மாயா பஜார்

கண்டுபிடிப்புகளின் கதை: கார்ன் ஃப்ளேக்ஸ்

எஸ். சுஜாதா

ண்டுபிடிப்புகளால்தான் உலகம் இவ்வளவு முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு விஷயமும் எவ்வளவு நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவு அது கண்டுபிடித்த கதையும் சுவாரசியமானது. அப்படிப்பட்ட சில கண்டுபிடிப்புகளின் சுவையான கதையைப் பார்ப்போம்.
 

John_Harvey_Kellogg_.jpg ஜான் கெல்லாக்

நூறு ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் காலை உணவாக கார்ன்ஃப்ளேக்ஸ் வெற்றிகரமாக இருந்துவருகிறது. இன்று நமது உணவுப் பழக்கத்திலும் ஊடுருவி விட்டது. பாலில் போட்டு காலை உணவாகவும் சூப்பில் அலங்காரமாகவும் மிக்சரில் சுவைக்காகவும் கார்ன் ஃப்ளேக்ஸ் சேர்க்கப்படுகிறது. குழந்தைகளின் விருப்பமான உணவுப் பொருளில் ஒன்றாக இது மாறிவிட்டது.

கண்டுபிடிப்பின் கதை

சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர்களின் உணவு கொழுப்பு நிறைந்ததாக இருந்தது. இதனால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போதுதான் ஒரு தேவாலயம் மக்களின் நலனில் அக்கறை கொண்டு, ஆரோக்கியமான உணவு ஒன்றைத் தயாரிக்கும்படி மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஜான் கெல்லாக்கிடம் கேட்டுக்கொண்டது. இவரும் இவருடைய தம்பி வில் கெய்த் கெல்லாக்கும் இணைந்து உணவுப் பொருள் விற்பனை செய்யும் கடையை நடத்திவந்தனர். ஆரோக்கிய உணவுக்காக ஊட்டச்சத்து மிக்க ரொட்டியைத் தயாரிக்க முயற்சி செய்தனர். அது ஏனோ சரியாக வரவில்லை.

ஒருநாள் ரொட்டிக்காகத் தயாரிக்கப்பட்ட கோதுமை மாவு, காய்ந்து பாத்திரத்தில் ஒட்டியிருந்தது. வில் கெல்லாக் அந்தப் பாத்திரத்தைச் சுத்தம் செய்யும்போது சருகுகள்போல் உதிர்ந்தன. அவற்றை அருகில் இருந்த சூடான பாத்திரத்தில் போட்டார்.

Will_Keith_Kellogg_.jpg வில் கெல்லாக் right

சட்டென்று பொரிந்தன. ஆச்சரியமடைந்தவர், சுவைத்துப் பார்த்தார். ஓரளவு சாப்பிடக்கூடியதாகத்தான் தெரிந்தது. உடனே கோதுமை மாவை எடுத்து, இதேபோல் செய்து பார்த்தார். ஜான் கெல்லாக்கிடம் காட்டினார். அவருக்கும் பிடித்துவிடவே, வீட் ஃப்ளேக்ஸ் உருவானது. பல முயற்சிகள். பரிசோதனைகளுக்குப் பிறகு, 1906-ம் ஆண்டு கோதுமைக்குப் பதில் மக்காச்சோளத்தில் உருவான ‘கார்ன் ஃப்ளேக்ஸ்’ விற்பனைக்கு வந்தது.

கெல்லாக் நிறுவனமும் உருவானது. கெல்லாக் சகோதரர்கள் தங்கள் வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த 122 ஆண்டுகளில் பல உணவுப் பொருட்களைப் புதிதாக உருவாக்கி, இன்றும் முன்னணி நிறுவனமாக இருந்துவருகிறது கெல்லாக்.

கண்டுபிடிப்போம்!

SCROLL FOR NEXT