்றிப் பறப்பதற்கும் இந்த வட்டமிடுதல் உதவியாக இருக்கிறது. கோயில் மீது மட்டுமல்ல, பல பகுதிகளிலும் பருந்துகள் இரைக்காக வட்டமடிக்கின்றன. கீழே இருப்பது கோயிலா, அரண்மனையா, விவசாய நிலமா, திரையரங்கமா என்பதை எல்லாம் அவை கவனிப்பதில்லை, குகன்.

ஒவ்வோர் ஊரிலும் இத்தனை மி.மீ., செ.மீ. மழை பெய்தது என்று சொல்கிறார்களே, மழையை எப்படி அளக்கிறார்கள், டிங்கு? - ர. தக்ஷ்ணா, 6-ம் வகுப்பு, செண்பகம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.

எந்தத் தொந்தரவும் இல்லாத சமதளமான ஓர் இடத்தில், குடுவையைப் போன்ற மழைமானியை வைத்துவிடுவார்கள். அந்த மழைமானியில் சேரும் தண்ணீரின் அளவை வைத்து, 24 மணி நேரத்தில் இவ்வளவு மி.மீ., செ.மீ. மழை பொழிவதாகக் கணக்கிடுகிறார்கள், தக்ஷ்ணா.

SCROLL FOR NEXT