மாயா பஜார்

டிங்குவிடம் கேளுங்கள்: பற்பசை கிருமிகளுக்கு எதிராகப் போராடுகிறதா?

செய்திப்பிரிவு

பற்பசை கிருமிகளுக்கு எதிராகப் போராடுகிறதா, டிங்கு? - ஆர். நிவேதா, 6-ம் வகுப்பு, ஆர்கா கிரீன் பள்ளி, அண்டூர், கன்னியாகுமரி.

நம் வாய் 24 மணி நேரமும் ஈரத்தன்மையுடன் இருப்பதாலும் அடிக்கடி உணவைச் சாப்பிடுவதாலும் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும் இடமாக இருக்கிறது. பெரும்பாலான பாக்டீரியாக்கள் சாதுவானவை. சில பாக்டீரியாக்களால் பற்சிதைவு, பற்குழி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பற்களில் இருக்கும் உணவுத் துணுக்குகளை அகற்றுவதற்கும் தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்களில் இருந்து பற்களைக் காப்பாற்றுவதற்கும் பற்பசை ஓரளவு உதவுகிறது.

நாம் எதையாவது செய்து, முழுமையாக பாக்டீரியாக்களை அகற்றினாலும் அரை மணி நேரத்தில் பாக்டீரியாக்கள் வந்துவிடும். பற்பசை வாயில் இருக்கும் உணவுத் துணுக்குகளை அகற்றி, துர்நாற்றத்தைக் குறைப்பதால் நமக்கு ஓரளவு புத்துணர்வு கிடைக்கிறது. அதற்காக விளம்பரங்களில் காண்பிப்பதுபோல பிரஷ் நிறைய பற்பசையை வைக்க வேண்டியதில்லை, பட்டாணி அளவு பற்பசையே போதுமானது, நிவேதா.

ஆங்கில மாதங்களின் பெயர்களை எதன் அடிப்படையில் வைத்தார்கள், டிங்கு? - எஸ்.ஜெ. கவின், 9-ம் வகுப்பு, கிறைஸ்ட் தி கிங் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.

ரோம, கிரேக்கக் கடவுள்கள், ஆட்சி யாளர்களின் பெயர்களைப் பெரும்பாலான ஆங்கிலமாதங்களுக்கு வைத்திருக் கிறார்கள். செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு எண்களின் பெயர்களை வைத்திருக்கிறார்கள்.

லத்தீன் மொழியில் ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என்று பொருள். ஆரம்பத்தில் 10 மாதங்களே ஓராண்டுக்கு இருந்ததால் இப்படி வைத்திருக்கிறார்கள். பின்னர் ஜனவரி, பிப்ரவரி ஆகியவை முதல் இரண்டு மாதங்களாகச் சேர்க்கப்பட்டு, இந்த மாதங்களின் எண்கள் மாறினாலும் அப்படியே பெயர்கள் தொடர்கின்றன, கவின்.

SCROLL FOR NEXT