மாயா பஜார்

உடல் எனும் இயந்திரம் 23: உடலின் கவசம்

கு.கணேசன்

டலைப் போர்த்தியிருக்கும் தோல்தான் உடலிலேயே மிகப் பெரிய உறுப்பு. உடலின் எடையில் சுமார் 15 சதவீதம் தோலின் எடை. அறுபது வயதுடைய ஒருவரின் தோல் மொத்தத்தையும் விரித்தால், அது 2 சதுர மீட்டர் பரப்பாக இருக்கும். இதன் தடிமன் இடத்துக்கு இடம் மாறுபடும். சில இடங்களில் ஒன்றரை மில்லி மீட்டர் மெல்லியதாகவும், சில இடங்களில் 6 அல்லது 7 மில்லி மீட்டர் அளவுக்குத் தடிமனாகவும் இருக்கிறது.

‘மேல்தோல்’ (Epidermis), ‘நடுத்தோல்’ (Dermis), ‘உள்தோல்’ (Hypodermis) எனும் மூன்றடுக்குப் படலத்தால் ஆனது நமது தோல். உடலின் உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கும் கவசமாக மேல்தோல் இருக்கிறது. சுற்றுச் சூழலிலிருந்து வெயில், மழை, கிருமி என்று எது தீண்டினாலும் அது உடலைப் பாதிக்காமல் தடுப்பதில் தோல் முன்னிலை வகிக்கிறது.

உடலின் வெப்பத்தைச் சரிப்படுத்துவதும் தொடுவுணர்வுக்குத் தோள் கொடுப்பதும் இதுதான். வியர்வை மூலம் உடலுக்கு வேண்டாத கழிவுகளை வெளியேற்றும் உறுப்பாகவும் இது செயல்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து ‘வைட்டமின்- டி’யைத் தயாரித்துக் கொடுக்கிறது.

shutterstock_174446576 [Converted]_col

மேல்தோல் ஐந்து படலங்களால் ஆனது. ஒவ்வொன்றும் ‘கெரட்டின்’ (Keratin) செல்களால் ஆனது. இதன் மேற்பரப்பில் பழைய செல்களே இருக்கும். இதன் அடிப்பரப்பில் புதிய செல்கள் பிறந்து, மேற்பரப்பு நோக்கி வந்துகொண்டிருக்கும். இவை மேற்பரப்புக்கு வந்து சேர்ந்ததும் உயிரிழந்த செல்களாக மாறிவிடும்.

இப்படி இறந்துபோன செல்கள் நாம் குளிக்கும்போதும், உடை மாற்றும்போதும் உதிர்ந்துவிடும். இவ்வாறு ஒரு கெரட்டின் செல் உருவாகி உதிர்வதற்கு 35-லிருந்து 45 நாட்கள்வரை ஆகிறது. எழுபது வயதுவரை வாழும் ஒருவரின் உடலிலிருந்து அவரது வாழ்நாளில் மொத்தம் சுமார் 18 கிலோ செல்கள் உதிர்வதாகச் சொல்லப்படுகிறது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலுமாக’ கெரட்டின் செல்கள் இருப்பதால்தான் நம் தோல் பார்ப்பதற்கு எப்போதும் புதிதாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது.

உடலில் அழுத்தம் தாங்கும் பகுதிகளில் கெரட்டின் செல்கள் மிக அதிகமாக இருக்கின்றன. உதாரணமாக, உடல் எடை முழுவதையும் தாங்கும் உள்ளங்கால்களிலும், அடிக்கடி வேலை செய்கிற, பொருட்களைத் தூக்குகிற உள்ளங்கைகளிலும் கெரட்டின் செல்கள் மிக அதிகமாக காணப்படுகின்றன. அதனால்தான் அங்கு தோல் தடிமனாக இருக்கிறது.

மேல்தோலில்தான் நம் தோலுக்கு நிறம் தருகிற ‘மெலனின்’ (Melanin) எனும் நிறமிகள் உள்ளன. இவற்றை ‘மெலனோசைட்’ (Melanocyte) எனும் செல்கள் சுரக்கின்றன. இந்த நிறமிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால், தோலின் நிறம் கறுப்பு; கொஞ்சம் குறைவாக இருந்தால் மாநிறம்; மிகவும் குறைவாக இருந்தால் வெள்ளை நிறம்.

shutterstock_661154740right

தோலின் மேற்பரப்பில் நிறைய வியர்வைத் துவாரங்கள் உள்ளன. வியர்வைச் சுரப்பி உள்தோலில் தொடங்கி நடுத்தோல் வழியாக மேல்தோலுக்கு வந்து வியர்வைத் துவாரத்தில் முடிகிறது. இது நம் உடலுக்குள் இருக்கும் இயற்கை கூலர்.

வெயில் அதிகரிக்கும் போதெல்லாம் இந்தச் சுரப்பிதான் வியர்வையை அதிகமாகச் சுரக்கச் செய்கிறது. வியர்வை ஆவியாவதற்குத் தேவையான வெப்பத்தைத் தோலிலிருந்து எடுத்துக்கொள்வதால், உடல் சூடு குறைந்து சமநிலை அடைகிறது. வியர்வை மூலம் உடல் கழிவுகளையும் அகற்றுகிறது.

உடலில் சுமார் 30 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. இவை எக்கிரின் (Eccrine glands), அபோகிரின் (Apocrine glands) என இரு வகைப்படும். முதலாவது உடல் முழுவதும் உள்ளவை.

இரண்டாவது வகை அக்குள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் காணப்படுபவை. விலங்குகளில் நாய்க்கும் பூனைக்கும் வியர்வைச் சுரப்பிகள் இல்லை.

நடுத்தோலில் ‘கொலாஜென்’ எனும் பசை போன்ற புரதப்பொருளும், ‘எலாஸ்டின்’ என்ற புரதப்பொருளும் உள்ளன. இவை தோலை மிருதுவாக வைத்துக்கொள்ளவும், தோலுக்கு மீள்தன்மையைக் கொடுக்கவும் உதவுகின்றன. வயதாக ஆக எலாஸ்டின் அளவு குறைந்துவிடுவதால், தாத்தா, பாட்டிகளுக்குத் தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
 

shutterstock_24507898 [Converted]_col

தோல் பளபளப்பாக இருப்பதற்கு, தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் (Sebaceous glands) தான் காரணம். இந்தச் சுரப்பிகள் மட்டும் இல்லா விட்டால், உடலில் எண்ணெய்ப் பசையே இருக்காது. உடல் முழுவதும் தோல் வறண்டு போகும். வெயில் காலத்தில் பாளம் பாளமாக வெடித்துவிடும்.

ஆணோ, பெண்ணோ பருவ வயதில் முகப்பரு வருவதற்கு இந்த எண்ணெய்ச் சுரப்பிகள் அடைத்துக்கொள்வதுதான் காரணம். இவை நடுத்தோலில் இருக்கின்றன. ‘சீபம்’ என்ற கொழுப்பு எண்ணெயைச் சுரக்கின்றன. உடலில் கை, உள்ளங்கை, பாதம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இந்தச் சுரப்பிகள் இருக்கின்றன.

நடுத்தோலில் ரத்தக் குழாய்கள், நரம்புகள், நார்த்திசுக்கள் நிறைய உள்ளன. இங்குள்ள ரோமக்காலிலிருந்து (Hair Follicle) முடி முளைத்து மேல்தோலுக்கு வருகிறது.

அடித்தோலில் கொழுப்புத் திசுப் படலம் உள்ளது. இது ஓர் அதிர்வு தாங்கியாகவும், வெப்பத்தைத் தாங்கும் படலமாகவும் செயல்படுகிறது. உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு இங்குதான் சேமிக்கப்படுகிறது.

பிற உயிரினங்களைப் பொறுத்தவரை, அவை வாழும் சூழலுக்கு ஏற்ப தோலின் தன்மை, நிறம் போன்றவை மாறுகின்றன. இதற்குப் பச்சோந்தி சிறந்த உதாரணம். பெரும்பாலான விலங்குகளின் தோலில் நிறைய முடி இருக்கிறது. பறவைகளுக்கு இறகுகளும் மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்குத் தோலில் எலும்போடு இணைந்த செதில்களும் இருக்கின்றன. பாம்பு, பல்லி போன்ற ஊர்வனவற்றுக்கு மெல்லிய செதில்களும் பல வண்ணத் தோலும் இருக்கின்றன. ஆமைக்கு ஓடு இருக்கிறது.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

SCROLL FOR NEXT